ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்!

காட்டுப் பாதையெங்கும் சிதறிக் கிடங்கின்றன விதைகள். கிருஷ்ணா மெல்லக் குனிந்து அவற்றை எடுத்து, தான் கொண்டுவந்த பையில் சேகரித்துக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணாவிற்குத் தெரியும் இவை சாதாரண விதைகள் அல்ல என்று
ஒரு மழைக்காட்டு விதையின் பயணம்!
Updated on
4 min read

காட்டுப் பாதையெங்கும் சிதறிக் கிடங்கின்றன விதைகள். கிருஷ்ணா மெல்லக் குனிந்து அவற்றை எடுத்து, தான் கொண்டுவந்த பையில் சேகரித்துக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணாவிற்குத் தெரியும் இவை சாதாரண விதைகள் அல்ல என்று. வரும் காலங்களில் வளர்ந்து பெரிய மரமாகி சிங்கவால் குரங்கிற்கும், பலவிதமான பழம் உண்ணும் பறவைகளுக்கு உணவளிக்கும், பெரிய இருவாசியும் பறக்கும் மலையணிலும் கூடமைக்க இடம் கொடுக்கும், யானைகூட்டத்திற்கு நிழலளிக்கும்...

சாலையோரத்தில் இருந்த ஒரு காட்டுக்கொடியில் பழம் பழுத்திருந்தது. அதன் கீழே அப்பழத்தின் விதையைக் கொண்ட எச்சம் சாய்ந்து கிடந்த மரத்தின் மீது கிருஷ்ணா பார்த்தான். அந்த எச்சத்தைப் பார்த்த உடனே அது பழுப்பு மரநாயினுடையது என்பதை அவன் கண்டுகொண்டான். அக்காட்டுக்கொடியின் தண்டு மென்மையானது அல்ல, அது ஒரு சிறிய மரத்தின் அளவிலும், மிக உறுதியானதாகவும் இருந்தது. விலங்குகள் கீழே இறங்காமலேயே இக்கொடிகளைப் பற்றி மரம் விட்டு மரம் செல்ல உதவிசெய்யும்.

அதற்கு கைமாறாக இவ்விலங்குகள் இக்காட்டுகொடியின் பழத்தை உண்டு தமது எச்சத்தின் வழியாக அவற்றின் விதையை வெவ்வேறு இடங்களுக்குப் பரப்பும்.

கிருஷ்ணா அந்த காட்டுக்கொடியின் விதையையும், பலவிதமான மரவிதைகளையும் ஒரு பையில் சேகரித்து அருகில் இருந்த நாற்றுப்பண்ணைக்கு வந்தான். சேகரித்த விதைகளை ஒவ்வொன்றாக மண் நிரம்பிய பைகளில் நட்டு வைத்தான். ஏற்கெனவே நட்டு வைத்த பலவிதமான மரவிதைகளில் சில முளைவிட ஆரம்பித்திருந்தன. மூன்று வருடத்திற்குமுன் நடப்பட்ட விதைகள் கிட்டத்தட்ட 2-3 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இம்மர நாற்றுகளெல்லாம் பல்லுயிர்த்தன்மைக்குப் பெயர்போன மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இருப்பவை. நாற்றுப்பண்ணை இருக்குமிடம் வால்பாறை.

பத்து வருடங்களுக்கு முன் செயலார்வம் மிக்க, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மழைகாட்டு மீளமைப்புத் திட்டத்தை இங்கு ஆரம்பித்தது. திவ்யா முத்தப்பா, சங்கர் ராமன், ஆனந்த குமார் முதலியோர் அப்பகுதியின் பூர்வீகக் குடியினரான காடர்களின் உதவியுடன் 2000ம் ஆண்டு வால்பாறையில் இத்திட்டத்தைத் தொடங்கினர். இவர்களின் ஒரே குறிக்கோள் இப்பகுதியிலுள்ள சீரழிந்த நிலையிலுள்ள மழைக்காட்டுத் தீவுகளை அம்மண்ணுக்குச் சொந்தமான மரங்களை நட்டு மீளமைப்பதுதான்.

அது என்ன மழைக்காட்டுத்தீவு?

அதிக மழையும், சூடான தட்பவெப்பமும், உயரமான மரங்களும் கொண்ட பூமத்தியரேகைப் பகுதியில் காணப்படும் காட்டுப்பகுதியே மழைக்காடுகளாகும். மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப்பகுதிகளில் பரவியுள்ளது. மழைக்காடு பல்லுயிரியத்தில் மிகச்சிறந்தது. இப்பூமியின் பரப்பளவில் இரண்டு பங்குக்கும் குறைவாகவே இருந்தாலும் இவ்வுலகின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை (ஓரிட வாழ்விகள்) இம்மழைக்காடுகளில் காணலாம்.

பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் அதிக சூரிய ஒளியைப் பெற்று தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினால் இவ்வொளியைச் சக்தியாக மாற்றுகின்றன. தாவரங்களில் சேமிக்கப்பட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கும் உணவாக அமைகிறது. அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழ்நிலைக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகிறது, உலகின் தட்பவெப்பநிலையை நிலைநிறுத்துகிறது, வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கிறது, பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மூலாதாரமாக இருக்கிறது.

இப்புவிக்கும், மனித குலத்திற்கும் தேவையான இப்படிப்பட்ட மழைக்காடுகள் உலகில் எல்லா பகுதிகளிலும் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன, தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவ்விதமான மழைக்காடுகள் அடர்ந்து இருப்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், அஸ்ஸôம், அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் தான்.

மழைக்காடுகள் மிகுந்திருந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தேயிலை, காப்பி போன்ற ஓரினப் பயிர்த் தோட்டங்களுக்காகவும், நீர்மின் திட்டங்களுக்காகவும், வெட்டுமரத்தொழிலுக்காகவும் கடந்த சில நூற்றாண்டுகளாக வெகுவாக திருத்தப்பட்டன. இதனால் மழைக்காடுகள் பல இடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, தொடர்பற்று துண்டுதுண்டாகிப்போனது.

இப்படிப்பட்ட இடங்களில் ஒன்றுதான் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஆனைமலைப்பகுதியிலுள்ள வால்பாறை. இங்கு கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப்பசேலென தேயிலைத்தோட்டங்களைக் காணலாம். காப்பி, தேயிலை, ஏலம், யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத்தாவரத் தோட்டங்களின் நடுவே இவை பயிரிடத் தகுதியில்லாத இடங்களில் இன்னும் திருத்தி அமைக்கப்படாத மழைக்காடுகள் சிறியதும் பெரியதுமாக ஆங்காங்கே தீவுகளைப்போல காட்சியளிக்கும். இவையே மழைக்காட்டுத்தீவுகள், துண்டுச்சோலை என்றும் அழைக்கின்றனர்.

இத்துண்டுச் சோலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் வால்பாறையைச் சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம் புலிகள் காப்பகம், வாழச்சால் வனப்பகுதி, எரவிகுளம் தேசிய பூங்கா, சின்னார் சரணாலயம் போன்ற தொடர்ந்த பரந்து விரிந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் சுற்றிலும் வனத்தைக் கொண்ட வால்பாறை பகுதியிலும் பலவிதமான அரிய, அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளையும், தாவரங்களையும் பார்க்க முடியும். இந்த உயிரினங்களுக்கெல்லாம் புகலிடமாக இத்துண்டுச்சோலைகள் உள்ளன.

ஆகவே இந்தச் சிறிய வனப்பகுதிகளை பாதுகாப்பது இன்றியமையாதது. திருட்டு வேட்டை, வீட்டு உபயோகத்திற்காக மரங்களை வெட்டுதல், களைகள் பெருகி காட்டிலுள்ள தாவரங்களை வளரவிடாமல் தடுத்தல், ஓரினப்பயிர்களுக்காக இச்சிறிய காடுகளையும் கூடத் திருத்தி அமைத்தல், இத்துண்டுச் சோலைகளின் உள்ளேயும் ஓரமாகவும் செல்லும் சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற காரணங்களினால் இத்துண்டுச்சோலைகளும் இதில் வாழும் உயிரினங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்

படுகின்றன.

வால்பாறை மனித-விலங்கு மோதலுக்குப் பெயர் போன இடம். யானைத்திரள் மக்கள் குடியிருப்புகளின் அருகில் வந்து, மதிய உணவுக்கூடங்களிலும், ரேஷன் கடைகளிலும் வைத்திருக்கும் அரிசி, பருப்பு மூட்டைகளை உட்கொள்ளும். சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்தத் துண்டுக் காடுகளை அழிப்பதால்தான் விலங்கினங்கள் மக்கள் வசிப்பிடம் நோக்கி நகர்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த மழைக்காட்டு மீளமைப்புத் திட்டம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் காட்டுயிர் பாதுகாப்பும், ஆராய்ச்சியும் பொதுவாக அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட இடங்களில்தான் நடக்கும். ஆனால் வால்பாறை பகுதி தனியாருக்குச் சொந்தமானவை. இந்நிலங்களிலேயே இத்துண்டுச்சோலைகள் அமைந்

துள்ளன.

ஆகவே அரசுசாரா நிறுவனமான இயற்கை பாதுகாப்புக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியிலுள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பித் தோட்ட உரிமையாளர்களான பாரி அக்ரோ, டாடா காப்பி, பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் லீவர் (தற்போதைய உரிமையாளர் வுட் பிரையர் குரூப்) முதலிய நிறுவன அதிகாரிகளிடம் அவர்களுடைய இடங்களிலுள்ள துண்டுச்சோலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிதைந்துவரும் இம்மழைக்காட்டுத் தீவுகளை மீளமைக்க அனுமதி பெற்றனர்.

இந்த மீளமைப்புப் பணியில் உதவ காட்டுயிரியலாளர்கள், ஆனைமலைப் பகுதியின் பூர்வீகக் குடியினரான காடர்களை வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக 800-1300 மீ உயரத்திலிருக்கும் மழைக்காட்டுப் பகுதியில் தென்படும் மரங்களின் பட்டியலை மீளமைப்புக் குழுவினர் தயார் செய்து, சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் அம்மரங்களின் விதைகளைச் சேகரித்து நாற்றுப் பண்ணையில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். விதைகள் முளைவிடுவதும் வேறு இடத்தில் கொண்டு சென்று நடுவதற்கான முதிர்ச்சியை அடைவது மரத்திற்கு மரம் மாறுபடும். சில மரவகைகள் முளைவிடுவதற்கே பல மாதங்கள் ஆகும். மழைக்காட்டு மர விதைகளை தினமும் தண்ணீர் ஊற்றி, இயற்கை உரமிட்டு பூச்சிகளிடமிருந்தும், கொறிக்கும் எலிகளிடமிருந்தும் காப்பாற்றி பிள்ளைகள் போல வளர்க்கப்படுகிறது. பாதுகாப்பாகவும், மிகுந்த கவனத்துடனும் வளர்க்கப்பட்ட இந்நாற்றுகள் 3-4 ஆண்டுகள் கழித்து தென்மேற்குப் பருவ மழைக்காலங்களில்தான் பண்ணையை விட்டு துண்டுச் சோலைகளில் கொண்டு சென்று நடப்படுகின்றன.

எந்த இடத்தில் எவ்வகையான மரங்களை நடுவது என்பது முன்பே தீர்மானிக்கப்படுகிறது. (மலையின் உயரத்திற்கு ஏற்றாற்போல் அவ்வுயரத்திலிருக்கும் தாவர வகையும் மாறுபடும்). நடுவதற்கு முன் அவ்விடங்களில் களைச்செடிகள் அகற்றப்படுகின்றன. துண்டுச்சோலை அதிகமாக சிதைக்கப்பட்டிருந்தால் அதற்குத் தகுந்தவாறு அதன் ஓரங்களில் வெட்டவெளியில் வளரும் மரவகைகளும், மூடிய விதானத்தினுள்ளே நிழலின் கீழ் வளரும் மரங்களும் நடப்படுகின்றது. நட்டுவைக்கப்படும் ஒவ்வொரு நாற்றிலும் அடையாளத்திற்காக பளிச்சென்று தெரியும் நிறத்தில் சிறிய பிளாஸ்டிக் பட்டைகள் கட்டிவைக்கப்படுகின்றன. இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் நடப்பட்ட மொத்த நாற்றுகளில் எத்தனை உயிர் பிழைக்கின்றன என்பது கணக்கிடப்படுகிறது.

நாற்றுகளை நட்டபின் அவ்வப்போது இடத்திற்குத் தகுந்தாற் போல் அப்பகுதியில் வளரும் களைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இது நட்டுவைக்கப்பட்ட மழைக்காட்டு நாற்று வளர வகைசெய்கிறது. ஓரளவிற்கு இந்நாற்றுகள் வளர்ந்தபின் அவற்றின் நிழலுக்கடியில் களைகள் வளராது.

கடந்த 12 ஆண்டுகளாக வால்பாறைப் பகுதியில் மொத்தம் சுமார் 50 ஹெக்டேர் பரப்பில் 150 வகையான தாவர வகைகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. காப்பித் தோட்டங்களில் நடப்படும் மரக்கன்றுகள் வளர்ந்து நிழல் மரமாகவும் உள்ளன. இவ்வாறு நடப்படும் மரம் 15 மீட்டர் உயரம் வரை வளரும். இதற்கு 12 ஆண்டுகள் பிடிக்கிறது

ஒரு மழைக்காட்டு மர விதை முளைத்து, துளிர் விட்டு, நாற்றாகி, மரமாக உயர்ந்து வளர்வதற்குள் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது. வறட்சியிலிருந்தும், நாம் காட்டுக்குள் கொண்டு செல்லும் ஆடு, மாடுகளிடமிருந்தும், அங்கு வாழும் தாவர உண்ணிகளிடமிருந்தும், சூரிய ஒளிக்காக, நீருக்காக அதனைச்சுற்றியுள்ள தாவரங்களிடமிருந்தும், களைச்செடிகளிடமிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக மரவெட்டியின் கோடாலியிடமிருந்தும் தப்பிக்க வேண்டும்.

கிருஷ்ணாவும், இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் மழைக்காட்டு மீளமைப்புத் திட்டக் குழுவினரும், இந்த மழைக்காட்டு மரங்களின் நெடுந்தூரப் பயணத்தை தொடங்கி மட்டுமே வைத்துக்கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு பயணத்திற்கும் முக்கியமானது நாம் எடுத்து வைக்கும் முதல் படிதானே. சேர வேண்டிய இடத்தை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தானே பயணத்தைத் தொடங்குகிறோம். நம்பிக்கைத்தானே வாழ்க்கையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com