
தமிழர்களின் சடுகுடு விளையாட்டு போட்டி, இன்று கபடி என்ற பெயரில் உலகெங்கும் விளையாடப்படுகிறது. கபடி விளையாடுவதற்கு சிறந்த உடல்கட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுக்கும் திறன், மூச்சுப்பிடிக்கும் ஆற்றல், மற்றவரின் பிடியில் இருந்து தப்பிக்க மீனை போல தாவும் பேராற்றல் அவசியம்.
இதனால், கபடியை ஆண்களுக்கான விளையாட்டாகவே பலரும் கருதிவந்தனர். நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று எல்லாத் துறைகளிலும் நிரூபித்துவரும் பெண்கள், கபடியையும் விட்டுவைக்கவில்லை. ஆண்களே அசந்து போகும் அளவுக்கு பெண்கள் கபடியில் கலக்கி வருகிறார்கள். துடிப்பும், துள்ளலும் மிகுந்த கபடி ஆட்டத்தில் ஆர்வம் கொண்ட மம்தா பூஜாரி, இந்திய மகளிர் கபடி அணியின் கேப்டன்.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், ஹெர்முண்டே கிராமத்தின் கெலமர்ஜே கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி போஜ பூஜாரி - கிட்டி பூஜாரி தம்பதியின் புதல்வி மம்தா பூஜாரி. இளமையில் கல் என்ற பொன்மொழியை இளமையில் விளையாடு என்ற புதுமொழியாக்கியவர் மம்தா பூஜாரி. இளமையில் கைப்பந்தாட்டத்தில் நாட்டம் கொண்டு, பிறகு கபடியால் ஈர்க்கப்பட்ட மம்தா பூஜாரி, 2012-ல் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பெருமைக்குரிய கேப்டனாக சாதனைப் படைத்து வருகிறார்.
இந்த உயரத்தை எட்டுவது மம்தாவுக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியிருக்கும் கபடி வீராங்கனை மம்தாவின் நெடுநாளைய ஆசை, ஒலிம்பிக் போட்டியில் விளையாடி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்றெடுக்க வேண்டுமென்பதுதான்.
கபடி விளையாட்டின் மகுடத்தில் தங்கத்தாரகையாக ஒளிரும் மம்தா பூஜாரி, தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:
"எனக்கு சிறுவயது முதலே விளையாட்டு என்றால் உயிர். படிப்பில் ஆர்வம் குறைவுதான். தேர்வில் ஒருமுறை தோல்வியடைந்திருக்கிறேன். ஆனால், விளையாட்டில் மட்டும் என்றைக்குமே ஆர்வம் குறைந்ததில்லை. ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், முழுநேர விளையாட்டு வீராங்கனையாக மிளிர வேண்டுமென்ற ஆவல் இருந்ததில்லை. என் வீட்டில் நிலவிய வறுமையைப் போக்குவதற்காக நானும், அண்ணனும் பால் வியாபாரம் செய்வோம். தினமும் 15 கி.மீ. நடந்து சென்று ஹெர்முண்டே கிராமத்தில் உள்ள பால் பண்ணையில் பாலை விற்பனை செய்துவிட்டு வருவோம். என் பெற்றோருக்கு விவசாயம் தான் முழுநேரத் தொழில். குடியிருக்க வீடுகூட இருந்திருக்கவில்லை. பால் விற்பனையை முடித்து கொண்டு பள்ளிக்கு செல்வேன். நான் படிப்பில் ஆர்வம் செலுத்தாவிட்டாலும் அதைப் பெற்றோர்கள் பொருட்டாகக் கருதியதில்லை. மாறாக, விளையாட்டில் எனக்கிருந்த ஆர்வத்திற்கு எப்போதும் ஊக்கம் அளித்து வந்துள்ளனர்.
2-ம் ஆண்டு பியூசி படிக்கும் வரை கைப்பந்தாட்டத்தில் தான் ஆர்வம் காட்டினேன். கைப்பந்தாட்டத்தில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். முனியாலு கல்லூரியில் 2-ம் ஆண்டு பியூசி படித்து கொண்டிருந்தபோது, உடல்பயிற்சி இயக்குநர் ராமகிருஷ்ணஹெக்டே, பயிற்சியாளர் சுவர்ணா ரமேஷ் இருவரும் கபடி விளையாடும்படி என்னை ஊக்கப்
படுத்தினர்.
கபடிக்குத் தேவையான குணாம்சங்கள் என்னிடம் இருப்பதால் கபடியில் சிறந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்று உற்சாகப்படுத்தினர். பயிற்சியாளரின் வார்த்தையை நம்பி கபடியில் தீவிர ஆர்வம் செலுத்தினேன். என் முயற்சிக்கு கோகர்ணதேஸ்வரா கல்லூரி உடற்பயிற்சி இயக்குநர் புருஷோத்தம் பூஜாரியும் உறுதுணையாக இருந்து, கபடியில் சிறந்து விளங்க வழிகாட்டினார். ஒருவேளை கபடியை கற்க தவறியிருந்தால், கைப்பந்தாட்டத்தில் உச்சநிலையை அடைந்திருப்பேன்.
இந்தியாவில் மகளிர் கபடிப் போட்டிக்கு போதுமான ஊக்கம் இல்லாமல் இருந்தது. அண்மைகாலமாக இந்த நிலை மாறிவருகிறது. ஒருகாலத்தில் சகஜமாக விளையாட முடிந்த கபடிப் போட்டியில் இன்று கடும் உழைப்பு தேவைப்படுகிறது. போட்டி சவாலானதாக இருந்தால் மட்டுமே நம்மை மேம்படுத்திக் கொள்ளமுடியும். இதனால், கடினமாக உழைத்து விளையாடுவதை எப்போதும் சுமையாகக் கருதியதில்லை. கபடி விளையாட்டின் வளர்ச்சியால் உலகளவில் என் தாய் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்பதே என் நோக்கம்.
2006-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. அதில் அங்கமாக இருந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். என் தலைமையிலான இந்திய அணி, 2010-ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது.
இதைத்தொடர்ந்து, 2012 மார்ச் 4-ம் தேதி பாட்னா நகரில் நடைபெற்ற போட்டியில் ஈரான் நாட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றெடுத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். ஒலிம்பிக் போட்டியில் கபடி விளையாட அனுமதிக்க வேண்டும். அதில் இந்திய அணியின் கேப்டனாகத் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதே என் இலக்கு. இந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.
கபடி போன்ற விளையாட்டுக்கு இந்தியாவில் அரசுகள் போதுமான ஊக்கமளிப்பதில்லை. இதனால், கபடி விளையாட அதிகளவில் பெண்கள் முன்வருவதில்லை.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிர மாநிலத்தின் 3 வீராங்கனைகளுக்கு அந்த மாநில அரசு தலா ஒரு கோடி ரூபாய் பரிசளித்துள்ளது.
இந்த ஊக்கம் நாடு முழுவதும் கிடைக்க வேண்டும். இந்திய ரயில்வே, கர்நாடகக் காவல் துறையைவிட்டால் கர்நாடகத்தில் கபடி அணிகளே கிடையாது. இப்படியிருந்தால், கபடியில் யார் ஆர்வம் காட்டுவார்கள்.
கர்நாடகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனைகளான தேஜஸ்வினி, ஷோஷிபா, நான் ஆகியோர் ரயில்வே துறையில் பணியாற்றுகிறோம். எங்களை போன்ற வீராங்கனைகளை ஊக்குவிக்கப் பல நிறுவனங்கள் முன்வந்தால், கிராமப்புற பெண்களுக்கு கபடி பயிற்சி அளிக்க விரும்புகிறேன்.
விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைக்கும் திறன் கிராமப்புற பெண்களிடம் காணப்படுகிறது. ஆனால், அதை அங்கீகரித்து நிதியுதவி அளிக்க பலரும் முன்வர வேண்டும்.
வெகுவிரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று என் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். திருமணத்திற்கு பிறகு கபடி விளையாட்டை தொடர்வேனா? என்பது தெரியவில்லை. எனினும், கிராமப் பெண்களுக்கு கபடி பயிற்சியாளராகப் பணியாற்ற விரும்புகிறேன்.
என் பெற்றோரின் விருப்பப்படி அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற ஆசையாக உள்ளது. என் தந்தை போஜ பூஜாரி,தாய் கிட்டி பூஜாரி, அண்ணன் விஸ்வநாத், தங்கை மதுராவின் வழிகாட்டுதல், ஊக்கம், ஒத்துழைப்பு, உறுதுணை இல்லாவிட்டால் கபடியில் நான் சாதனை செய்திருக்க முடியாது.
வறுமையிலும் என் விளையாட்டு தாகத்திற்கு தீனிபோட்டது என் பெற்றோர். என் பெற்றோரைப் போல பலரும் தங்கள் குழந்தைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்தினால், பிற நாடுகளை போல விளையாட்டுத் துறையிலும் இந்தியா ஒளிரும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மம்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.