

தமிழர்களின் வாழ்க்கை முறையில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பூக்களின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களை பிரித்த தமிழர்களின் ஆழ் மனதிற்குள் பூக்கள் தொன்மங்களாக உரைந்துள்ளன. குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் சடங்குகள், இளம்பெண்கள் பருவமடைவதனை குறிக்கும் பூப்படைதல் நீராட்டு விழா, பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் பூ வைத்தல் சடங்கும், திருமண நாளில் மலர் மாலைகளை மாற்றிக் கொள்வதும், தமிழ்க் குடும்ப பெண்கள் சுமங்கலி என்பதற்கு அடையாளமாக பூச்சூடும் முறையும் மலர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தெருவோரக் கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை கடவுளை வழிபட பூக்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. பூ செய் என்ற சொல்லே சாமிக்கு பூசை செய்வது என வந்ததாகக் ஆன்மிக பெரியார்கள் தெரிவிக்கின்றனர். பெரிய கோயில்களில் நந்தவனங்கள் அமைக்கப்பட்டு மலர் செடிகள் வளர்க்கப்பட்டு, அச்செடிகளிலிருந்து மலரும் பூக்களை கொய்து மலர் மாலைகளாகத் தொடுத்து இறைவனை வழிபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலுக்கு பூமாலை தொடுத்து தந்தவர்கள் வாழ்ந்த தெருவின் பெயர் "மாலைக்கட்டித் தெரு' என்று இன்றும் உள்ளது.
இதுதவிர, ஆன்மிகவாதிகள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை வரவேற்று கவுரப்படுத்தவும் மலர்மாலைகள் பயன்படுத்தப்படுதிறது.
இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தின் ஓர் அங்கமான வேளாண் விரிவாக்கத் துறை புதிய வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்க முயற்சி மூலம் கடலோர தமிழகத்தில் ஒரு வண்ணப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஜம்மு மாநிலத்தில் விளையும் கிளேடிஓலஸ் வண்ணமலர் சாகுபடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஜம்மு மாநில வேளாண்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழக கிராமப்புற விரிவாக்கப் பணியினருடன் இணைந்து கிளேடிஓலஸ் மலர் சாகுபடியை கடலோர தமிழகத்தில் நிறப்புரட்சி என்ற செயல் திட்டத்தினை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக மல்லிகை, முல்லை போன்ற பாரம்பரிய மலர் ரகங்களுக்கு, மாற்றாக கிளேடிஓலஸ் மலர் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்மலர் சாகுபடி மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் சிறு, குறு மற்றும் விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாயத் தொழிலாளர்களுக்கு கிளேடிஓலஸ் மலர் சாகுபடி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் கிளேடிஓலஸ் மலரை பார்த்ததும், கேள்விபட்டதும் கிடையாது, இத்தகைய சூழலில் புதிய தகவல் தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு இணையவழி விரிவாக்கம் வாயிலாக கிராமப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு கிளேடிஓலஸ் மலர் பற்றிய சாகுபடி முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. பாரத வங்கியின் பங்களிப்புடன் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் முன்னோடி விவசாயி சீனுவாசப் பெருமாள் தோட்டத்தில் ஜம்மு மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அமெரிக்கன் பியூட்டி, ஓயிட் பிராஸ்பெரிட்டி, சம்மர் சன்சையின, கேண்டிமென் ஆகிய மலர் ரகங்கள் நடவு செய்யப்பட்டன.
விஞ்ஞானரீதியாக மண் மற்றும் நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நடவு செய்யப்பட்ட கிளேடிஓலஸ் மலர்கள் 3 மாத காலத்தில் பூக்கத் தொடங்கிவிடும். பாரம்பரிய மலர்களை விடப் பெரிதாகவும், பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் கிளேடிஓலஸ் மலர்கள் நீண்ட காலம் வாழும் தன்மை கொண்டவை. பாரம்பரிய மலர்களை விட நீண்ட காலம் வைத்து விற்பனை செய்ய முடியும். வெங்காயம் மற்றும் பூண்டு குடும்பத்தைச் சார்ந்த கிளேடிஓலஸ் மலரை குறைந்த செலவில், பாரமரிப்பில் வளர்க்க முடியும் என்பதை கண்ட சிறு, குறு விவசாயிகள் இம்மலர் சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். தற்போது இம்மலர் சாகுபடியுடன் ஊடுபயிராக நூல்கோல் காய்கறியும் அறிமுகம் செய்யப்பட்டு நன்கு வளர்த்து அறுவடை செய்யப்படுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன் மற்றும் ஜம்மு மாநில வேளாண் விஞ்ஞானி மனோஜ்நாசர் ஆகியோர் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் விரிவாக்க ஆலோசனைகளை, உதவிகளை தொடர்ச்சியாக வழங்கிய பலனால் கிளேடிமலர் சாகுபடி வெற்றியடைந்தது.
அண்ணாமலைப் பல்கலை. இந்த வேளாண் விரிவாக்க முயற்சியின் பலனாக சிறு மற்றும் குறு விவசாயிகளை கொண்ட கிளேடிஓலஸ் சாகுபடியாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன் சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூரில் மாதிரி பண்ணை அமைக்கப்பட்டு விவசாயிகள் வாயிலாகவே விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பாக சாகுபடி பணிகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் ஆய்வு கையேடு, குறுந்தகடும் வழங்கப்பட்டது.
கிளேடிஓலஸ் மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் "காதல் மலராக' அறிமுகம் செய்யப்பட்டு சிதம்பரம் நகரில் கிளேடிஓலஸ் மலர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கிளேடிஓலஸ் மலர் சாகுபடியாளர் சங்கம் மற்றும் சி.முட்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி வேளாண் சிறப்பு பிரிவு பயிலும் மாணவர்கள் பங்களிப்புடன் சமுதாய கிளேடிஓலஸ் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர்.
அப்பண்ணை கிளேடிஓலஸ் மலர் சாகுபடி குறித்து விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொண்டு பயன் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.