என்னுடைய சங்கீதம் பக்திப்பூர்வமானது!

சிலர் பாடினால், இது எந்த ராகம்? என்ன தாளம்? என்ற
என்னுடைய சங்கீதம் பக்திப்பூர்வமானது!

சிலர் பாடினால், இது எந்த ராகம்? என்ன தாளம்? என்ற ஆராய்ச்சியில் மனம் இறங்கும். சிலர் பாடினால், கண்களை மூடிக் கொண்டு வெறுமனே கேட்கத் தோன்றும். ஓர் இறகு போல் மனம் லேசாகிப் பறக்கும். சாஸ்வதி பிரபுவின் இசை இதில் இரண்டாவது ரகம். கல்லூரி நாட்களிலேயே "எஸ்ஸன்ஸியா' என்னும் பெயரில் இசைக் குழுவை நடத்தியவர்.  நம் ஒவ்வொருவரின் சுயத்தையும் நாமே உணரும் வகையில் சமீபத்தில் "ஹைம்ஸ் டூ தி காட்டஸ்' என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதாலோ என்னவோ எதிரிலிருப்பவரின் மனதறிந்து பேசுகிறார், பாடுகிறார் சாஸ்வதி!

அவரிடம் பேசியதிலிருந்து...

குடும்பப் பின்னணி?
எங்களின் குடும்பமே கலையால் வசமான குடும்பம். இசை, நடனம் போன்ற கலைகளை வசப்படுத்திய குடும்பம். என்னுடைய தாத்தா யக்ஞராமன், பாட்டி ருக்மினி யக்ஞராமன் இருவருமே நன்றாகப் பாடுவார்கள். யக்ஞராமன் பல கலைஞர்களுக்கு கிருஷ்ண கான சபாவின் மூலமாக மேடை அமைத்துக் கொடுத்தவர். அவரை அடியொற்றி என்னுடைய தந்தை ஒய்.பிரபுவும் சபாவில் கலைப்பணி செய்துவருகிறார். தந்தையும் நன்றாகப் பாடுவார். அம்மா ராஜலஷ்மி பிரபு நடனக் கலைஞர். என்னுடைய சகோதரர் பாலசுப்பிரமணியனும் நன்றாகப் பாடுவார். இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவராகப் பிறந்ததற்கு ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

உங்களின் லால்குடி பள்ளி பற்றி...?

எல்லோரின் இசையையும் நான் ரசித்துக் கேட்பேன். ஆனால் லால்குடி ஜெயராமன் அவர்களின் இசையைக் கேட்கும்போது மட்டும் எனக்கு மிகவும் நெருக்கமாக, செüகரியமாக உணர்வேன். எப்போதோ அதைக் கேட்ட உணர்வு எனக்கு மேலோங்கும். இதைப் பற்றி என்னுடைய குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் ஓர் உண்மையைச் சொன்னார்கள். அது, நான் கருவிலிருக்கும் போதே என்னுடைய தாய் அதிகம் கேட்டது லால்குடி அவர்களின் இசையைத் தானாம்!

அவரிடம் பாடிக் காட்டுவதற்காக ஒருமுறை சென்றேன். அவர் வீடு இருக்கும் தெருவை நெருங்கும் போது, ""அப்பா, திரும்பிப் போயிடலாம்பா...'' என்று கடைசியாகக் கெஞ்சிப் பார்த்தேன். பாடி முடித்ததும் அவர் நுட்பமாகச் சொன்ன பல விஷயங்களைக் கேட்டு நான் பேச்சற்றுப் போனேன். மறுநாள் தந்தத்தால் ஆன ஒரு சிறிய பெட்டியை லால்குடி சார் என்னிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அந்தப் பெட்டி முழுவதும் கற்கண்டால் நிரம்பியிருந்தது. சிறிது நேரத்திற்குள் அவர் தொலைபேசியில் பேசினார். ""எப்போதிலிருந்து கிளாஸýக்கு வரப்போகிறாய்?'' என்றார். அதுதான் லால்குடி சார். வகுப்பு எடுக்கும் போது அவ்வளவு கண்டிப்பாக இருப்பார். வகுப்பு முடிந்துவிட்டால் சகஜமாகிவிடுவார். மாணவர்களோடு கடற்கரைக்குச் சென்று அங்கே திரைப்பாடல்களிலிருந்து சாஸ்திரிய சங்கீதம் வரை எல்லாவற்றையும் பற்றி விவாதிப்பார்.  

"ஹைம்ஸ் டூ தி காட்டஸ்' ஆடியோ சிடி வெளியிடுவதற்கான விதை எங்கிருந்து கிடைத்தது?

ஆல்பத்தை வெளியிட வேண்டும் என்பதற்கான விதை எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. ஆனால் முழுக்க முழுக்க வட மொழியிலேயே அமைந்த இந்த படைப்பை தகுந்த முறையில் கொடுப்பதற்கான காலம் இப்போதுதான் சாதகமாக அமைந்தது. கடந்த 2000 ஆண்டு முதல் நான் கச்சேரிகளை செய்துவந்தாலும், எனக்குள் "நாம் திருப்தியாகத்தான் ரசிகர்களுக்கு இசையைக் கொடுக்கிறோமா?' என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அது இந்த சிடியின் வழியாக முழுமையடைந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

"மாத்ரு தேவோ பவ' கான்சர்ட்டில் பாடியவர்களில் நீங்கள் கனமான சாகித்யங்களையே தேர்ந்தெடுத்து பாடியதற்கு என்ன காரணம்?

"அம்மா' என்றவுடனேயே நமக்கு தெய்வக் குழந்தைகளை போற்றிப் பாராட்டிய தெய்வத்தாய் பலரும்தான் நம் நினைவுக்கு வருவார்கள். அப்படிப்பட்ட தெய்வத் தாய்மார்களை போற்றிப் பாராட்டி பெரியவர்கள் பலரும் பாடியிருக்கும் சாகித்யங்களைத்தான் நான் அந்த நிகழ்ச்சியில் பாடினேன்.

இந்த சீசனுக்கு எப்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்?

பக்திப்பூர்வமான சங்கீதம்தான் என்னுடைய நோக்கம். அதேநேரத்தில் என்னுடைய இசை நிகழ்ச்சியில் பலவிதமான வாத்தியங்களும் இடம்பெறும்.

உங்கள் அபிமான பாடகர் யார்?

எல்லாரின் பாடல்களையும் விரும்பிக் கேட்பேன். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும், அவரின் பாடல்கள் தேர்வும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரும் நான் படித்த லால்குடி பள்ளி என்பதும் என்னுடைய ரசனைக்குக் காரணமாக இருக்கலாம்!

வட இந்தியாவில் அவர்களின் பிராந்திய இசை, நாட்டியங்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். தமிழகத்தில் எல்லா வகையான இசை, நாட்டியங்களுக்கும் பரவலான வரவேற்பு இருக்கிறது. ஒரு கலைஞராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழக சபாக்களில் பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளும் அதற்கு ரசிகர்கள் அளிக்கும் பரவலமான ஆதவும்தான் சென்னையை இந்தியாவின் கலாசார தலைநகரமாக்கியிருக்கிறது. இதை ஆரோக்கியமான விஷயமாகத்தான் நினைக்கிறேன்.

திரைப்படங்களுக்குப் பின்னணி பாடும் எண்ணம் இருக்கிறதா?

கார்த்திக் ராஜா இசையமைத்த "உல்லாசம்' படத்தில் சில வரிகளைப் பாடியிருக்கிறேன். திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பு வந்தாலும் நிச்சயம் பாடுவேன்.

இளம் தலைமுறைப் பாடகர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார், ஏன்?

அபிஷேக் ரகுராம். அவரின் கற்பனை வளம், விஷய ஞானம் அபரிமிதமானது.

சாஸ்திரியமான சங்கீதத்துடன் மேற்கத்திய வாத்தியங்களைச் சேர்க்கும் ஃபியூஷன் இசை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கர்நாடக சங்கீதம் மட்டும்தான் எனக்குத் தெரியும். ஆனால் என்னால் இந்துஸ்தானி பாடமுடியும். மேற்கத்திய சங்கீத வாத்தியங்களான கீ-போர்ட், டிரம்ஸ் போன்றவற்றை வாசிக்கத் தெரியும். இவையெல்லாம் நானாகவே கற்றுக் கொண்டவை. நான் கற்றுக் கொண்ட விஷயங்களை பல இசை ஆல்பங்களில் முயற்சி செய்தும் பார்த்திருக்கிறேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கின்றது. "மிஸ்டிக் ஜர்னி' என்னும் ஆல்பத்தில் கலப்பிசைதான் பிரதானமாக இருக்கும்.

வட மொழி சுலோகங்களை மட்டுமே பிரதானப்படுத்தி ஓர் இசை ஆல்பம் வெளியிட்டேன். மன அமைதிக்கு வழிவகுக்கும் ஆத்மார்த்தமான கர்நாடக இசையை மட்டுமே பிரதானப்படுத்தி ஓர் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறேன். இன்னும் பதட்டத்தைக் குறைக்கும் இசை, பல நாட்டு இசை முறைகளைக் கொண்டு அமைத்திருக்கும் "ஸ்பா' போன்ற ஆடியோ சிடிகளையும் வெளியிட்டிருக்கிறேன். எனவே ஃபியூஷனிலும் நல்ல இசையைக் கொடுக்க முடியும்.

இசைத் துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் தொழில் நுட்பப் புரட்சியை இளம் தலைமுறையின் பிரதிநிதியாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் பெருமையாக உணர்கிறேன். எந்தப் பாடல்களையும் அந்த ரிகார்ட் கிடைக்குமா? எந்தக் கடையில் கிடைக்கும் என்று கடை கடையாகத் தேடி அலைய வேண்டியதில்லை. விரல் சொடுக்கினால் பாடலை நமது கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், இணையத்தின் மூலமாகவே இசையைக் கற்றுக் கொள்ளவும் வசதி ஏற்பட்டுவிட்டது.

இதெல்லாம் இன்றைய இளம் தலைமுறைக்குக் கிடைத்திருக்கும் வரங்கள்தான். சந்தேகமே இல்லை. ஆனால் அதேசமயத்தில் குருவின் முன்பாக அமர்ந்து ஒவ்வொரு ஸ்வரத்தையும் கற்றுக் கொள்ளும் அந்த உன்னதமான தருணத்திற்கு ஈடு இணையே இல்லை!

படம்: ப.ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com