கடல் விலாங்கு மீன்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் கடல் விலாங்கு மீன்களின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது.. ""
கடல் விலாங்கு மீன்
Published on
Updated on
2 min read

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் கடல் விலாங்கு மீன்களின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..

""மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகமாக வாழும் பல கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் விலாங்கு மீன். சுவை மிக்க மீன் வகையாக இருப்பதால் உலக அளவில் இதனை விரும்பி வேட்டையாடுகின்றனர்.

ஆனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இவற்றைப் பிடிப்பதில்லை என்பதால் பவளப்பாறைகளின் இடுக்குகளில் இவை கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.

ஆங்குயில் பார்ம்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இவ்வினங்களில் சுமார் 800 வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. குளங்களில் வாழும் விலாங்கு மீன்களைப் போலவே கடலில் வாழும் விலாங்கு மீன்களும் தோற்றமளிக்கின்றன. கடலில் வாழும் இவ்வினமோ சுமார் 5 செ.மீ முதல் 4 மீட்டர் வரை நீண்டதாகவும் பாம்புகளைப் போல உருவத்தை உடையதாகவும் இருக்கின்றன.

உருவத்தில் மிகவும் பெரியதாகவுள்ள முரே விலாங்கு மீனின் எடை சுமார் 25 கிலோ வரைகூட இருக்கும். இதன் முன் பகுதியிலும் வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் இணைந்து ரிப்பன் போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும்.

இத்துடுப்புகளே விலாங்கு மீன்கள் இடம் பெயரவும் உதவியாக இருக்கின்றன.

ஆழமற்ற கடல் பகுதிகள், மணல், சகதி நிறைந்த இடங்கள், பாறைகள் மற்றும் பவளப்பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. இவற்றில் சில வகைகள் மட்டும் கடலில் 13ஆயிரம் அடி வரையுள்ள ஆழத்திலும் வாழ்கின்றன. ஆங்குலிடே என்ற குடும்பத்தை சேர்ந்த விலாங்கு மீன் நல்ல தண்ணீரிலும் வாழும் தன்மையுடையது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கடலில் இருந்து ஆற்றுக்கு வந்து குஞ்சு பொரித்தவுடன் மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும்.

இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் கடலின் மேற்புறத்தில் மிதந்து கொண்டே பனித்துளிகளையும் கடல் நுரையையும் சாப்பிடும். பின்னர் கண்ணாடி போன்ற புழுவாக மாறி துள்ளிக் குதிக்கவும் நீந்தவும் கற்றுக் கொள்கின்றன. பின்னர் படிப்படியாக உருமாறி தாயைப் போலாகியவுடன் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, நியுசிலாந்து, இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த விலாங்கு மீன்களைக் கொண்டு சுவை மிக்க உணவுப் பதார்த்தங்கள் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் சுவைக்காகவே சில நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் சுவைக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் அழிந்து வரும் உயிரின வகைகளில் சிவப்புப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

சிறுத்தை போன்ற புள்ளிகளையுடைய விலாங்கு மீன், முரே விலாங்கு மீன் ஆகியன கடலுக்குள் நீந்தி செல்லும் ஸ்கூபா டைவர்களை பயமுறுத்தும் மீன்களாகவும் இருக்கின்றன. இம்மீன்கள் நீளமாக இருப்பதால் உடலை வளைத்துக் கொண்டு குழிகளிலும், பாறைகளிலும் மறைந்திருந்தாலும் தலையை மட்டும் வெளியில் நீட்டி வாயை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com