

கலைஞர் குடும்பத்தின் இன்னொரு கலை வாரிசு கிருத்திகா உதயநிதி. கிருத்திகாவின் புதிய அடையாளம்... இயக்குநர்! "வணக்கம் சென்னை' என தலைப்பிலேயே கவனம் ஈர்த்து தன் முதல் படத்தை உற்சாகமாக இயக்கி கொண்டிருக்கிறார்.
""எந்த கனவும் பெரிதாக இல்லை. கல்யாணம், குழந்தை வளர்ப்பு என அடுத்தடுத்த கட்டங்களுக்கு போன போது, பல விதமான சினிமாக்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகையாக ஒரு படத்தின் பலம், பலவீனம் என்னவென்று ஆராயும் பக்குவத்துக்கு வந்தேன். அப்படி எழுந்த விமர்சனங்கள் என்னை தீவிர சினிமாவுக்குள் கொண்டு வந்தது. குறும்படம் ஒன்றை இயக்கினேன். உணர்வுப்பூர்வமான சில விஷயங்களை அதில் அதற்குரிய மொழியில் எடுத்து வைத்திருந்தேன். அதை போல் வேறுபட்ட ஓர் உணர்வை சினிமாவில் கொண்டு வர எண்ணம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் மனசுக்குள் விழுந்த கதையை, சிறப்பான அம்சங்களுடன் திரைக்கதையாக்க பல வித முயற்சிகள் எடுத்தேன். அந்த முயற்சிகளின் மொத்த பிரதிபலிப்பாக இந்த "வணக்கம் சென்னை' இருக்கும்.''
சிவா - ப்ரியா ஆனந்த் காட்சிகளைப் பார்க்கும்போது, காதல்தான் பிரதானமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. இருந்தும் "வணக்கம் சென்னை' என்கிற பெயர் வேறு விதமாக யோசிக்க வைக்கிறதே...?
சந்தேகமே வேண்டாம். காதல் கதைதான். வழக்கமான காதல் படங்களிலிருந்து பெரிதாக மாற்றங்கள் இருக்காது. ஆனால் அதை கொடுக்கும் விதம் மாறும். சின்ன சின்ன தருணங்களில் ஒளிந்திருக்கும் ஒரு காதலில் நான் கொஞ்சம் யதார்த்த லைஃப் சேர்த்திருக்கிறேன். லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் ப்ரியா ஆனந்துக்கும், தேனி பக்கத்திலிருந்து சென்னைக்கு வரும் சிவாவுக்கும் ஒரு சந்திப்பில் காதல். அந்த காதல் கொடுக்கும் சந்தோஷம், கவலை எல்லாவற்றையும் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான பேக்கேஜில் கொண்டு வந்திருக்கிறேன். சென்னையில் எப்போதுமே ஒரு கலவையான வாழ்க்கை இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனிப்பட்ட முகம். ஆனால் எல்லோருமே இருக்கிற இயல்பை விட்டு விட்டு வேறு இடத்துக்கு முயற்சிப்போம். அப்படி ஒரு முயற்சி அவர்களின் காதலை எந்த இடத்துக்கு கொண்டு போனது, என்பதுதான் இந்த கதையின் முக்கியமான இடம்.
இதில் சிவா எப்படி பொருந்தி வருகிறார்?
முதலில் ஜீவாதான் இந்த கதைக்கு பொருந்தி வந்தார். எல்லாம் சரியாக வந்த நேரத்தில் அவரிடம் கால்ஷீட் இல்லை. சிவாவிடம் போய் கதை சொன்னால், ""இந்த கதையில் இருக்கும் ரொமான்ஸ் எனக்கு சரி வருமா?''ன்னு கேள்வி கேட்டார். "எதிர்பார்க்காத இடத்திலிருந்து எதிர்பார்ப்பதுதான் சினிமா' என அவரை சமாதானப்படுத்தி கதைக்குள் கொண்டு வந்தோம். ப்ரியா ஆனந்த் இந்த கதைக்கு சரியான நடிகை.
காதல்ன்னு பேசும் போது... உதயநிதிக்கும் உங்களுக்குமான காதலும் ஞாபகத்துக்கு வருகிறது...?
ஆமாம். எங்கள் காதலும் சென்னை காதல்தான். படம் எடுக்க வேண்டும் என முடிவானதும் நாம் பார்த்து, ரசித்தவற்றை படமாக்க ஆசை வரும். இல்லையென்றால் நம் வாழ்க்கையைப் படமாக்க முடிவெடுப்போம். இந்த இரண்டுமே இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. எனக்கும் உதய்க்குமான காதலில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. காமெடியாகவும், கவலையாகவும் கலைந்து போன சில தருணங்களை இங்கே கொண்டு வந்திருக்கிறேன். முதன் முதலில் உதயிடம்தான் கதை சொன்னேன். ஆனால் வெளியில் இருந்து ஒரு தயாரிப்பாளரை வைத்துதான் படம் எடுக்கும் முடிவில் இருந்தேன். சில விஷயங்கள் "ரெட் ஜெயண்ட்' தயாரிப்பிலேயே படம் வருகிற நிலைமையை உருவாக்கி விட்டது.
சந்தானம் காமெடிக்காகவே கோடம்பாக்கத்தில் கதை உருவாகும் டிரெண்ட் வந்திருக்கிறது...... இதிலும் சந்தானம்தான் மொத்த கைத்தட்டலையும் வாங்குவாரா...?
காமெடி மட்டும்தான் என் ஸ்கிரிப்ட் ஸ்டைல். அதை சரியாக செய்திருக்கிறார் சந்தானம். படத்தின் ஆரம்பப்புள்ளி முதல் முடிகிற இடம் வரைக்கும் சந்தானம் இருப்பார். இதற்கு முன்பு சந்தானம் செய்த விஷயங்களை இதிலும் காட்டினால் போரடிக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் எந்த பஞ்ச் டயலாக்கும் அவருக்கு கிடையாது. ஆனால் அதை மீறி அவர் பேசுகிற இடங்களில் கைத்தட்டல் அள்ளும்.
தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களின் வருகை அரிதானது... அப்படியே வந்தாலும் நிலைத்து நிற்காமல் போவதற்கு காரணம் என்ன என்பதை கண்டு பிடித்து இருப்பீர்களே...?
இயக்குநர்கள் பலருக்கும் இந்த சினிமா சவால் விடுகிற விதத்தில் இருக்குமா...? உங்களுக்கென தனி ஸ்டைலை இந்த படம் உருவாக்குமா...? என்றெல்லாம் என்னிடம் கேள்விகள் வைக்கப்படுகிறது. இந்த கேள்விகளை எதிர்கொள்ளும் போது பயமாகவும் இருக்கிறது. சில பேர் ""பெயரை மட்டும் போட்டு கொண்டு வேறு ஓர் இயக்குநரை வைத்து படமெடுத்து விட்டீர்களா...''? என்றெல்லாம் கேட்கிறார்கள். பெண் இயக்குநர்கள் மீதான பார்வை இந்த அளவுக்குதான் சினிமாவில் இருக்கிறது. சினிமாவில் சில விஷயங்கள் பெண்களுக்கு பிடிபடாமல் போனதற்கு காரணம் என்னவென்று கண்டுபிடிக்க எனக்கு நேரம் இல்லை. எனக்கொரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நான் பயன்படுத்தும் விதத்தில் என் பயணம் இருக்கிறது. மாமாவுக்கு (ஸ்டாலின்) படத்தின் பாடல்களை போட்டு காண்பித்தேன். ""உன்னிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை'' என்றார். இது மாதிரியான ஆச்சரியங்களை அடுத்தடுத்து உருவாக்கும் எண்ணம் வந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.