காட்டை உருவாக்கிய தனிமரம்!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமவாசி ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை "முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1970-ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவு பாம்புகள் அடித்துவரப்பட்டிருக்கின்றன.
காட்டை உருவாக்கிய தனிமரம்!
Updated on
2 min read

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமவாசி ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை "முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1970-ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவு பாம்புகள் அடித்துவரப்பட்டிருக்கின்றன. வெள்ளம் வடிந்தபின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. "மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை..' என்பதை ஜாதவ் புரிந்துகொண்டபோது அவருக்கு வயது 16!

இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது. மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம். முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒருவரும் உதவி செய்யாதபோது தனி நபராக செயலில் இறங்கிவிட்டார் ஜாதவ்.

1980-ஆம் ஆண்டில் அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் "சமூகக் காடுகள் வளர்ப்பு' திட்டத்தின்படி வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, ஜாதவ் மட்டும் மரக்கன்றுகளை பராமரிக்க அனுமதி கேட்டு அங்கேயே தங்கிவிட்டார். பின்னர் வனத்துறையினரும் மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர்.

ஏறக்குறைய 200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த ஜாதவ், பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார். ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை. இதற்காக தனது கிராமத்திலிருந்து சிவப்பு எறும்புகளைச் சேகரித்து எடுத்துவந்து மணல் திட்டில் விட்டிருக்கிறார் ஜாதவ். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை.

வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. அந்த இடத்தில் பல வகையான செடி, கொடி வகைகளையும், பலவிதமான மரக் கன்றுகளையும் நட்டிருக்கிறார். இப்படி ஒன்று.... இரண்டு ஆண்டுகள் அல்ல, 30 ஆண்டுகள்!

2008-ஆம் ஆண்டு வரை விளம்பர வெளிச்சம் எதுவுமில்லாமல் ஒருகாடு பரப்பளவிலும் உயரத்திலும் அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது. கடந்த 2008-ஆம் ஆண்டில், 115 யானைகள் இந்தக் காட்டுப் பகுதிக்குள் புகுந்துவிட்டன. அவற்றைத் துரத்தி வந்த வனத்துறையினர் இந்தக் காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர்.

"அரசுப் பதிவேட்டில் இடம்பெறாத இந்தக் காடு, இங்கே எப்படி உருவானது?' என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றிக் கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது, யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூகக் கடமை இதுவென எண்ணி இத்தனை ஆண்டுகளாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தனது வளர் இளம் பருவத்தில் இந்தப் பணியைத் தொடங்கியவருக்கு இன்றைக்கு வயது 50!

காட்டிற்குள்ளேயே மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்வதற்குப் போதுமான சிறிய குடில் ஒன்றை அமைத்திருக்கிறார். வருமானத்திற்காக, சில மாடுகளை வளர்த்து அதன் பாலை விற்று குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்கிறார்.

மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் பரவியிருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன. 100 யானைகளுக்கும் மேற்பட்டவை ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. பறவைகள், விலங்குகளின் சொர்க்கபுரிதான் இந்த "முலாய் காடுகள்'.

சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட், இந்தக் காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். "ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்...' என வியந்திருக்கிறார்.

""இந்தக் காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார்'' என்கிறார் காட்டை உருவாக்கிய தனிமரம் ஜாதவ் பயேங்!

நன்றி: மனதோடு பேசலாம் வலைப்பதிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com