
இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று சிகிரி. சிங்ககிரி என்பதன் திரிபு இது. 5வது நூற்றாண்டில், காஷ்யபன் என்ற மன்னன் தனது அரண்மனையை இந்த மலைமேல் கட்டி, ஆட்சி நடத்தினான்.
இந்த மலைக்கோட்டையை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இங்குள்ள மலைக்குகை
களில் உள்ள ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களைக் காணவும், கோட்டையைப் பார்க்கவும் நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
மலை உச்சியில் மிகப்பெரிய குளம் உண்டு. பயிர் செய்து சாப்பிடும் அளவுக்கு இடமும் உண்டு. மலையில் வழியும் மழை நீர் ஆங்காங்கே தேக்கப்பட்டு, தேவைப்படும் நேரத்தில் திறக்கப்படும்போது, கீழே உள்ள பூந்தோட்டத்தில் பொங்கு நீர் ஊற்று கிளம்பும். அந்த அளவுக்கு புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி, நீர்மேலாண்மை செய்யப்பட்டுள்ளது. நீர்மாடம், நீர்நிலை, நீர்த்தொட்டி எனப் பலவும் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே இன்று மிச்சமாக இருக்கின்றன. வெறும் கடைக்கால்கள் மட்டுமே மிச்சம். வழிகாட்டிகளின் வார்த்தை ஜாலங்களில் நாம் மனக்கோட்டை கட்டினால்தான் இதை ரசிக்கலாம்.
சீகிரி மலைக்கோட்டை கட்டிய காஷ்யபன் நேரடி அரச வாரிசு அல்ல. இல்லக் கிழத்தியின் மகன். உறவுகளின் ஆதரவுடன் தந்தை தாதுசேனாவை சிறையில் தள்ளிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றுகிறான். மன்னர் பெரும் கருவூலத்தை மறைத்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். காஷ்யபன் தந்தையிடம் கேட்கிறான். "எங்கே மறைத்து வைத்திருக்
கிறீர்?'. மன்னர் தன் மகனை,தான் கட்டிய காலாவேவா அணைக்கு (பெரிய ஏரி என்றும் சொல்லலாம்) அழைத்துச் செல்கிறார். அணையில் இறங்கி இரு கைகளில் நீரை அள்ளியெடுக்கிறார். "இதுதான் நான் சேர்த்த செல்வம். என் கருவூலம்'.
அதே இடத்தில் அப்போதே அவரை வெட்டி, அணைக்கரையிலேயே புதைத்து விடுகிறான் காஷ்யபன். பிறகு தலைநகரை சீகிரிக்கு மாற்றுகிறான். அவனது அரசு அடுத்த 15 ஆண்டுகளில் அழிந்தது. சகோதர யுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்தான் காஷ்யபன். மலைமேல் கட்டிய அரண்மனையை பராமரிக்க ஆளில்லை. பௌத்த துறவிகளுக்கு கொடுத்தார்கள். அவர்களும் இந்தக் கோட்டையைப் புறக்கணித்து விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.