தூய்மையான கடலோரம் கண்டலாமா!

இலங்கையின் மொத்த உற்பத்தியில் 7 சதவிகிதம் சுற்றுலாப் பயணிகளால்
தூய்மையான கடலோரம் கண்டலாமா!
Published on
Updated on
2 min read

இலங்கையின் மொத்த உற்பத்தியில் 7 சதவிகிதம் சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் வருமானம். இதனை அடுத்த சில ஆண்டுகளில் இரு மடங்கு உயர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது இலங்கை சுற்றுலாத் துறை.

2010-ல் 6.50 லட்சமாக இருந்த சுற்றுலாப் பயணிகள் வருகையை 2016-ம் ஆண்டில் 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து களம் இறங்கியுள்ளனர்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியர்கள். காரணம், மலேசியாவைக் காட்டிலும் இலங்கையில் குறைந்த செலவில் அதே இயற்கையின் இனிமையை அனுபவிக்க முடியும் என்பதுதான். இருந்தும், தற்போது மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் இலங்கைக்கு வரும் இந்தியர்கள் மிகமிகக் குறைவு.

""கம்பெனிகள் நிர்வாகக் கூட்டங்களை வெளிநாட்டில் நடத்துவதற்காக, ஆலோசனைக் கூட்டங்களுக்காக இந்தியாவை விட்டு வெளிநாடு செல்லும் கார்ப்பரேட் செக்டார் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 8 லட்சம் பேர். இதில் 20 சதவிகிதத்தை இலங்கைக்கு கொண்டு வந்துவிட முடியும் என்றால் எங்கள் இலக்கை அடைவது மிக எளிது'' என்கிறார் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் விபுலா வாணிகசேகர.

இதற்காக இலங்கை அரசு செய்ய வேண்டிய பணிகள்- முதலில் சர்வதேச தரத்தில் ஓட்டல்களை ஏற்படுத்துவதுதான். இலங்கையின் முக்கிய நகரங்களில் ஏற்கெனவே சர்வதேச தரத்திலும், பாரம்பரிய தரத்திலும் ஓட்டல்கள் நிறைய உள்ளன. ஆனால் அவை கொழும்பு பகுதியில்தான் அதிகமாக உள்ளன. சுற்றுலாப் பயணிகள் விரும்புவதோ தனிமை- இனிமை- இயற்கைச் சூழல்- கடல் விளையாட்டுகள்- சஃபாரிகள்- புதுப்புது உணவுகள்!

இலங்கையின் இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளில் இந்த வகையான ஓட்டல்களை அமைக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தோம். பலர் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர். சிலர் முழுதீவு வேண்டும் என்றும் கூடத் தெரிவித்தனர். அவர்களுக்காகவும், அத்தீவில் வாழும் பழங்குடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் முழுத் தீவையும் குத்தகைக்கு விடுக்கும் பணிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது என்கிறார் விபுல வாணிகசேகர.

இப்போது இலங்கையில் தொழில்கள் தொடங்க அனுமதி கேட்பதைவிட, ஓட்டல்கள் கட்ட அனுமதி கேட்டால், குறிப்பாக ஊருக்கு வெளியே இயற்கைச் சூழலில் கட்டுவதற்குத் தயார் என்றால், உடனடியாக அனுமதி கிடைத்துவிடும். எப்படியும் 2020 ஆண்டுக்குள் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை 40 லட்சமாக உயர்த்துவதன் மூலம் இலங்கை அரசுக்கு 8 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளுடன் விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதிலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தன் பங்குக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்கிறார் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனத்தின் "மைஸ்' (மீட்டிங், இன்சென்டிவ், கன்வென்ஷன்ஸ், எக்ஸிபிஷன்) மேம்பாட்டுப் பிரிவு மேலாளர் சாந்தல் சமரசிங்கே.

வெளிநாடு செல்லும் இந்தியர்களை எப்படி இலங்கைக்குத் திருப்புவது? இந்தியாவில் உள்ள டிராவல் ஏஜென்ஸிகளை அழைத்துவந்து இலங்கை ஓட்டல்கள் எவ்வாறு சர்வதேச தரத்தில் இருக்கிறது என்பதை நேரடியாகக் காட்டுகிறார்கள்.

கண்டி, கண்டலாமா ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்கள் உண்மையாகவே சர்வதேச தரத்திலானவை. குறிப்பாக ஹெரிட்டன்ஸ் கண்டலாமா ஓட்டல், அடர்காட்டின் நடுவே மலையைச் சுற்றி, ஆனால் பாறைகளை உடைக்காமல், மரங்களை வெட்டாமல் கட்டப்பட்ட ஓட்டல், இதற்காக பல இயற்கை பாதுகாப்பு விருதுகளை வாங்கியுள்ளது இந்த ஓட்டல்! மிக நெடிய கடற்கரை உள்ள இந்தியாவில் தூய்மையான கடலோரம் என்பது இல்லவே இல்லை. ஆனால் இலங்கைக்கு இதுதான் சிறப்பு அம்சம்.

இலங்கையில் விடுதலைப் புலிகள்- ராணுவ மோதல் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. கொழும்பு நகரின் காலி சாலையில் ஆங்காங்கே இருந்த மணல் மூட்டைகளும் அதன் பின் நின்ற ராணுவமும் இப்போது கிடையாது.

அமைதியான சூழல் இருப்பதை இந்தியர்களுக்குக் காட்டுகிறார்கள். நிறைய பேரை இங்கே அனுப்புங்கள் என்று சொல்கிறார்கள்.

நிச்சயம் இலங்கை, தமிழ்நாட்டவரை அதிகம் எதிர்பார்க்கவில்லை. அவர்களது நோக்கம் பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா வாசிகள்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com