அறச்சாலையாகும் சிறைச்சாலைகள்!

நூலகத்தின் கதவுகள் திறக்கப்படும் போதெல்லாம் சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படுகின்றன என்பார்கள்.
அறச்சாலையாகும் சிறைச்சாலைகள்!
Published on
Updated on
1 min read

நூலகத்தின் கதவுகள் திறக்கப்படும் போதெல்லாம் சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படுகின்றன என்பார்கள். ஆனால் மூடப்பட்ட சிறைச்சாலைக்குள்ளேயே கைதிகளுக்கு படிப்பறிவையும் தொழிற்பயிற்சிகளையும் அளித்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த டாக்டர் நோவா. அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் நோவா கடந்த முப்பது ஆண்டுகளாக "அணைக்கும் கரங்கள்' என்னும் அறக்கட்டளையை நிறுவி பல சமூகப் பணிகளைச் செய்துவருகிறார். அவரிடம்
 பேசியதிலிருந்து...
 ""பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் செய்யும் செயல்களே குற்றங்களில் முடிகிறது. சிறைச்சாலையை அறச்சாலையாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 1982-ல் தொடங்கப்பட்டதுதான் "அணைக்கும் கரங்கள்' என்னும் தன்னார்வ அமைப்பு.
 சிறையில் இருக்கும் கைதிகளுக்கு ஆரம்பக் கல்வி, உயர் கல்வி, திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள், அஞ்சல் வழிக் கல்வி மூலமும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு உதவுகிறேன். எங்கள் அமைப்பின் சிறிய முயற்சியால் இதுவரை 8,650 பேர் பட்டம் பெற்றுள்ளனர்!
 பல்கலைக்கழக துணைவேந்தர்களை சிறைக்குள்ளேயே அழைத்துவந்து, பட்டம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை அளிக்கச் செய்கிறோம். இதுபோன்ற செயல்கள், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.
 படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு கடிகாரம் பழுது பார்க்கும் பயிற்சி, கணினிப் பயிற்சி, சுருக்கெழுத்துப் பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, தையற்கலைப் பயிற்சி, ஊறுகாய், அப்பளம், ஜாம் தயாரிக்கும் பயிற்சி, ஸ்க்ரீன் பிரிண்டிங் பயிற்சி ஆகியவற்றை அளிக்கிறோம். சிறையிலிருந்து வெளியேறியவுடன் அவர்கள் தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் செய்து தருகிறோம்.
 சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் செய்து
 சிறைக்கு வரும் ஒருவர் மனம் மாறித் திருந்துவதற்கான வாய்ப்பை அளிக்கவேண்டும். இப்படிப்பட்ட மறுவாழ்வுப் பணிகளை சிறைக் கைதிகளுக்கு செய்வதின் நோக்கம் அதுதான்.
 சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி தொடர்பான சேவைகளை அளிப்பதுடன் அந்தக் குழந்தைகளை அடிக்கடி சென்று பார்த்து வருவதன் மூலம், சிறையில் இருக்கும் கைதியின் மனதை மாற்றுகிறோம்.
 எங்களின் சேவைப் பணிக்கான கொடைகளை தனியார் நிறுவனங்களிடமிருந்தோ அரசிடம் இருந்தோ நாங்கள் பெறுவதில்லை. என்னிடம் பயின்று இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கும் மாணவர்களிடமிருந்தும் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகளிடமிருந்து நல்ல உள்ளங்களைக் கொண்டவர்களிடமிருந்தும் பெறுகிறோம்.
 எங்களின் சேவையைப் பாராட்டி சமீபத்தில் "மதுரா டிராவல்ஸ்' நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கும் "மதுரா மாமனிதர்' விருதை இந்தாண்டு எனக்கு வழங்கியிருக்கிறார் அதன் நிறுவனர் வீ.கே.டி. பாலன். ஒருலட்சம் ரூபாய் பரிசுத் தொகையைக் கொண்ட அந்த விருதை எனது சமூகப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நினைக்கிறேன்'' என்றார் டாக்டர் நோவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com