நடைவண்டி நாள்கள்-12

முதல் நாள் பள்ளிக்கூடத்தைப்போல முதல் நாள் கல்லூரியும் எனக்கு அச்சமே மூட்டியது. வீட்டை விட்டுப் பிரிந்து வாழப் போகிறேன் என்ற தயக்கமே அச்சத்தின் முதல் காரணம் என்றாலும், அந்தக் காரணத்தை யாரிடமும் காட்டிக
நடைவண்டி நாள்கள்-12
Updated on
3 min read

முதல் நாள் பள்ளிக்கூடத்தைப்போல முதல் நாள் கல்லூரியும் எனக்கு அச்சமே மூட்டியது. வீட்டை விட்டுப் பிரிந்து வாழப் போகிறேன் என்ற தயக்கமே அச்சத்தின் முதல் காரணம் என்றாலும், அந்தக் காரணத்தை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பினேன். முதல் நாள் கல்லூரி ஆசிரியர் பெற்றோர் சந்திப்போடு தொடங்கியது. வழக்கமான பல்லவிகள்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கூடுதல் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும் என்று ஆசிரியர்களும், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைக் கூடுதல் அன்போடு நடத்த வேண்டும் எனப் பெற்றோரும் மாறிமாறி உரையாற்றி முடிக்க, மதியம் ஆகிவிட்டது. உணவு முடித்து விடுதியில் தங்கிக் கொள்ளும் படிவங்களை வழங்கினார்கள்.

 அறைக்கு மூவர் எனும் கணக்கில் வெளியூர் மாணவர்கள் தங்கிக்கொள்ள அந்த விடுதி போதுமானதாகவே இருந்தது. குறைந்த அளவே பெண்கள் என்பதால் அவர்களுக்கு விடுதி ஏற்பாடுகள் இல்லை. தனித்தனியாக அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தங்கிக் கொள்ள வேண்டும். தன் படிப்பால்தான் தன் குடும்பமே தலைநிமிரப் போகிறது என்ற எண்ணமே என் அறையில் இருந்த காரை செüந்தர்ராஜனையும் திருச்சி ரகுபதியையும் என்னைவிட படிப்பில் அதிக கவனம் செலுத்த வைத்தது. முதல் வாரத்திலேயே கல்லூரி முழுக்க என் கவிதை ஆர்வச் செய்தி பரவியிருந்தது. அதனால் இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பெரும்பாலும் ராகிங்கில் என்னிடம் கவிதை சொல் என்றுதான் கேட்பார்கள். நான் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடி அவர்களை மகிழ்ச்சிப்படுத்த, இரண்டாவது சந்திப்பிலேயே அவர்களில் பலரும் நண்பர்களாகிவிட்டார்கள்.

 வெள்ளிக்கிழமை மதியம் வரைதான் கல்லூரி வாசம். பிறகு ஊருக்குக் கிளம்பிவிடுவேன். அங்கிருந்து இரண்டு மணிநேரப் பயணத்தில் தஞ்சைக்கு வந்துவிட முடியும் என்பதால் அம்மாவும் நான் வாரக் கடைசியில் வீட்டுக்கு வருவதையே விரும்பினாள். இரண்டு நாளும் வீட்டில் போடாத ஆட்டமெல்லாம் போட்டுவிட்டு மீண்டும் திங்கட்கிழமை அதிகாலை கிளம்பி அறந்தாங்கிக்குப் போய்ச்சேருவேன். என்னுடன் தஞ்சையில் இருந்து ராதாகிருஷ்ணனும், சீனிவாசனும் அதே கல்லூரியில் படித்தபடியால், பயணத்தில் மூவரும் நல்ல நண்பர்களாக இருக்க நேர்ந்தது. சீனிவாசனின் தந்தை கண்ணபிரான் என் அப்பாவின் சினேகிதர். நாங்கள் இணைந்தே கல்லூரிக்குப் போய் வருவது, அவருக்கும் அப்பாவுக்கும் ஒருமித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 என் படிப்பு காலத்தில் நான் தவறவிடக்கூடாத பெயர் ஒன்று இருக்கிறது. என் வாழ்நாளில் நான் தவறியும் அந்தப் பெயரை மறந்துவிடுவேனாயின் என் தேகத்தின் செல்கள் சிதிலமடையும். எளிமையான அன்புதான் எல்லாவற்றிலும் தனித்து நிற்பது. கல்யாணராமன் எளிமையான அன்பாளர். ஆனால் அவருடைய அன்பு எளிமையானதல்ல. பூச்சந்தை முருகன் கோயில் புரோகிதராகப் பணியாற்றி வந்த அவர், என் அப்பாவின் சொல்லுக்கு எப்போதும் மதிப்பு தருபவர். என்னைவிட ஆறேழு வயதே மூத்தவரான அவர், என்னையும் அவர் தம்பி போலவே நடத்துவார். கோயில் அர்ச்சனை தட்டில் விழும் சில்லறைக் காசுகளைத் திருநீர் வாடையோடு எடுத்துவந்து, என் கவிதை வெளிவரும் இதழ்களை வாங்கித் தருவார். கல்யாணராமன் பெரும்பாலும் திங்கட்கிழமை அதிகாலை வந்து என்னைக் கல்லூரிக்குப் பயணப்படுத்த உதவுவார். தன்னிடம் இருக்கும் திருநீறு ரொக்கத்தை வீட்டில் யாருக்கும் தெரியாமல் என் பாக்கெட்டில் திணிப்பார். வீட்டில் பயணத்திற்கு மட்டுமே பணம் தருவார்கள். இதர செலவுகளுக்கு கல்யாணராமனே கருணை புரிவார். திடீரென்று ஏதாவது ஒரு புதன்கிழமையோ, வியாழக்கிழமையோ மதியவாக்கில் கல்லூரிக்கும் வந்து அதிர்ச்சி தருவார். கைநிறைய பொட்டலங்களோடு அவர் வருவதால் விடுதி முழுக்க கல்யாணராமன் விசேஷ நபராக அறியப்படுவார். அவர் அன்பை சிலாகிக்கத் தொடங்கினால், எத்தனை அத்தியாயம் பிடிக்குமோ! அவர்களை எல்லாம் நான் இன்றுவரை இழக்கவில்லை. அவர்களும் என் சின்ன உயரம் குறித்த பெருமிதத்தை உள்ளூர ரசித்து வருகிறார்கள்.

 கல்லூரியில் எனக்குக் கிடைத்த இன்னொருவர் தேனி கணேசன். அப்போது "ஜூனியர் போஸ்டி'ல் அனுசன் என்ற பெயரில் நிறைய எழுதிக் கொண்டு வந்தார். நல்ல சுறுசுறுப்பான எழுத்து அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர் என்றாலும், முதலாம் ஆண்டு படித்த என்னுடனேயே அவருடைய பொழுதுகளை அதிகமும் செலவிடுவார்.

 பத்திரிகைத் துறையில் முக்கியமான இடத்தை எட்டவேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. அதற்கான உழைப்பில் சதா உழல்வார். மாணவர்களிடம் கருத்து கேட்டு, பல்வேறு விஷயங்களை பல பத்திகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்.அவர், அப்படி எழுதி எதேச்சையாக ஒருமுறை எனக்குப் பெண்வேடமிட்ட புகைப்படம் ஒன்று "சிறுகதைக் கதிரி'ல் வெளியாகிவிட்டது. கல்லூரியில் பயிலும் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து துப்பட்டாவால், வாய்மூடி சிரித்தது நல்ல நகைச்சுவை. அந்தச் செய்தியால் பின்வரும் காலங்களில் கல்லூரியில் உள்ள பெண்கள் அத்தனை பேருக்கும் நான் காதலனாகும் வாய்ப்பு ஏற்படாமலேயே போனது.

 தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதைப்போல எந்தக் கஷ்டமும் நம்மை வந்து தாக்கும்போதுதான் அதன் வீரியமும் விபரீதமும் விளங்குகின்றன. கையில் ஐம்பது ரூபாயோடு சம்பளம் கிட்டும்வரை வாழ்வை ஓட்ட வேண்டிய சிக்கலான நிலைமை. சரவணன் அகமும் முகமும் சுருங்கி ஊருக்கே போய்விடலாமா எனக் கேட்டான். இரண்டொரு நாளில் சம்பளம் வந்து விடுமென்று நாள்களைத் தள்ளிக்கொண்டே இருந்தேன். ஊருக்குப் போவதென்றால் கூட சம்பளம் வந்தால்தான் சாத்தியம். வேலை கிடைத்தும் சம்பளம் கிடைக்காத சங்கடத்தை என்னவென்று சொல்வது?

 வேலைமுடித்து விடுதிக்கு வந்ததும் வராததுமாக சரவணன் எனக்காக வைத்திருந்த செய்தியை உதிர்க்கத் தொடங்கினான். பாலாவும் பழனியாப்பிள்ளையும் உடன் இருந்தார்கள். ""நாளை உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி இருக்கிறது. மூன்றாவது பரிசு இரண்டாயிரம் ரூபாய். இரண்டாவது பரிசு மூவாயிரம் ரூபாய். முதல் பரிசு ஐயாயிரம் ரூபாய். தவிர ஆறுதல் பரிசாக ஐவருக்கு தலா ஐநூறு தருகிறார்கள்'' என்றான். சரவணன் அவ்விஷயத்தை என்னிடம் சொல்வதற்குக் காரணம் அப்போட்டியில் கலந்துகொண்டு பரிசை வெல்வதன் மூலம் பணக் கஷ்டம் ஓரளவு நீங்கும் என்பதால்தான்.

 (பயணம் தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com