ஆடிஸம்: தேவை அன்பான ஸ்பரிசம்!

வானம், கடல் ஆழம் காணமுடியாதது. இதைப் போன்றே ஆழம் காணமுடியாதது மன இறுக்க கோளாறான ஆட்டிஸம்.
ஆடிஸம்: தேவை அன்பான ஸ்பரிசம்!

வானம், கடல் ஆழம் காணமுடியாதது. இதைப் போன்றே ஆழம் காணமுடியாதது மன இறுக்க கோளாறான ஆட்டிஸம். உலக ஆட்டிஸம் (ஏப்ரல் 2) நாளையொட்டி சென்னை, நீலாங்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து "எங்களாலும் எதுவும் முடியும்' என்று சொல்லாமல் சொல்லினர், நீலாங்கரையில் செயல்படும் கிரிசாலிஸ் சிறப்புப் பள்ளியின் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீல உடையில் தோன்றிய இவர்களின் நீலப் புரட்சிக்குப் பின், கிரிசாலிஸ் சிறப்புப் பள்ளியின்

முதல்வர் ரேகா சுப்ரியாவிடம் பேசினோம்:

""கிரிசாலிஸ் சிறப்புப் பள்ளி 2007-ஆம் ஆண்டு முருகதாஸ் அவர்களின் முன்முயற்சியால் ரோஷினிப்ரியா அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்டது. ஆடிஸம் என்னும் மன இறுக்கத்தால் உலகம் முழுவதும் 67 மில்லியன் குழந்தைகள் பாதித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.7 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மற்ற நோய்களைவிட இந்த மன இறுக்கத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம். முன்பெல்லாம் ஆடிஸம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருந்தது. இப்போது அதிகரித்து இருக்கிறது.

உங்களின் குழந்தை நீங்கள் சுட்டும் திசையில் பார்க்கிறதா? உரிய மாதத்தில் தவழத் தொடங்கிவிட்டதா? ஒன்றரை வயதில் மழலை மொழியில் ஒருசில வார்த்தைகளைப் பேசுகிறதா? இரண்டு வயதில் இரண்டு வார்த்தைகள் சேர்த்த வாக்கியங்களைப் பேசுகிறதா? இதற்கெல்லாம் உங்களின் பதில் "ஆமாம்' என்றால், உங்களின் குழந்தைக்கு ஆடிஸம் பாதிப்பு இல்லையென்று அர்த்தம். ஆடிஸம் பாதித்த குழந்தைகளை அறிவதெப்படி? மேற்கண்டவற்றில் எது இல்லையோ அந்தக் குழந்தைக்குப் பாதிப்பு உண்டு என அறியலாம்.

ஆடிஸம் பாதித்த குழந்தைகளுக்கு இயற்கை உபாதைகளைக் கழிப்பதிலிருந்து பசி, உறக்கம் என அவர்களின் எல்லா தேவைகளையும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இந்தப் பள்ளியில் 30 மாணவர்கள் (4 முதல் 14 வயது வரையில் உள்ளவர்கள்) பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு முறையான சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இங்கு அவர்களுக்கு யோகா, பலவகையான விளையாட்டுகள், எண்களை, எழுத்துக்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம். நாம் சொல்வதைக் கேட்டு அந்தச் செயலைச் (ஞஸ்ரீஸ்ரீன்ல்ஹற்ண்ர்ய்ஹப் பட்ங்ழ்ஹல்ட்ஹ்) செய்யும் பயிற்சியை அளிக்கிறோம். இந்தப் பயிற்சியை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் சமூகத்தோடு அவர்கள் இணைந்து செயலாற்றும் எண்ணம் தூண்டப்படும்.

நம்முடைய கண்களை நேரடியாகப் பார்க்கமாட்டார்கள். அவர்களின் உலகம் தனியாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கோ இவர்களைச் சுற்றியே உலகம் சுழலும்! இவர்களின் அன்பான ஆதரவும் ஸ்பரிசமும்தான் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு உளவியல்பூர்வமான மருந்து. எங்கள் பள்ளியிலும் இந்த மருந்து குறையாமல் பார்த்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு குழந்தையின் ஆட்டிஸம் பாதிப்பும் ஒவ்வொருவிதமாக இருக்கும். எங்களின் பள்ளியில் பயிற்சி பெறும் குழந்தைகளை 14 வயதிற்குப்பின் சராசரி பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கும் அனுப்புகிறோம். அங்கேயும் அவர்கள் சிறப்புக் குழந்தைகளுக்கான திறனுடன்தான் இருப்பார்கள். அவர்களின் திறமையும் பலமும் ஏதாவது ஒன்றில் வெளிப்படும். அதை நாம் கண்டுபிடித்து பயிற்சியளிக்க வேண்டும்.

ஆடிஸத்தால் பாதிக்கப்பட்டு பின்னாளில் மேதைகளானவர்கள் பலபேர் நம்மிடையே உண்டு. இன்றைக்கும் ஆடிஸம் பாதித்தவர்கள் ஓவியம், இசை போன்ற நுண் கலைகளில் தங்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய மகனே ஆடிஸம் பாதிப்புக்கு உள்ளானவன்தான். இன்றைக்கு அவன் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. மல்டி மீடியா படித்துக் கொண்டிருக்கிறான். அவன் வரைந்த பல ஓவியங்கள் பிரபல நிறுவனங்களின் வரவேற்பறைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன...'' என்றார் பெருமையுடன் ரேகா.

""கிரிசாலிஸ் சிறப்புப் பள்ளியில் ஒருபக்கம் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளியின் தாழ்வாரத்தில், சில குழந்தைகள் தங்களின் பிஞ்சு விரல்களால் காய்களை நறுக்கி, பக்குவமாக சாண்ட்விச் தயாரித்துக் கொண்டிருந்தனர். எதற்காக இதெல்லாம்?'' என்றோம்.

""சிறப்புக் குழந்தைகளை சமூகப் பணிகளில் இணைக்கும் செயல்களில் ஒன்றாக, இந்தக் குழந்தைகளின் கைப்பக்குவத்தில் தயாரான சாண்ட்விச் போன்ற உணவுப் பண்டங்களை நீலாங்கரை காவல் நிலையத்தில் பணியிலிருக்கும் காவலர்களுக்கு அவர்களைக் கொண்டே வழங்க இருக்கிறோம். அதற்காகத்தான் சாண்ட்விச் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்'' என்றார் பள்ளி ஊழியர் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com