நாளும் கதை சொல்லும்ஓவியங்கள்...

புறக் கண்களால் பார்ப்பதையும், அகக்கண்ணில் (மனதில்) கற்பனையாகத் தோன்றுபவற்றை மனதில் நிறுத்தி, அதை காகிதம், துணி, சுவர், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் வெளிப்படுத்தும் கலையே ஓவியக் கலையாகும்.
நாளும் கதை சொல்லும்ஓவியங்கள்...

புறக் கண்களால் பார்ப்பதையும், அகக்கண்ணில் (மனதில்) கற்பனையாகத் தோன்றுபவற்றை மனதில் நிறுத்தி, அதை காகிதம், துணி, சுவர், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் வெளிப்படுத்தும் கலையே ஓவியக் கலையாகும்.

திருச்சியைச் சேர்ந்த தூரிகை ஓவியர்களான கே. ரவி, ஏ. சிவகுமார், வில்லேஜ் மூக்கையா, கீரை. த. சின்னப்பா, டி. ராமமூர்த்தி ஆகியோரின் தூரிகை ஓவியத் தொகுப்புகள் அடங்கிய கண்காட்சிக்கு திருச்சியைச் சேர்ந்த "களஞ்சியம்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கண்காட்சியில் மோனாலிசா தொடங்கி, கற்பனைக் காட்சிகள், இயற்கைக் காட்சிகள், பெண்கள், உழவர்கள், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள், பூக்கள், பறவைகள், வரலாற்றுக் காட்சிகள், வழிபாட்டுத் தலங்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் அனைத்துமே கண்களுக்கு விருந்தானது மட்டுமன்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த "களஞ்சியம்' அமைப்பின் நிறுவனர் எஸ். சுரேஷ்குமாரிடம் பேசினோம்.

""ஓவியக் கலை என்பது மிகவும் நுட்பமான கலை. இக்கலையை  பொதுமக்களிடமும், வருங்கால சந்ததியினரான மாணவ, மாணவிகளிடத்தும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஆவலின்  காரணமாக உதித்தது தான் இந்த ஓவியக் கண்காட்சி.

இதன் சிறப்பு யாதெனில், திருச்சியைச் சேர்ந்த பிரபலமான ஓவியர்களின் ஏறத்தாழ 500 படைப்புகளைக் காட்சிப்படுத்தி இருந்தோம்.

இதில், பென்சில், பேனா கொண்டு வரையப்பட்ட ஓவியம் தொடங்கி வாட்டர் கலர், அக்ரெலிக், ஆயில் பெயிண்ட் என அனைத்து வகையான ஓவியங்களும் அடங்கும். ஒரு சதுர அடி முதல், 3 அடிக்கு 4 அடி அளவு வரை பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

5 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். குறிப்பாக, பள்ளிகளில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

கண்காட்சியில் ஓவியங்கள் விற்பனையும் நடைபெற்றது. விற்பனை என்பது நோக்கமல்ல என்றாலும், ஓவியத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு அதை விற்பனை செய்தோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற ஓவியக் கண்காட்சி இங்கு நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது தான் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி திருச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.

கொல்கத்தா போன்ற நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இரு ஓவியங்கள் இருக்கும். ஆனால், நம் பகுதியில் உள்ள வீடுகளில் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

ஒவ்வொரு ஓவியமும் நம் மனநிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையைச் சொல்லும். ஓவியங்கள் நம்மோடு பேசும் ஆற்றலைக் கொண்டவை.

குட்டீஸ் காலரி:

இந்த ஓவியக் கண்காட்சி தொடங்கி இரண்டாவது நாள் ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் வந்த குழந்தைகள் நாங்கள் வைத்திருந்த காகிதங்களில் அற்புதமான ஓவியங்களை வரைந்தனர். இவற்றையும் காட்சிப்படுத்த எண்ணி, "குட்டீஸ் காலரி' என்ற பெயரில் குழந்தைகள் வரைந்த ஓவியங்களுக்கென தனியாக ஒரு பகுதியை அமைத்தோம். தாங்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்ட குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. பல குழந்தைகள் அற்புதமாக ஓவியங்களை வரைந்திருந்தனர்.

இது தொடக்கம்தான் என்றாலும், இதுபோன்று நிறைய கண்காட்சிகளை நடத்தி மக்களுக்கு ஓவியத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டி, ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு ஓவியமாவது இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் களஞ்சியத்தின் ஓவியப் பயணம் தொடரும்'' என்றார் நம்பிக்கையோடு.

படங்கள்: எஸ். தே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com