

ரத்துக்குப் பெயர்போன வாள்வீச்சு விளையாட்டில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று சொல்லும் அளவுக்கு பதக்கங்களைக் குவித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த 20 வயது நிவேதா. குறிப்பாக "ஃபாயில்' என்று சொல்லக்கூடிய தனிநபர் வாள்வீச்சில் இவரை "ஸ்பெஷலிஸ்ட்' என்றே சொல்லலாம்.
ஆரம்பத்தில் தட களத்தில் ஆர்வம் காட்டிய இவர், 1,500 மீ. ஓட்டப் பந்தயத்தில் தடம்பதித்து பதக்கங்களைக் குவித்த பிறகு, பயிற்சியாளரின் அறிவுரையால் வாள்வீச்சில் காலடி எடுத்து வைத்து அதிலும் தனது வலுவைக் காட்டியிருக்கிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் சரசரவென வாளை சுழற்றி எதிராளியை விரைவாக வீழ்த்திய நிவேதாவின் வேகத்தைப் பார்த்தபோது சற்று வியப்பாகத்தான் இருந்தது.
சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மாணவியான நிவேதா, பயிற்சியை முடித்துவிட்டு கையில் வாளோடு வந்தார். அப்போது அவரிடம் பேசியபோது, வாளைச் சுழற்றுவது போலவே, நம்முடைய கேள்விகளுக்கும் வேகமாக பதில்களை சுழற்றினார்.
வாள்வீச்சுப் போட்டியில் எப்படி ஆர்வம் வந்தது?
டி.இ.எல்.சி. மேக்தலின் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தபோது 1,500 மீ. ஓட்டத்தில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது. பள்ளிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான போட்டியில் 1,500 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றேன்.
அப்போது அதைப்பார்த்த எனது ஆசிரியர் சேவியர், "உன்னால் வாள்வீச்சுப் போட்டியில் சாதிக்க முடியும். ஒலிம்பிக் விளையாட்டான அதில் பங்கேற்றால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நேரு உள் விளையாட்டரங்கிற்கு சென்று வாள்வீச்சுப் போட்டியைப் பார்த்துவிட்டு முடிவு செய்' என்று என்னிடம் கூறினார்.
பின்னர் எங்கள் பள்ளியில் இருந்து என்னையும் சேர்த்து 7 பேர் வாள்வீச்சுப் போட்டியை நேரில் சென்று பார்த்தோம். அது எங்களுக்குப் பிடித்துப் போகவே 7 பேரும் அதில் குதித்தோம். ஆனால் இப்போது நான் மட்டும் வாள்வீச்சுப் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
12-ம் வகுப்பு படித்தபோது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெண்கலம் வென்றேன். அதன் பிறகு அண்ணா ஆதர்ஷ் கல்லூரிக்கு வந்தபிறகு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சிறந்த தமிழக வீராங்கனைக்கான விருதையும் பெற்றிருக்கிறேன். இது தவிர அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையிலான ரேங்கிங் போட்டிகளில் 3 முறை பங்கேற்றுள்ளேன். அதில் முறையே 8, 5, 3-வது இடங்களைப் பிடித்திருக்கிறேன்.
உங்களின் ரோல் மாடல் யார்?
காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலம் வென்றவரான பவானி தேவிதான் என்னுடைய ரோல் மாடல். அவரைப் போன்று சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
வாள்வீச்சில் தங்களின் இலக்கு?
ஒலிம்பிக் ஒன்றே எனது இலக்கு. இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. எனது பெற்றோர் எனக்கு முழு ஆதரவாக உள்ளனர். இதுதவிர நான் படிக்கும் கல்லூரியும் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறது. எங்களின் உடற்கல்வி ஆசிரியை சுகன்யாவின் முயற்சியால் இலவசக் கல்வியைப் பெற்றிருக்கிறேன். அதேநேரத்தில் எங்களுக்கு பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வாள் போன்ற விளையாட்டுக் கருவிகளை வாங்குவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.