சூறைத் தேங்காய் அல்ல... சூறைப் பழம்!

எத்தனையோ திருவிழாக்கள் கிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சேவுகம்பட்டி கிராமத்தில் ஊர் நன்மைக்காக நூதன வகையில் ஒரு திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட
சூறைத் தேங்காய் அல்ல... சூறைப் பழம்!

எத்தனையோ திருவிழாக்கள் கிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சேவுகம்பட்டி கிராமத்தில் ஊர் நன்மைக்காக நூதன வகையில் ஒரு திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலையில் வத்தலகுண்டிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது சேவுகம்பட்டி எனும் கிராமம். இங்கு சோலைமலை அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. ஊர்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இங்குள்ள சோலைமலை அழகர்பெருமாள் கோவிலில் ஊர் பொது மக்கள், "வாழைப்பழத் திருவிழா' என்னும் வித்தியாசமான திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

இத் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் 3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்து வரும் உள்ளூர் மக்கள் திருவிழா சமயத்தில் சேவுகம்பட்டிக்கு வந்து விடுகின்றனர்.

மொத்த ஊரும் ஒன்று சேர்ந்து கூடை கூடையாக வாழைப்பழங்களை தங்களது வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வீதிகளை வலம் வந்து கோவில் வாசலை அடைகின்றனர். பின்பு இப்பழங்களை சூறை (கூடி இருக்கும் பொது மக்கள் முன் வீசி ) விட்டு தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

இந்தத் திருவிழா குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் கூறியதாவது, ""பரம்பரை பரம்பரையாக சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு தை மாதம் 3 ஆம் தேதி இந்த விழாவைக் கொண்டாட கிராம மக்கள் தவறுவதில்லை. இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் மாநிலத்தின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தை மாதத்தில் ஊர் திரும்பி விடுவார்கள். இங்கு சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் வாழைப்பழங்களை வாங்கி அவற்றை கூடையில் சீர் வரிசையைப் போல எடுத்துக் கொண்டு வீதி வலம் வந்து ரெங்கம்மாள் கோவிலில் ஒன்று சேருவர். கூடைகளில் எடுத்து வந்த பழங்களை சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் வைத்து வழிபட்ட பின்னர் அவற்றை ஆலயத்தின் முன் பொது மக்கள் குழுமியுள்ள இடத்தினை நோக்கி வீசி எறிவார்கள்.

தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இறைவனிடம் கேட்பவர்கள் மட்டுமின்றி, ஊர் செழித்து வாழவேண்டும் என்பதற்காக பலரும் இதுபோல் கூடைகளில் பழங்களைக் கொண்டு வந்து சூறை விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு வீசப்படும் பழங்களை ஊர் மக்கள் பிரசாதமாக எடுத்துக் கொண்டு செல்வார்கள். கூடை கூடையாக பழங்களைக் கொண்டு வருபவர்கள் கூட கோவில் பிரசாதம் என்பதால் வீசப்படும் பழங்களைத் தரையில் இருந்து எடுத்துச் செல்லும் நூதனத் திருவிழாவாக இந்த வாழைப்பழத் திருவிழா உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com