சினி மினி

சமீப காலமாக விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்த சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு - சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள "கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருந்தார்.
சினி மினி

சமீப காலமாக விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்த சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு - சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ள "கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருந்தார். "என்ன திடீரென்று விழாவுக்கு' என்று கேட்டபோது... ""நான் கலந்துகொள்ளும் விழாக்களில் சில உண்மைகளைப் பேசிவிடுகிறேன். உடனே என்னை திமிர் பிடித்தவன் என கூறுகிறார்கள். உண்மையைச் சொன்னால் திமிர் பிடித்தவனா? இந்தப் பட விழாவுக்கு வந்ததற்குக் காரணம் சந்தானத்தின் நட்புதான்'' என்றார். தான் இயக்கிய "மன்மதன்' படத்தின் மூலம்தான் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சிம்பு.

1958-ம் ஆண்டிலிருந்து இன்று வரை தன்னுடைய எழுத்தில் இளமையைக் குன்றவிடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வாலி, உலகிலேயே அதிகமாகத் திரைப் பாடல்களை எழுதிய பெருமைக்குரியவர். ஒன்றும் பெறாத விஷயங்களுக்குக் கூட ஸ்டோரி டிஸ்கஷன், பாடல் உருவாக்கம் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு "ட்ரிப்' அடிக்கும் சினிமாக்காரர்கள் மத்தியில் வாலி வித்தியாசமானவர். இதுவரை இந்தியாவைத் தாண்டி எந்த ஒரு வெளிநாட்டுக்கும் பயணம் செய்ததில்லை. அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் சென்னையிலிருந்து கேரளத்துக்குக் குடியேறிவிட்டார் "காதல்' சந்தியா. அங்குள்ள முக்கிய நகரங்களில் ஆறுக்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்களைத் தொடங்கியிருக்கிறார். கேரளத்தின் பாரம்பரிய முறைப்படி இயங்கும் இந்த பியூட்டி பார்லர்களில் ஏராளமான இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளார். இவற்றின் நிர்வாகப் பொறுப்பை தன்னுடைய தாயாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

"ரோஜாகூட்டம்', "டிஷ்யும்', "பூ' படங்களை இயக்கிய சசியின் "555' படத்தில் சிக்ஸ் பேக் உடலமைப்புடன் தோன்றுகிறார் படத்தின் நாயகனான பரத். "சிக்ஸ் பேக்'குக்காக பரத் மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சியை தனி விடியோ ஆல்பமாக எடுத்து படத்தின் விளம்பரத்துக்கு இதைப் பயன்படுத்தவுள்ளார் சசி.

இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்டெல் நிறுவனம் தங்களுடைய இண்டர்நெட் சேவையில் 2012-ம் ஆண்டு அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட நடிகர்கள், நடிகைகள், பாடல்கள் குறித்து ஒரு சர்வே நடத்தியது. அதில் இந்தியாவிலேயே அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நம்மூர் த்ரிஷா. நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். அதே போல "3' படத்தில் இடம்பெற்ற "ஒய் திஸ் கொலவெறி...' தமிழ்ப் பாடல் (?) இந்தியாவிலேயே அதிகம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட பெருமையைப் பெற்றுள்ளது.

"நான் ஈ' படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்ட இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் தூது விட்டு வருகின்றனர். ஆனால் தெலுங்கு ஹீரோ பிரபாஸை வைத்து தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார். பலர் ராஜமெளலிக்காகக் காத்திருக்க அவரோ அமீர்கானுக்காகக் காத்திருக்கிறார். ""அமீர்கானை வைத்து படம் இயக்குவதுதான் என் கனவு. அவருக்கான கதையையும் சொல்லிவிட்டேன். காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்'' என்கிறார் ராஜமெளலி.

பரவலான பாராட்டுகளைப் பெற்ற "வெங்காயம்' படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், அடுத்ததாக "ஒன்' என்ற ஆங்கிலப் படத்தை இயக்கி வருகிறார். இதில் புதுமை என்னவென்றால் கதை எழுதுவதிலிருந்து நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் வரை அனைத்துப் பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் முந்நூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களிலும் இவரே நடிக்கிறார். படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. படத்தின் ட்ரெயிலர் அமெரிக்காவில் வெளியிடப்படுகிறது.

தெலுங்கில் வாய்ப்பு குறைந்ததால் கன்னடப் படவுலகில் கவனம் செலுத்தி வாய்ப்புகளைப் பெற்று வந்தார் பிரியாமணி. இப்போது தெலுங்கின் பிரபல நடிகைகள் அனைவரும் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு மும்பைப் பக்கம் முகாமிட்டிருப்பதால் மீண்டும் ஹைதராபாத்தில் தங்கி தெலுங்குப் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அதன் பலனாக இரண்டு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com