

50-வது படத்துக்கு வாழ்த்துகள் சார்...''
தளர்ந்த நடையிலும் நம்பிக்கை சிரிப்பு சிரிக்கிறார் மணிவண்ணன். ""நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' பற்றி பேசலாம்'' என்றால், ""ஏன் எல்லாவற்றையும் பேசலாமே....'' தோள் தட்டி புன்னகை பூக்கிறார்.
யார் இந்த நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ...?
எப்போதும் பதவியில் இருக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி மக்களுக்காக எதுவும் செய்யாத குள்ளநரிதான் இந்த நாகராஜசோழன். சாதாரண ஒரு அமாவாசை எப்படி எம்.எல்.ஏ. ஆனான். அவனால் இந்த சமூகத்துக்கு எவ்வளவு நஷ்டம் என எடுத்து வைத்த படம் "அமைதிப்படை'. கொஞ்சம் லொள்ளு. கொஞ்சம் ஜொள்லென ரசிகர்களை சிரிக்க வைத்தது. ஆனால், இது வேறு மாதிரி இருக்கும். நாட்டின் இயற்கை வளங்களை அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் அழிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் ஒரு வரிக் கதை.
அரசியல்வாதிகளின் பின்னணியை "அமைதிப்படை' போல் எந்த படமும் கிண்டல் அடித்தது இல்லை. அதன் தொடர்ச்சியாக வரும்
இந்தப் படத்திலும் அதே அமாவாசை அதகளம் இருக்குமா?
இது ரீமேக் படமல்ல. அமைதிப்படையின் தொடர்ச்சிதான் நாகராஜசோழன். நம்மை பாதிக்கிற விஷயங்கள் எல்லாம் ஒரு செய்தியாகத்தான் கடந்து போகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பதையே ஜோக்காக புரிந்து கொள்ளுகிற அளவுக்கு அரசியல் நம்மை மாற்றி விட்டது. புதுப் படம் வெளியானால் முதல் ஏழு நாள்கள் இருக்கைகளை நிரப்புகிற சோற்றுக்கு வழி இல்லாத கூட்டம். டாஸ்மாக் கடையில் கையில் பீருடன் நிற்கும் 15 வயது சிறுவன் என இந்த சமூகம் நிலை தடுமாறி கிடக்கிறது. இப்படி நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அரசியல் விளையாட்டுகளும்தான் இந்தப் படம். அதே அமாவாசையாக சத்யராஜ். நாகராஜ சோழன் எம்.எல்.ஏ. கேரக்டருக்கு அதே "அல்லக்கை'யாக நான். எம்.எல்.ஏ.வாக இருந்த அமாவாசை இந்தப் படத்தில் துணை முதல்வராகி, ஒரு நாள், முதல்வராகிறார். அதிகாரம் கைக்கு வந்ததும் மக்களின் வளங்களைச் சுரண்டி காசு பார்க்கும் புத்தி வருகிறது. அதற்காக மலை கிராமத்து இயற்கை வளங்களை வெளிநாட்டுக்குத் தாரை வார்க்கிறார். பூர்வ குடிகளின் பரிதாப நிலை, பொது நலனுக்கு எதிராக இருக்கிற சத்யராஜை திருத்துகிற லாரி டிரைவர் சீமான் கதாபாத்திரம் என கதை போகும்.
ஓராண்டுக்கும் மேலாக உடல் நிலை சரியில்லையென்று செய்தி.... இப்போது எப்படி படம் இயக்குகிற அளவுக்கு நம்பிக்கை வந்தது...?
நான் என்ன கோமாவிலா இருந்தேன்? முன்பை விட இப்போது அதிக உற்சாகமாகவே இருக்கிறேன். முதுகு தண்டுவடப்பகுதியில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்து, இப்போது ஓரளவுக்கு தேறி இருக்கிறேன். எந்த நொடியும் நிச்சயமில்லை என தோன்றுகிறது. ஆனால் இந்த நொடி வரைக்கும் ஆழமாக, தெளிவாக, சந்தோஷமாக இருக்கிறேன். ஈழத் தமிழர்களுக்காக தெருவுக்கு வந்து போராடிய, நம் மாணவர்களை, மக்களை எல்லா மாவட்டங்களுக்கும் சென்று பார்த்து வந்தேன். என்னுடைய எல்லாப் பணிகளிலும் இன்னும் தீவிரமாகத்தான் இருக்கிறேன். வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன.
அந்த அனுபவங்களில் ஒன்றுதான் இத்தனை ஆண்டு கால நாத்திக வாழ்க்கையை ஆத்திக பாதைக்கு திசை திருப்பியிருக்கிறதா...?
எவன் சொன்னான்? கடவுள் இல்லை என்பதை விஞ்ஞான பூர்வமாக உணர்ந்தவன் நான். என் மகள், மகன் இரண்டு பேருமே இப்போதும் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். என் மனைவிக்கு பிறப்பில் இருந்தே கடவுள் நம்பிக்கை உண்டு. அவரை நான் தடுக்க முடியாது. ""ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு அழைத்து போங்கள்'' என கேட்ட மனைவியிடம் போய், கடவுள் மறுப்பு கொள்கை பேசிக் கொண்டிருக்க முடியாது. கணவனாக என் மனைவியை அந்த கோயிலுக்கு அழைத்துப் போனேன். சாய்பாபா மகானாக வாழ்ந்தவர். உருவ வழிபாட்டை எதிர்த்தவர். அவரின் உருவத்தையே இன்று வணங்குவது காலத்தின் முரண்பாடு. பாபா கோயிலுக்கு போனது கணவனாக என் மனைவிக்கு செய்த கடமை. ஒரு படத்தை முடித்து விட்டு, இடைவெளிவிட்டால் என்னைப் பற்றி அப்போதும் எதாவது பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எதற்கும் பதில் சொல்லாமல் ஒதுங்கி விடுவதால் ஏதேதோ எழுதுகிறார்கள்.
கறை படியாத வைகோ பக்கம் இப்போது நீங்கள் இல்லை... விமர்சனங்களுக்கு மத்தியில் கட்சி நடத்துகிற சீமானை தலைவனாக ஏற்றுக் கொள்கிற பக்குவம் எப்படி வந்தது....?
பொழுதை கழிக்கப் போராடுகிறவர்களுக்கு மத்தியில், போராட்டமே ஒவ்வொரு பொழுதுமாக விடியும் சீமானோடு இருக்க பிடிக்கிறது. கருத்துகளும், போராட்ட வழிமுறைகளும் பிடித்துப் போனால் போராளி எங்கேயும் இருப்பான். சீமான் என் தலைவன் இல்லை. ஏனென்றால் அவர் அந்த கட்சிக்கு தலைவனும் இல்லை. கறை என்பது காசு, பணத்தில் இல்லை. கருத்தியல் ரீதியாகவும் கறை படியலாம். வைகோவைப் பிடிக்கும். அந்தக் கட்சியின் கொள்கைகள் ஈர்த்திருந்தன. மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்துக்கு போன போது, நான் அந்த கட்சிக்கு அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. பி.ஜே.பி. பக்கம் வைகோ போனதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொள்கைகளில் பிடிப்பு இல்லாத போது, மதிமுக பக்கம் நான் இருக்க முடியாது. அப்படி உனக்கென்ன அரசியல் நிலைப்பாடு? என்று கேட்கலாம். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற மேடையில் வைகோ இருந்தால், நானும் அங்கிருக்கிறேன். அதுதான் நான்.
என்ன படம் பார்த்தீங்க... எந்த இயக்குநரை பிடிக்குது...?
"பரதேசி' நல்ல படம். பரதேசி போல ஒரு படம் எடுக்கணும். உண்மையில் பாலா நல்ல கலைஞன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.