மகாராஜா

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஆர்மேனியர்கள்
Published on
Updated on
1 min read

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஆர்மேனியர்கள் குடியேறி வசித்ததன் அடையாளமாக பாரிமுனையில் ஆர்மேனியன் சர்ச்சும் ஆர்மேனியன் தெருவும் இருக்கின்றன. ஆர்மேனியா என்பது ஐரோப்பாவில் ஒரு சிறிய நாடு. சோவியத்திலும் அங்கம் வகித்த பகுதி இது. அங்கு வாழும் மக்கள் கிறிஸ்துவர்கள். தரைவழியாக பல நாடுகளுக்குச் சென்று வாணிகம் புரிந்துவந்தார்கள். ஏனெனில் அவர்கள் நாட்டையொட்டி கடல் கிடையாது.

ஆர்மேனியர்கள் அடிப்படையில் நேர்மையானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், நாணயமானவர்கள் என்று சென்ற நாடுகளில் பெயரெடுத்திருந்தார்கள். சென்னையில் அவர்கள் நவரத்தினங்கள், முத்து போன்றவற்றை வாங்கி லண்டன், பாரீசில் விற்று பெரும் பொருளீட்டினார்கள். அதில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.

ஆர்மேனியர்களில் சிறந்த வணிகர் கோஜா பெட்ரஸ் உஸ்கான். சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடையே அடையாற்றில் முதன் முதலாகத் தரைப்பாலம் கட்டினார். பாலம் கட்ட சொந்தப் பணத்தில் இருந்து 30 ஆயிரம் வராகனும் அதைப் பராமரிக்க வைப்பு நிதியாக 15 ஆயிரம் வராகனும் கொடுத்தார். உஸ்கான் கட்டிய தரைப்பாலம் மர்மலாங் பாலம் என்றழைக்கப்பட்டது. மர்மலாங் பாலம் பற்றியும் அதைக் கட்டிய கோஜா பெட்ரஸ் உஸ்கான் பற்றியும் துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுதி இருக்கிறார். உஸ்கானை மகாராஜா என்று புகழ்ந்து இருக்கிறார்.

1746-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சு அரசு சென்னை மீது படையெடுத்தது. கடற்படை தளபதி லபெர்த்தனே புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினார். ஆங்கிலேய கவர்னர் சரணடைந்தார். கோட்டையில் ஒரு சிறிய அதிகாரியாக இருந்த ராபர்ட் கிளைவ் கடல் வழியாகத் தப்பி கடலூருக்கு ஓடினார். சென்னை ராஜதானி பிரெஞ்சுக்காரர்கள் வசமாகியது.

சென்னையில் இருந்த வணிகர்கள் என்னவாகுமோ என்று பயந்து போய் டச்சு காலனியாக இருந்த தரங்கம்பாடிக்குச் சென்றுவிட்டார்கள். எடுத்துப் போக முடிந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தரங்கம்பாடியில் தஞ்சம் புகுந்தவர்களில் ஒருவர் உஸ்கான்.

புதுச்சேரியில் பிரெஞ்சு இந்திய கவர்னராக இருந்த துய்ப்ளேக்ஸ், உஸ்கான் திறமை, நேர்மை ஆகியவற்றைப் பற்றி அறிந்திருந்தார். எனவே அவர் புதுச்சேரிக்கு வந்து தங்கி வாணிபம் புரியவேண்டுமென கருதினார். அதனால் பிரெஞ்சு காலனி வளமாகுமென எண்ணி உஸ்கானுக்கு கடிதம் எழுதினார்.

அதற்குப் பதிலாக உஸ்கான் எழுதினார், ""ஆர்மேனியன் அடிப்படையில் நேர்மையானவன். அவன் துரோகம் செய்யமாட்டான். நான் ஈட்டியிருக்கும் பொருள் எல்லாம் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து வாணிகம் புரிந்ததால் கிடைத்ததுதான். அவற்றை நீங்கள் பறிமுதல் செய்து கொள்ளலாம். என் சொத்துக்களை விற்று அதில் வரும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தால் நல்ல காரியம்!'' என்று எழுதி பிரெஞ்சு கவர்னர் அழைப்பை நிராகரித்துவிட்டார்.

கோஜா பெட்ரஸ் உஸ்கான் 1751-ஆம் ஆண்டில் காலமானார். சென்னையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com