வேதபுரம் எது தெரியுமா?

புதுச்சேரியை மகாகவி பாரதியார் "வேதபுரம்' என்றே குறிப்பிடுகிறார். அந்த ஊருக்கு இந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தது அங்கிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம்தான். இது 1746-இல் பிரெஞ்ச் கவர்னர் டூப்ளே என்பவரின் மனைவ
வேதபுரம் எது தெரியுமா?
Published on
Updated on
2 min read

புதுச்சேரியை மகாகவி பாரதியார் "வேதபுரம்' என்றே குறிப்பிடுகிறார். அந்த ஊருக்கு இந்தப் பெயர் வரக் காரணமாக இருந்தது அங்கிருந்த வேதபுரீஸ்வரர் ஆலயம்தான். இது 1746-இல் பிரெஞ்ச் கவர்னர் டூப்ளே என்பவரின் மனைவியின் தூண்டுதலால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த

விவரங்களை அப்போது பிரெஞ்ச் கவர்னரிடம் துபாஷியாக வேலை பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் தனது

நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.

புதுவையிலுள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடித்துவிடும் எண்ணம் பிரெஞ்சு அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் கவர்னர் டூப்ளேவும் அவர் மனைவியும் இதில் மிகவும் அக்கறை கொண்டு நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். அவர்களுடைய இந்த முயற்சிக்கு உள்ளூர்க்காரர்கள் சிலரும் ஒத்துழைப்பு நல்கி வந்தனர். அதற்கு முன்பு ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கோயிலை இடிக்கும் எண்ணம் இருந்தபோதும், அப்போதெல்லாம் இங்கிருந்த பிரெஞ்சு அரசுப் பிரதிநிதிகள் அந்தக் காரியத்தைச் செய்யத் துணியவில்லை. அப்படி ஏதாவது செய்துவிட்டால், "இது தமிழ் ராஜ்யம், இந்தக் கோயிலுக்கு ஏதேனும் ஈனம் வந்தால் நமக்கு அபகீர்த்தி உண்டாகும். தங்கள் வர்த்தகம் பாழாகிவிடும்...' என்றெல்லாம் எண்ணி அப்படி எதையும் செய்யாமல் இருந்தனர்.

பிரான்சு நாட்டின் மன்னர் நம் நாட்டில், நம் மண்ணில் இருந்த பழம்பெரும் இந்துக் கோயிலைத் தகர்க்க உத்தரவில் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்திருந்தும், இங்கிருந்த கவர்னர்கள் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கி வந்தனர். ஒருமுறை ருத்ரோத்காரி வருஷம் சித்திரை-வைகாசி மாதங்களில் கோயிலை, முத்தியாப் பிள்ளை என்பவரைக் கொண்டு இடிக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த ஆணையை நிறைவேற்ற முத்தியாப் பிள்ளை என்பவர் மறுத்ததால், அவரைக் கட்டிவைத்து காதுகளை அறுப்பதாகவும் தூக்கில் தொங்கவிட்டுவிடுவதாகவும் மிரட்டிப் பார்த்தனர். இந்த அச்சுறுத்தலுக்குப் பயந்து அந்த முத்தியாப் பிள்ளை தன் குடும்பத்தாரைக் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டாராம்.

1748-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதியன்று தனது நாட்குறிப்பில் ஆனந்தரங்கம் பிள்ளை எழுதும் செய்தி:

"இன்றைய நாள் காலையில் நிகழ்ந்த விபரீதம் என்னவென்றால்' என்ற முன்னறிவிப்போடு எழுதுகிறார். பிரெஞ்சு அதிகாரிகள் கெர்போ, பரதி முதலியோர் ஏராளமான இராணுவ வீரர்களைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு கொல்லத்துக்காரர்கள், கூலிக்காரர்கள் என்று சுமார் இருநூறு ஆட்கள் துணைகொண்டு வேதபுரீஸ்வரர் ஆலயத்தை இடிக்கத் தொடங்கினார்கள். முதலில் கோயிலின் தென்புற மதிலையும், மடப்பள்ளியையும் இடித்தனர். இந்தச் செய்தி ஊர் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. உடனே உள்ளூர் வெள்ளாளர், கைக்கோள அகமுடைய முதலிகள், செட்டிமார்கள், பிள்ளைகள், குடியானவர்கள், ஆலய சாத்தாணிகள் ஆகியோர் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் சென்று நடைபெறும் அக்கிரமம் பற்றி முறையிட்டனர். பலர் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுத் தாங்கள் ஊரைவிட்டுப் போய்விடப் போவதாகவும், சிலர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிடுவதாகவும் முறையிட்டனர். ஆளுனரிடம் போய் முறையிடப் போவதாகவும் சொன்னார்கள்.

மக்களுடைய முறையீட்டுக்குப் பதிலளித்து ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள் சொன்னார், ""உங்களிடம் இப்போது இருக்கும் ஒற்றுமை முன்னமேயே இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சி நடந்திருக்காதே. உங்களில் சிலர் பெரிய துபாசித்தனம் பெறுவதற்காகவும், சாவடி துபாசித்தனம் பெறுவதற்காகவும் கோயிலை இடிக்க ரகசியமாக ஒப்புக் கொள்ளவில்லையா? அதனால்தானே இன்றைக்கு இந்த விபரீதம் நடந்திருக்கிறது'' என்று சொல்லி அவர்களைக் கடிந்து கொண்

டிருக்கிறார்.

கவர்னரும், கவுன்சிலும் இந்த முடிவை எடுத்திருப்பதால் இதில் நாம் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. ஆகையால் இயன்றவரை வாகனங்கள், சிலைகள் முதலியவற்றை பத்திரமாக எடுத்துச் சென்று காளத்தீஸ்வரர் கோயிலில் கொண்டு போய் வைத்துவிடுங்கள். இப்படி இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோயிலின் அர்த்த மண்டபத்தையும் மகா மண்டபத்தையும் இடித்துக் கொண்டிருப்பதாகச் செய்தி வந்து சேர்ந்தது.

""பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுதமுடியாது. வாயினாலும் சொல்லமுடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. துரைக்கும் துரை பெண்சாதிக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்'' (தொகுதி 5. பக்கம் 293)

இப்படிக் குறிப்பிட்ட ஆனந்தரங்கம் பிள்ளை கோவிலை இடித்தவர்கள் அதற்குண்டான பலனை அனுபவிப்பார்கள் என்று நம்பினார். அதன்படியே 11-09-1748ஆம் நாள் ஆங்கிலேயருடன் நடந்த சண்டையில் கோவிலை இடிப்பதில் முனைப்புடன் இருந்த பரதி என்பாருக்கு தலையில் மரணகாயம் ஏற்பட்டது என்பதையும் ஆனந்தரங்கம் பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்த அதேநேரத்தில் அருகில் இருந்த மசூதி ஒன்றையும் இடிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மசூதியை இடிக்கத் தொடங்கியதும், அப்துல்ரகுமான் ஆளுனரிடம் சென்று மசூதியை இடித்தால் ஒரு சிப்பாய்கூட உயிருடன் இருக்கமுடியாது. இடிக்கிறவர்கள் போரிலே விழுந்துசெத்துவிடுவார்கள் என்று சொன்னார். ஆளுனரும் மசூதியை இடிப்பதைக் கைவிட்டுவிட்டார். இதன்பிறகு அப்துல் ரகுமான் ஆனந்தரங்கம் பிள்ளையிடம் வந்து கூறிய

செய்தியாவது:

""பகைவன் வந்து நம் பட்டணத்தை வாங்குவேன் என்று இறங்கியிருக்கும் வேளையில் சகல சனங்களையும் சந்தோஷமாய் வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்துக் காரியம் கொள்ளுகிறதை விட்டுவிட்டுப் பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரவர் மனதை முசே துய்ப்ளே முறித்துப் போடுகிறார். இங்கிலீஷ்காரனே செயிச்சால் கூட நல்லது என்று சனங்கள் நினைக்கும்படி பண்ணுகிறார். தமிழர் கோயிலை இடித்து இப்படிப் பட்டணம் நடுங்கப் பண்ணுகிறது துரைக்கு அழகா?'' (தொகுதி 5. பக். 292)

அன்னியர்கள் இங்கு வந்ததால்தான் பல நன்மைகள் கிட்டியது என்றும் நாகரிகம் பெருகியது என்றும் பொய்யான கற்பனையில் மிதக்கும் நம்மவர்கள் சிலர், இதுபோன்ற தகவல்களையும் தெரிந்துகொள்வது

நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com