திசைகளைக் கடந்தது இசை!

"பஜரே யதுநாதம்' பாடலைப் பாடும்போதும் சரி, புல்லாங்குழல் மேதை ஹரிபிரசாத் செüராசியாவுடன் இணைந்து ஜூகல் பந்தி நடத்தும் போதும் சரி, தன்னை ஒரு பாலமுரளி கிருஷ்ணா பள்ளியின் வார்ப்பு என்பதைப் பழுதில்லாமல் நிரூபிப்பவர் கடலூர் எஸ்.ஜே. ஜனனி.
திசைகளைக் கடந்தது இசை!

"பஜரே யதுநாதம்' பாடலைப் பாடும்போதும் சரி, புல்லாங்குழல் மேதை ஹரிபிரசாத் செüராசியாவுடன் இணைந்து ஜூகல் பந்தி நடத்தும் போதும் சரி, தன்னை ஒரு பாலமுரளி கிருஷ்ணா பள்ளியின் வார்ப்பு என்பதைப் பழுதில்லாமல் நிரூபிப்பவர் கடலூர் எஸ்.ஜே. ஜனனி. நமது பாரம்பரிய இசையில் இருக்கும் தேர்ச்சியைப் போன்றே மேற்கத்திய இசை வடிவங்களான ஜாஸ், ப்ளூஸ் போன்றவற்றிலும் ஹிந்துஸ்தானி இசையில் அமைந்த "கஜல்' பாடல்களையும் அதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு இனிமையாகப் பாடுகிறார். கீ-போர்ட் வாசிப்பதில் லண்டன் டிரினிட்டி இசைப் பள்ளியின் எட்டு கிரேட்களை முடித்திருக்கிறார். "யுவகலா பாரதி', "கலை இளமணி' போன்ற விருதுகளைப் பெற்றிருக்கும் ஜனனிக்கு, கடந்த ஆண்டு சிறப்பாக இசைப் பங்களிப்பு அளித்ததற்காக, கிருஷ்ண கான சபா வழங்கும் "மகாராஜபுரம் சந்தானம் நினைவுப் பரிசை'யும் இந்தாண்டு பெறவிருக்கிறார்.

இசைத் துறையில் புதிய முயற்சிகள், இந்த ஆண்டு இசை விழாவிற்கு பிரதானமாக எடுத்துக் கொள்ளப்போகும் சாகித்யங்கள், பாரம்பரிய இசையோடு கலப்பிசையை கேட்பதற்கும் பெருகிவரும் ஒரு ரசிகர் கூட்டம்... போன்றவற்றைப் பற்றி இசை வானில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இளம் நட்சத்திரமான ஜனனியிடம் பேசியதிலிருந்து...

""இந்த ஆண்டு தமிழ் மூவர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர் ஆகியோரின் பாடல்களையும் பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பிள்ளை ஆகியோரின் தமிழிசைப் பாடல்களையும் பிரதானமாக இசை நிகழ்ச்சிகளில் பாடவிருக்கிறேன்.

இந்த ஆண்டு இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன். ஒன்று, உலக அளவில் புகழ்பெற்ற உ.ங.ஐ. யங்ழ்ஞ்ங்ய் தங்ஸ்ரீர்ழ்க்ள் நிறுவனத்திற்காக நான் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியிருக்கும் கந்த சஷ்டி கவசம் மற்றும் ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம். மற்றொன்று, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், உன்னி கிருஷ்ணனுடன் நானும் இணைந்து பாடியிருக்கும் "மகா கவி பாரதியாரின் வந்தேமாதரம்'. பாரதியின் வரிகளுக்கு ஏக்தார், துகிதரங், கடம் சிங்காரி போன்ற பழமையான தாள வாத்தியங்களைக் கொண்டும், சந்தூர், பாஞ்சோ, மாண்டலின் போன்ற நரம்பு வாத்தியங்களைக் கொண்டும், புல்லாங்குழல், டிரம்பட் போன்ற காற்றைப் பயன்படுத்தி வாசிக்கும் வாத்தியங்களையும் கொண்டும், ரபாப், ரயான், லூட் ஆகிய ரஷ்ய நாட்டின் இசைக் கருவிகளையும் கொண்டும்

இசையமைத்திருக்கிறேன்.

பாரதியின் பாடல்களைப் பாடும் போது நாங்கள் எல்லோருமே உணர்ச்சிவசப்பட்டோம். பாரத சமுதாயம் வாழ்கவே பாடலின் பதிவின் போது எஸ்.பி.பி. அவர்களுக்கு "மக்கள் துங்கம்' என்ற வரிக்கு அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. உடனே அவர், கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டார். "மக்கள் சமுதாயம்' என்ற அர்த்தத்தை அவரிடமிருந்து தெரிந்து கொண்டு பாடினார். "பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்' பாடலை கீரவாணி, மோகனம், அம்சநாதம், காபி ஆகிய ராகங்களைக் கொண்டு ராகமாலிகையாக இசையமைத்திருந்ததை அனைவரும் பாராட்டினர். மகா கவியின் பாடல்களுக்கு இசையமைத்தது நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

பாரம்பரியமான இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறீர்கள்... ஆனால் ஃபியூஷனில் இசை அமைக்கிறீர்களே இது சரியா? என்று நிறையப் பேர் என்னிடம் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இசையை நான் அர்ப்பணிப்பான விஷயமாகத்தான் பார்க்கிறேன். கிழக்கு, மேற்கு.... என்று திசைகளைக் கடந்தது இசை.

பாரம்பரியமான இசையை ரசிப்பதற்கு ரசிகர்கள் இருப்பது போலவே இன்றைக்கு கலப்பிசையை ரசிப்பதற்கும் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களின் ரசனையையும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. மேற்கத்திய மேதைகளின் இசைக் குறிப்புகளை அவர்கள் மாற்றுவதில்லை. நாமும் நம்முடைய மேதைகளின் பாணிகளை மாற்றுவதில்லை. நம்முடைய கர்நாடக சங்கீதத்தில் இசை மேதை அரியக்குடி பாணி, செம்மங்குடி பாணி என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருந்தது. அதை அவர்களின் சிஷ்ய பரம்பரையினர் அப்படியே தொடர்வார்கள். அந்தப் பாணியை மாற்றுவதுதான் தவறு.

கர்நாடக இசையில் அமைந்த பாடல்களுக்கு மேற்கத்திய இசை வாத்தியங்களைக் கொண்டு இசையமைக்கிறோம். கர்நாடக இசையின் நயத்தில் அமைந்த பாடல்களுக்கு மேற்கத்திய பாணி லயத்தைச் சேர்க்கிறோம். நாம் இதுவரை கேட்ட பாடல்களை இதுவரை கேட்காத ஒலிச் சேர்ப்பில் தருகிறோம். நிச்சயம் இது ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.

கர்நாடக இசையில் ஒரு பாடலை என்ன ஸ்ருதியில் பாடுகிறோமோ அதே ஸ்ருதியில்தான் ஃபியூஷனிலும் பாடப் போகிறோம். மேற்கத்திய இசையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நம்முடைய கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைப் புதிய அனுபவமாகத் தருகிறோம். நம்நாட்டில் இருக்கும் இளைய தலைமுறைக்கும் இந்தப் பாணி பிடித்திருக்கிறது.

கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், முத்துத்தாண்டவர், தயானந்த சரஸ்வதி, கல்லல் ராமனாதன் ஆகியோரின் ஒன்பது பாடல்களை இதற்கு முன் வெளியிட்ட கிளாஸிக்கல் வேவ்ஸ் ஆல்பத்தில் பாடியிருக்கிறேன். ஜாஸ், ப்ளூஸ், டெக்னோ ஃபங்க், ராக் அண்ட் ரோல் போன்ற பலவிதமான இசை வடிவங்களைக் கொண்டு இந்தப் பாடல்களுக்கு இசையமைத்திருந்தேன். கலப்பிசையும் மனதைக் கவரும் இசைதான் என்பதை என்னுடைய பாடல்கள் நிரூபிக்கும்'' என்கிறார் கன்னக் குழிச் சிரிப்போடு ஜனனி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com