வியக்க வைக்கும் துபை!

சேலம், இந்திய மருத்துவச் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரகாசம், டாக்டர் சுந்தரவேல் தலைமையில் சுற்றுலா உதவியாளர்கள் துணையோடு 12-01-2011 அன்று இரவு சென்னையிலிருந்து விமானத்தில் துபை புறப்பட்டோம். ஜனவரி 12
வியக்க வைக்கும் துபை!

சேலம், இந்திய மருத்துவச் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரகாசம், டாக்டர் சுந்தரவேல் தலைமையில் சுற்றுலா உதவியாளர்கள் துணையோடு 12-01-2011 அன்று இரவு சென்னையிலிருந்து விமானத்தில் துபை புறப்பட்டோம். ஜனவரி 12-ஆம் தேதியன்று இரவு துபை சேர்ந்த நாங்கள், எங்கள் குழுவைச் சேர்ந்த 73 பேர்களுடன் "அட்மிரல் பிளாசா' என்ற விடுதியில் தங்கிக் கொண்டோம். வெறும் பாலைவனமாகக் காட்சியளித்த துபை, எண்ணெய் வளத்தால் வளர்ச்சி அடைந்து கடந்த 50, 60 ஆண்டுகளில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பால் சோலைவனமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது!

மறுநாள்காலை இரண்டு சிறப்புப் பேருந்துகளில் புறப்பட்டு அபுதாபி நோக்கிப் பயணமானோம். சாலையின் இருபுறமும் 20, 30 அடுக்குகள் கொண்ட உயர்ந்த கட்டடங்கள், வணிக வளாகங்கள், அகலமான தூய்மையான சாலைகள், மேம்பாலங்கள், அறிவிப்பு வளைவுகள், நிறைய விளம்பரப் பலகைகள் நம்மை வியக்க வைக்கின்றன.

கடலுக்கு அடியில் இரண்டு தளங்கள் கொண்ட ஏழு நட்சத்திர ஓட்டல் ஒன்றைக் காண்பித்தனர். "இது உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல்களில் ஒன்று என்றும், பெரிய நவீன வசதிகள் கொண்ட அறைகளின் ஒருநாள் வாடகை ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஆகும். காலை உணவுச் செலவு ரூ. 5 ஆயிரம் என்றும்' எங்கள் வழிகாட்டி கூறினார்.

அபுதாபியில் மிகப்பெரிய மசூதி ஒன்றைப் பார்த்தோம். உலகில் உள்ள மிகப் பெரிய மசூதிகளில் எட்டாவது இடத்தில் உள்ளது. மிகவும் பெரிய கூடத்திற்குள் சென்று எல்லோரும் சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.

அடுத்து அபுதாபி மன்னரின் அரண்மனை வளாகத்தைப் பார்த்தோம். மிகப்பெரிய நுழைவாயில் இரண்டொரு காவலர்கள் நிற்கிறார்கள். ஒரு பெரிய ஏரியில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்கிறார்கள். சுற்றிலும் பூங்காக்கள்.

"மரினா மால்' என்ற மிகப் பெரிய வணிக வளாகத்திற்குள் சென்றோம். நகைக் கடைகள், துணிக்கடைகள் முதலிய பலவகையான கடைகளும் நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன.

மாலையில் துபை திரும்பி வந்து ஒரு கப்பலில், நடன விருந்தோடு இரவு உணவை முடித்தோம்.

ஜனவரி 14-ஆம் நாள் துபாய் நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். துபாய் நகரின் நடுவில் ஓடும் "கிரிக்' கால்வாயில் படகில் சவாரி செய்து, எதிர்க் கரையை அடைந்து பல்வேறு கடைத் தெருக்களைப் பார்த்தோம். போர்ட் ரஷித் ஹார்பரைப் பார்த்தோம். ஓரிடத்தில் ஒரு பெரிய கொடிமரம் நிற்கிறது. இங்குதான் முதன்முதலில் துபை அரசு துவங்கப்பட்டுள்ளது என்று வழிகாட்டி கூறினார்.

ஜுமேரா கடற்கரைக்குச் சென்றோம். ஐரோப்பியர்களும் மற்ற சுற்றுலாப்பயணிகளும் கடலில் நீந்திக் கொண்டும் படகுப் பலகையில் படுத்து விளையாடிக் கொண்டும் இருக்கிறார்கள். எதிரே மிகப்பெரிய "பர்ஜ் அல் அராப்' என்ற ஏழு நட்சத்திர ஆடம்பர ஓட்டல் இருக்கிறது. 1053 அடி உயரமுள்ள இந்த ஓட்டல் உலகிலேயே நான்காவது உயரமான ஓட்டல் என்று கூறப்படுகிறது.

பனை மர வடிவில் அமைந்துள்ள பாம் தீவுகள், துபை மெரினா முதலியவைகளைப் பார்த்துக் கொண்டு, துபை மன்னர் அரண்மனையைக் காணச் சென்றோம். மிகப் பெரிய அரண்மனை வளாகம். நுழைவுவாயிலில் காவலர்கள் நிற்கிறார்கள்.

வசந்தம் உணவு விடுதியில் பகல் உணவு முடித்துக் கொண்டு மாலையில் "பன்னாட்டுக் கிராமக் கண்காட்சி' காணச் சென்றோம்.

பெரிய பாலைவனம் மாற்றப்பட்டு 42 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடை வளாகங்கள் இங்கு உள்ளன. 116 நாட்கள் இந்தக் கண்காட்சி நடைபெறும் என்று வழிகாட்டி கூறினார். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் கண்காட்சி போல நூறு மடங்குக்கு மேல் பெரியதாக இருக்கும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, எகிப்து, ஈரான் போன்ற சில வளாகங்களை மட்டும்தான் பார்க்கமுடிந்தது. எல்லா வளாகங்களையும் பார்க்க வேண்டுமென்றால் பல நாட்கள் ஆகும். குடை ராட்டினம், அசுரச் சக்கரம் போன்ற விளையாட்டு அரங்கங்களும் உள்ளன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பன்னாட்டுக் கிராமம் பரவசம் ஊட்டும் கிராமமாகப் பரிமளித்தது.

மறுநாள் காலை புறப்பட்டு துபை அருங்காட்சியகம் சென்றோம். அங்கு பழங்காலக் கூரைக் குடிசைகள், மண்பாண்டங்கள், முத்துக்குளித்தல், வளை பின்னுதல், பழங்கால அரபி உடைகளில் ஆண்கள், பெண்கள் ஆகிய காட்சிகளைப் பார்த்தோம். இந்த அருங்காட்சியகம் 1787-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அல்பகிது கோட்டையில் அமைந்துள்ளது.

பல தெருக்களிலிலும் சந்துகளிலும் புகுந்து ஒரு மாடியில் அமைந்துள்ள சிவன் கோயிலைப் பார்த்தோம். ஒரு கட்டடத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், சாய்பாபா படங்கள் உள்ளன. வழிபட்டுவிட்டுப் புறப்பட்டோம். பிறகு நகைக் கடைகள் நிறைந்த வணிக வளாகத்திற்குச் சென்றோம். பல நண்பர்கள் நகைகள் வாங்கினார்கள்.

மாலையில் பாலைவனச் சவாரிக்குப் பல கார்களில் புறப்பட்டோம். மணல் மேடுகளில் பள்ளங்களில் ஏறியும் இறங்கியும் சரிந்தும் தவழ்ந்தும் கார்கள் சென்றன. ஒருமணிநேரம் பயணம் செய்த பிறகு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்தை அடைந்தோம். அங்கு முதலில் ஓர் ஆணும் பிறகு ஒரு நங்கையும் நடனம் ஆடினார்கள்.

16-ஆம் தேதி ஞாயிறன்று காலை புறப்பட்டு "துபை மால்' என்ற மிகப் பெரிய கடை வளாகத்திற்குச் சென்றோம். அது சுமார் 1200 கடைகளும் 220 நகைக் கடைகளும் கடிகாரக் கடைகளும் துணிக்கடைகளும் 150 உணவு விடுதிகளும் ஒரு பெரிய மீன் காட்சியகமும் செயற்கை நீர் வீழ்ச்சியும் பொழுதுபோக்கு பூங்காவும் 22 திரை அரங்குகளும் பனிச்சறுக்கு விளையாட்டு இடமும் நிறைந்த ஓர் அற்புதமான கடை வளாகம். படகு சவாரி செய்ய ஒரு பெரிய குளமும் உண்டு. அங்குதான் "பர்ஜ் துபை' என்ற உலகின் மிக உயர்ந்த கோபுரம் உள்ளது. 2716 அடி உயரமும் 124 மாடிகளும் கொண்ட இக்கோபுரத்தை பலகோடி டாலர்கள் செலவு 2004 முதல் 2010 வரை கட்டி முடித்தார் இந்நாட்டு மன்னர்.

கோபுரத்தின் நுழைவாயிலில் துபை மன்னர் படமும், ""முடியாது என்னும் வார்த்தை தலைவர்களின் அகராதியில் இல்லை'' - மன்னர் ஷெயிக் அகமது

- என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

நுழைவுக் கட்டணம் செலுத்தி அதிவிரைவுத் தானியங்கி லிஃப்டில் ஏறி மேலேசென்று "பறவை பார்வையில்' துபையின் அற்புதமான காட்சிகளைக் கண்டு வியந்து மகிழ்ந்து கீழே இறங்கினோம்.

துபை மால் போன்றே மிகப்பெரிய வளாகமான "எமிரேட் மால்' வளாகத்திற்குச் சென்று நண்பர்களும் நாங்களும் அவரவர் விருப்பம் போல் இரவு வரை பொருட்களை வாங்கினோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com