பாலைவனத்தில் ஓர் ஆய்வுக்கூடம்!

தமிழகப் பத்திரிகையாளர் குழுவினை சமீபத்தில் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றது சென்னைப் பத்திரிகைத் தகவல் மையம்.
பாலைவனத்தில் ஓர் ஆய்வுக்கூடம்!

தமிழகப் பத்திரிகையாளர் குழுவினை சமீபத்தில் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றது சென்னைப் பத்திரிகைத் தகவல் மையம். நோக்கம் மத்திய அரசுப் பணிகள் செயலாக்கம் அறிவது. போனஸ் வாய்ப்பாக ஜோத்பூர் பயணம் அமைந்தது. அங்குதான் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. அங்கே பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்க்க விழைந்தோம். ஜெய்ப்பூரிலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு ஜோத்பூர் 12.30 மணிக்குச் சென்றோம். எங்களை அழைத்துச்செல்ல டி.ஆர்.டி.ஒ. வாகனங்கள் ரயிலடிக்கு வந்திருந்தன.
 "டி.ஆர்.டி.ஒ' என்கிற பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக் கூடங்கள் என்பது நேருவின் கனவு. விஞ்ஞான ஆர்வம் கொண்டவர்களின் தாகத்தை அவர் நிறைவேற்றினார். இந்தத் துறை வெளிச்சத்துக்கு வந்தது பொக்ரான் அணுகுண்டு வெடிப்பின்போதுதான். பொக்ரான் அணுகுண்டு என்பது அணுகுண்டின் பெயரல்ல. பொக்ரான் என்கிற பாலைவனப்பகுதியில் அணுகுண்டு வெடிக்கப்பட்டதால் ஊரின் பெயருடன் அணுகுண்டும் சேர்ந்து கொண்டது. பொக்ரான் ஜோத்பூருக்கு அருகில் ஜெய்சல்மெர் செல்கிற சாலையில் இருக்கிறது. சாலையில் ஒரு விளம்பரப் பலகை மட்டும் தெரியும். அம்புக்குறியிடப்பட்ட பகுதி பாதுகாப்பு நிறைந்தது. விஞ்ஞானிகள் இதில் இடம்பெறுவது எளிதல்ல என்பதால், அது விஞ்ஞானிகளின் கனவுப்பிரதேசமாகவே இருக்கிறது.
 பாதுகாப்புத் துறை ஆய்வுக்கூடம், பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி - மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆய்வுக் கூடம், நாட்டிலுள்ள 53 ஆராய்ச்சிக் கூடங்களில் மிகவும் வித்தியாசமானது; அளவில் பெரியது. இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 ஆராய்ச்சிக் கூடத்தின் எல்லையில் கடும்பாதுகாப்பு வளையம். நாங்கள் சென்ற வாகனம், ஆராய்ச்சிக் கூடம் வண்டியானதால் அந்த வண்டியை இயக்குபவருக்கான அடையாளத்தைக் காட்டி, கைவிரல் ரேகையைப் பதிவு செய்தவுடன், நுழைவாயில் திறக்கிற ஏற்பாடு. வெளியார் வாகனம் என்றால் உள் நுழைவது மிகவும் கடினம். காலையில் நிகழ்ச்சி நிரல் என்னவென்று அழகாக அச்சிட்டு, இரவே கொடுத்துவிட்டார்கள்.
 காலை 10 மணியளவில் கலந்தாலோசனைக் கூடத்தில் விஞ்ஞானிகள் குழுவினர்களான அஞ்சலி, ரவீந்திரகுமார், வைஜாபுர்கர், டாக்டர் ஆர்.எஸ். ரத்தோர், நிஷீத் சக்சேனா, டாக்டர் விஜயராகவன் ஆகியோருடன் ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர்.வதேரா.
 அவர் பேசும்போது ""ஓர் இருபத்தைந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களாகிய உங்களை இந்த அறையில் சந்திக்கிறோம். அவ்வப்போது தானே செய்தியறிந்து வெளியிடுவார்கள். நேர்காணல் என்பதில்லை. எங்களிடம் எழுதிக்கேட்டு நீங்கள் வந்திருப்பது இதுவே முதல் தடவை.
 பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய கேந்திரமான இந்த ஆராய்ச்சிக் கூடத்தை டி.எஸ். கோத்தாரி 1959}இல் மிகச் சிறிய அளவில் ஆரம்பித்தார். அவரின் அப்போதைய நோக்கம் பாலைவனச் சூழலியல் குறித்தும் ராணுவத்திற்கு தேவையானது குறித்துமான ஆய்வுகளை மேற்கொள்வதுதான். இன்று தேசிய முக்கியத்துவமான ஆராய்ச்சிக் கூடமாக இது உருவாகியிருக்கிறது. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
 

இதன் நோக்கம் என்ன?
 • ராணுவத் தளவாடங்களையும் நிறுவனங்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை - அதற்குரிய கண்டுபிடிப்புகள்.
 • இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் அணுக்கதிர் வீச்சை அறிவது- தப்பித்தல் குறித்த ஆய்வுகள்
 • பாலைவனப்பகுதியில் ஆராய்ச்சிக்கூடம் அமைந்திருப்பதால் - அதன் சூழலியல் -
 அதனைச் சமாளிக்கத் தேவையான கண்டு
 பிடிப்புகள் இவையே முக்கியமானவை.
 பாலைவனச் சூழலியல் குறித்த ஆய்வுகளில் முக்கியமானது நீர் ஆதாரம் அறிவது - அடுத்து வெப்பநிலை - இதற்கடுத்து மண் சார்ந்த ஆய்வு. பாலைவனப்பகுதியில் மழை இல்லை. ஆறுகள் கிடையாது. அப்படியென்றால் நீர் ஆதாரமே இல்லை என்று அர்த்தமாகிவிடாது. பூமிக்கடியில் நீர் கிடைக்கும். ஆனால் கடும் உப்பு கலந்தது. இந்த உப்பு நீரை இந்தப் பகுதியில் பம்பு செட் மூலம் வயல்களில் பாய்ச்சி உப்பு வடிக்கிறார்கள். இது இங்குள்ளோரின் முக்கியத் தொழிலாக இருக்கிறது. ஜோத்பூர் - ஜெய்சல்மீர் சாலையின் இருபக்கங்களிலும் இதனைக் காண முடியும்.
 ஆனால் எங்களது ஆய்வில் உப்பு நீரில் உள்ள உப்பைப் பிரித்து குடிநீராகப் பயன்படுத்தும் ஆராய்ச்சி முக்கியமானது. இந்த ஆய்வின் மூலம் இரண்டு கட்டங்களாக சேர்த்து 134 குடிநீர் ஆக்கும் நிலையங்களை அமைக்க உதவியிருக்கிறோம். பாலைவனப் பகுதியில் உள்ள கிராமங்களில் இந்தத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
 அடுத்து வெப்பம். கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் - இரவிலோ கடும் குளிர். இதனைச் சமாளிக்கத் தக்க ஆய்வுகள் தொடர்கின்றன. கண்டுபிடித்த முடிவுகள் ராணுவத்தில் உள்ள வீரர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கோடை காலத்தை சமாளிக்க குளிர் தரும் கவச ஆடை. குளிர் பிரதேசத்தில் கடும் குளிரைச் சமாளிக்க வெப்பம் தரும் கவச உடையும் வழங்கப்படுகிறது.
 எதிரிகள் இந்தப் பகுதியில் ஊடுருவியதாக வைத்துக்கொள்வோம். முதலில் அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைத்தான் சேதப்படுத்துவார்கள். எனவே அந்தத் தண்ணீர் பருகத்தக்கதா என அறிய வேண்டும். அதேபோன்று தண்ணீர் "கலங்கலாக' இருந்தால் அதையும் ஆய்வு செய்ய வேண்டும். இவற்றுக்கென கண்டுபிடிக்கப்பட்ட "பெட்டிகள்' தயாரித்து அளிக்கிறோம். இதன்மூலம் 4 லிட்டர் முதல் 20 லிட்டர் வரையிலான நீரை ஆய்வு செய்து குடிநீராக்கலாம். கடற்படையினரும் காலாட்படையினரும் இந்த வகை உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். மின்சாரம் இல்லாத இடத்திலும் இயங்கத்தக்க வகையில் இதன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 இதற்கடுத்து "அணுக்கதிர் வீச்சு'. எல்லைப் பகுதியில் அணுக்கதிர் வீச்சு உள்ள பகுதியை அறிவது முக்கியம். அணுக்கதிர் வீச்சை பார்க்க முடியாது - ஆனால் உணரத்தக்கது. அதேசமயம், உணர்ந்து செயல்படுவதற்குள்ளாகவே நமது உடல் அமைப்புகள் செயலிழந்துவிடும். எனவே இதனை அறிய கையில் கடிகாரம் கட்டுவது போன்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டாங்கிகளில் செல்லும்போது அணுக் கதிர் வீச்சை அறியும் கருவி பொருத்தப்பட்டு எச்சரிக்கை அடிப்படையில் "ரேட்மேக்' என்ற கருவி மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இக்கருவி மூலம் கதிர்வீச்சு அளவையும் உடனடியாக அறிய முடியும். கதிர் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்ட உடன் செயற்கைத் தோல் மூலம் உடனடி சிகிச்சைக்கு வழியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிள்ளைப் பேற்றின் பிறகு வெளிப்படும் நஞ்சுக்கொடி மூலம் இத்தோல் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே சொல்லப்பட்ட அனைத்துமே ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வுக்குப் பிறகு இங்குள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை ஆகும்.
 பேரழிவு மேலாண்மைக்கு தற்போது முக்கிய இடம் கொடுக்கிறோம். சுனாமி, பூகம்பம் போன்றவை ஏற்பட்டால் எமது குழு அங்கே சென்று உடனடிப் பணிகளை மேற்கொள்கிறது. நாகப்பட்டினம் செய்யூரில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கிற பணியுடன் அவர்களுக்கு குடிநீர் வசதிக்கு கடல் நீரையே சுத்திகரிப்பு செய்து 70 ஆயிரம் லிட்டர் வழங்கினோம்.
 எதிரிகளின் மற்றொரு இலக்காக விமான ஓடு தளத்தை குறி வைத்து தகர்ப்பது. ஓடுதளம் தேவைப்படும்போது முன்னர் போல் கான்கிரீட் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக பாலிமரைக் கொண்டு "ரன்வே' போடப்படுகிறது. இதற்கு சிமெண்ட் தண்ணீர் தேவையில்லை. சில மணி நேரங்களிலேயே ஓடு பாதை போட்டு முடித்துவிடலாம். பாலிமர் "ஹெலிபேட்' போட பாலியஸ்டர் பொருள் போதுமானது. ஒரு சதுர மீட்டர் போட ஏற்படும் செலவு ரூ. 25 ஆயிரமாகும்'' என்றார் வதேரா.
 

வேறு ஆய்வுகள் நடைபெற்றாலும் அவற்றை வெளிப்படுத்த இயலாதா?
 எங்களுக்கென்று சில பொறுப்புகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. ஆனாலும் "அக்னி' தயாரிப்பிலும், தேஜா, ஆகாஷ், சுதர்ஸன், காவேரி எஞ்சின், அர்ஜுன் டாங்கி - போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சில கருவிகள் எங்களது ஆய்வில் உருவானவை என்று சொல்ல முடியும். அதேபோன்று கடற்படையில் நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் சில எலெக்ட்ரானிக் கருவிகள் எங்கள் ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. இவையெல்லாம் ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
 ஆனால் அப்படி வாங்கும் கருவிகளில் உள்ள தொழில்நுட்பம் என்பது இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தொழில் நுட்பமாக இருந்தது. எதிரிகளுடன் போர் புரிகையில் இது பயன் தராது போகலாம். எனவே தற்போது உலக நாடுகளுக்கு இணையாக, ஒவ்வொரு ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகளுடன் முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்புகளாக நாம் வடிவமைக்கிறோம்'' என்றார் டாக்டர் ஆர்.எஸ். வதேரா. உடன் ஒத்துழைத்த சக விஞ்ஞானிகளில் தமிழர் விஜயராகவனைக் குறிப்பிட வேண்டும்.
 பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக் கூடத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதித்தார் வதேரா. ஒவ்வொரு ஆய்வும் நம்மை மிரளச் செய்தன. ஓர் ஆய்வுக் கூடத்துக்கும் மற்றொரு ஆய்வுக் கூடத்துக்கும் வாகனத்தில்தான் செல்ல வேண்டியதிருந்தது; அவ்வளவு தூரம்.
 

டாக்டர் அப்துல் கலாம் இங்கேதான் பணியாற்றினாரா?
 ""இல்லை. அவர் ஆய்வு செய்த கூடம் ஐதராபாத்தில் உள்ளது. அனைத்து ஆய்வுக் கூடங்களுமே பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவைதான். ஏன் சென்னை ஆவடியில் கூட ரிஸர்ச் லேப் உண்டு. அங்கே நடைபெறும் ஆய்வுகள், கனரக வாகனங்கள் சார்ந்தது. குளோத்திங் ஃபாக்டரியில் நடைபெறும் ஆய்வு ராணுவத்துக்கான உடைகள் சார்ந்தது. இப்படி பலப்பல'' என்றார் விஜயராகவன்.
 இவர் சேலத்துக்காரர். சுமார் 22 ஆண்டுகளாக இங்கே ஆராய்ச்சியாளராக உள்ளார். திரும்பும்போது ஆய்வுக் கூடத்தை சுற்றிப் பார்த்துவிட்டுவந்த எங்களுக்கு மதிய விருந்தளித்தார் டாக்டர் வதேரா. விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உண்ட உணவு இதுவரை அறியாத சுவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com