நீலகிரி காவல்துறைக்கு சிவப்பு பெல்ட்!

மன்னராட்சி காலத்தில் ஒற்றர்கள் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வந்தனர். பெரும் குற்றங்கள் தடுக்கப்பட்டதாலும், எதிரிகளை அடையாளம் கண்டு கொண்டதாகவும் கெüடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. முகலாயர்கள
நீலகிரி காவல்துறைக்கு சிவப்பு பெல்ட்!
Updated on
2 min read

மன்னராட்சி காலத்தில் ஒற்றர்கள் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வந்தனர். பெரும் குற்றங்கள் தடுக்கப்பட்டதாலும், எதிரிகளை அடையாளம் கண்டு கொண்டதாகவும் கெüடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.

முகலாயர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் கொத்வால் என்ற முறையை கையாண்டனர். அது தற்போதைய காவல்துறையின் பழைய வடிவமாகும். இம்முறையின் மூலம் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், குற்றவாளிகளைப் பல சமயங்களில் தப்பிக்கவும் வழி வகை இருந்தது..

கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவில் தடம் பதித்த பின்னர் தனது எல்லையைப் பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி நியாயமான ஆட்சி செய்யும் வண்ணமும் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு வித்தியாசமான கண்காணிப்பு முறை தேவைப்பட்டது. இதன் முடிவாகத்தான் நமது நாட்டில் 1858ல் இந்திய போலீஸ் அமைப்பு உருவானது. 1861ம் ஆண்டில் இந்திய போலீஸ் சட்டம் இயற்றப்பட்டது. இந்திய போலீஸ் சட்டம் இங்கிலாந்திலுள்ள காமன்வெல்த் அமைப்பால் இயற்றப்பட்டதாகும். கடந்த ஆண்டுகளில் காவல் துறை சந்தித்த சாதனைகளும், சோதனைகளும் கணக்கிலடங்காதவை எனலாம்.

 இயற்கையின் சீற்றம், பெண்களுக்கு அநீதி, கொலை, கொள்ளை, மதக்கலவரம், இனக்கலவரம், பயங்கரவாதம், தீவிரவாதம் எனப் பல்வேறு நெருக்கடியான கட்டங்களில் நமது ராணுவத்திற்கு நிகராக பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு துறைதான் இந்திய காவல் துறை. இந்திய ராணுவத்திற்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் உயிர் தியாகங்களை செய்தவர்களும் காவல்துறையினரே. நாட்டிலேயே பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிக அளவில் போலீஸôர் உயிரிழந்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 21.10.1960ல் இமயமலை பகுதிகளில் இந்திய போலீஸôர் காவல் மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டபோது, 26 போலீசார் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் துயர நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதியன்று உயிர்நீத்த போலீஸôரின் நினைவு தினமாக நாடு முழுதும் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தகைய தகவல்களைத் திரட்டி வைத்துள்ள தபால்துறையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரியான என்.ஹரிகரன் நம்மிடம் தெரிவித்ததோடு, அந்தத் தகவல்களையும தினமணி வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார். அவரிடமிருந்த பெறப்பட்ட தகவல்கள் வருமாறு:

நமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்திய காவல் துறையை சிறப்பு செய்யும் வகையில் அதன் தலைமைப் பொறுப்புகளில் துணிச்சலும், திறமையும் மிக்க அதிகாரிகளை நேரடியாக நியமிக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் விருப்பம் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கட்டுக்கோப்புடனும், ஒழுக்கம் நிறைந்ததாகவும், திறமை கொண்டதாகவும், நவீன இந்தியாவை உருவாக்கவும், நமது மக்களின் உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் காவல்துறை வளர்ச்சி அடைய வேண்டுமென அவர் விரும்பினார்.

அவரது முயற்சியால் இந்திய அரசு 1949ல் இந்திய காவல் பணி எனப்படும் உயர் பதவியை காவல்துறையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு முன் உயர் பதவியிலிருப்பவர் இந்திய போலீஸ்(ஐ.ட.) என மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இத்துறையில் வீரம் நிறைந்த செயல்களுக்காக காவலர் முதல் காவல்துறைத் தலைவர் வரை மத்திய, மாநில அரசுகளால் குடியரசு தலைவர் பதக்கம், முதல்வர் விருது, அண்ணா விருது, போலீஸ் மெடல், மகசாசே விருது போன்ற பல்வேறு விருதுகளால் கவுரவிக்கப்படுகின்றனர்.

இத்துறையில் தற்போது பெண்களும் அதிகளவில் பணியாற்றுகின்றனர். கேரளத்திலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1938ம் ஆண்டில்தான் முதல் பெண் போலீஸ் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 1973ம் ஆண்டு சென்னையில் பெண் போலீஸôர்

நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் முதல் பெண் போலீஸ் உயர் அதிகாரியான கிரண் பேடியும் மகசாசே விருது பெற்ற பெண் போலீஸ் உயரதிகாரியாவார். இந்திய காவல்துறை சேவையின் பொன்விழா 1999ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக மத்திய அரசு தபால் தலையும் வெளியிட்டது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் விரும்பி வாழ்ந்த முக்கிய இடமான நீலகிரி மாவட்டத்தில் 1820ம் ஆண்டு முதல் 1855ம் ஆண்டு வரை ராணுவ காவல்துறை இருந்து வந்ததாகவும், அதன்பின்னரே மாவட்ட காவல்துறை உருவாக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் முதல் காவல் நிலையம் 1853ம் ஆண்டில் வெலிங்டன் பகுதியில் தொடங்கப்பட்டது. 1905ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்ட காவல்துறை கோவை மாவட்டத்துடன் இணைந்த அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில்தான் இம்மாவட்டமும் இருந்துள்ளது. பின்னர் நீலகிரிக்கென தனியாக 1906ம் ஆண்டில் முதல் காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த சி.ஹெச்.பெர்னாய்ஸ் இப்பதவியில் முதன்முதலாக பொறுப்பேற்றார்.

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்கு நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே நீல நிற உல்லன் சீருடைகள் தற்போதும் நடைமுறையில் உள்ளன. இதை நீங்கள் சென்னையில் நடைபெறும் சுதந்திர மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்புகளில் பார்த்திருக்கலாம். அதேபோல, நீலகிரி மாவட்ட காவல்துறையினருக்கு மட்டும் அரசு முத்திரையுடன் கூடிய சிவப்பு நிற பெல்ட்டும், காலுறைகளுக்கு மேல் பட்டீஸ் எனப்படும் சுற்றுத்துணியும், கனமான பூட்ஸ்களும் வழங்கப்பட்டிருந்தன. பட்டீஸ்கள் காவலர்களின் கெண்டைக் கால்களை நாய் மற்றும் பாம்புக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்காக வழங்கப்பட்டதாகும்.

இந்நிலையில் அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நாடு முழுதும், இங்கிலாந்தின் அரச குடும்ப நாளை காரனேசன் டே என்ற பெயரில் சிறப்பு தினமாக அனுசரித்தனர். ஆனால், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவ்விழா முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது இந்திய அரசு அலுவலகங்களிலும் இங்கிலாந்தின் கொடி ஏற்றப்படுவது வழக்கமாக இருந்தது.

பொதுவாக காவல்துறை என்றாலே விலகிச் செல்லும் மக்களுக்கு மத்தியில், காவல்துறை தொடர்பான இத்தகவல்கள் பெரும் வியப்பை ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com