போராட்டம் ஆரம்பம்!

"வீரன்', "தீரன்', "சுராங்கனி' என ஏகத்துக்கும் தலைப்புகள்.... ஆனால் பில்டப் இல்லாமல் அஜித் படத்துக்கு பிடித்துள்ள தலைப்பு "ஆரம்பம். அஜித்துக்கு விஷ்ணுவர்தன் இயக்கும் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்.
போராட்டம் ஆரம்பம்!
Updated on
3 min read

"வீரன்', "தீரன்', "சுராங்கனி' என ஏகத்துக்கும் தலைப்புகள்.... ஆனால் பில்டப் இல்லாமல் அஜித் படத்துக்கு பிடித்துள்ள தலைப்பு "ஆரம்பம். அஜித்துக்கு விஷ்ணுவர்தன் இயக்கும் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல். அந்த சந்தோஷ சாரலின் பிரதிபலிப்புகள் இப்போதும் விஷ்ணுவின் ஒவ்வொரு வார்த்தையிலும்.
 ""கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அதிசயமாக அடுத்தடுத்து நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த நினைப்பு எனக்கு இல்லை. அப்படி வராமல் இருந்ததுதான் நல்லதென இப்போது தெரிகிறது. இதுவரைக்கும் எடுத்த சில காட்சிகள் பெரிதாக நம்பிக்கை தருகின்றன. ""அஜித்துக்கு நீங்கள் என்ன செய்தாலும் பிடிக்கும்...'' என்று சொல்கிற வார்த்தைகள் காதில் விழுகிறது. அந்த வார்த்தைக்கு நம்பிக்கையாக, சத்தியமாக இன்னும் மீதம் இருக்கிற நாள்களில் உழைக்க வேண்டும்.''
 அஜித்துக்கு நீங்கள் "பில்லா'வில் போட்ட கணக்கு சரியாக வந்தது.... அந்த எதிர்பார்ப்பு கணக்கு இப்போது இன்னும் பன் மடங்கு ஏறியிருக்கிறது.... இந்த கணக்கும் சரியாக வருமா....?
 "பில்லா'வின் வெற்றி வேறு மாதிரி. எல்லோருக்கும் அது நினைவுகளாக மாறியிருந்தது. அஜித்தின் ஒவ்வொரு அசைவுக்கும் கிடைத்த கைத்தட்டல் நானே எதிர்பார்க்காதது. நான் பெரிதாக மதிக்கும் பல இயக்குநர்கள் "பில்லா'வின் மேக்கிங் பார்த்து விட்டு வாழ்த்து சொன்னார்கள். பாராட்டு எஸ்.எம்.எஸ்.களால் இன்பாக்ஸ் நிறைந்திருந்தது. அது மனசுக்கும் பெரிய நிறைவு. இங்கே எல்லாம் வேற. அஜித் சாரின் பக்குவம் முன்பை விட வியக்க வைக்கிறது. ""கோட், சூட், கூலிங் க்ளாஸ் இங்கேயும் உண்டென'' கதை சொல்லியதும், ""விஷ்ணு நீங்களும் நானும் சேர்ந்தா ஆடியன்ஸ் வேற ஃபீல் பண்ணனும். கேங்ஸ்டர் கதைன்னு அவங்களுக்கு பளீச்சென புரிஞ்சுடும்''ன்னு சொன்னார். அந்த நினைப்பை இது மாற்றும் என்ற நம்பிக்கையில் கதை சொன்னேன். கேட்ட பின்னர், ""ஆமாம் இது வேற மாதிரி இல்ல''ன்னு சொன்னார். அஜித்தை எல்லோருக்கும் இன்னும் பிடிக்கும். எல்லா வயதுக்கும் பிடிக்கும். நான் நிச்சயம் ஒரே மாதிரியான படங்கள் செய்ய மாட்டேன். "பில்லா'வின் வெற்றி அஜித் ரசிகர்களின் பல்ஸ் எப்படியென்று காட்டியது. அதை அப்படியே வேறு ஒரு லெவலுக்கு கொண்டு வந்திருக்கிறேன். அது மட்டுமேதான் இலக்கு. எந்த படமாக இருந்தாலும் என் அதிகபட்ச சக்தியை தருவேன். அஜித் படத்துக்கு இன்னும் ஒரு படி மேலே போய் உழைப்பேன். அதைத்தான் நீங்கள் கணக்குன்னு சொல்றீங்க.
 கதைக்கு டைட்டில் பிடிக்கவே இவ்வளவு அதீத தாமதம் தேவைதானா... "சிங்கம்', "தலைவா'ன்னு மற்ற ஹீரோக்கள் மாஸ் டைட்டில் பிடிக்கும் போது... அதென்ன அஜித்துக்கு ஆரம்பம்...?
 படப்பிடிப்புக்கு கிளம்பும் போதே, தலைப்பு பற்றி நிறைய யோசித்து பேசினோம். ஆனால் அப்போது நிறைய பேச நேரம் இல்லை. ஆறு மாதத்தில் படத்தை முடித்து விட்டு, வந்து பேசலாம்ன்னு போனால், திட்டமிட்டதை தாண்டி நேரம் தேவைப்பட்டது. அதற்குள் ஏகப்பட்ட தலைப்புகளை மீடியாக்களும், ரசிகர்களும் வைத்து விட்டார்கள். அதுவே எங்களுக்கு பெரிய பப்ளிசிட்டியா மாறி விட்டது. மாஸô, கிளாஸô பேர் வைக்கத்தான் ஆசை. கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான பெயர்கள் அடங்கிய பட்டியல் இருந்தது. அஜித் சார்தான் ""கதைக்கு பொருத்தம் இல்லாத தலைப்பை வைத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். கதைக்கு பொருந்துகிற மாதிரி டைட்டில் வையுங்கள்'' என்றார். அதுதான் இந்த "ஆரம்பம்'. கதைக்கு எப்படி பொருந்தும் என்றால்.. கதைப்படி அஜித் சார் ஒரு விஷயத்தை ஆரம்பிப்பார். அது பெரிய போராட்டத்துக்கான ஆரம்ப புள்ளி. அந்த புள்ளிதான் மொத்த படத்துக்குமான திரைக்கதை. கியூபா புரட்சிக்கு சேகுவேராவின் மோட்டர் சைக்கிள் பயணம்தான் ஆரம்பம். அது மாதிரியான புள்ளிதான் இந்த "ஆரம்பம்'.
 கதை பற்றி பல விதமாக பேசுறாங்களே....?
 இப்போதைக்கு நான் எதுவும் பேச முடியாது. இன்னும் பெரிய வேலைகள் பாக்கி இருக்கிறது. விரைவில் டீஸர் வரும். அதுவே உங்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைக்கும். "மங்காத்தா'வில் பார்த்த அதே லுக் அஜித்துக்கு. ஒவ்வொரு காட்சிக்கும் அந்த அளவுக்கு உழைப்பு. வரவேற்பும், கிடைக்கப் போகிற கைத்தட்டலும் மகத்தான விஷயமாக இருக்கும். அஜித் தாண்டி எல்லா ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். அதற்கான விஷயங்கள் அட்டகாசமாக அப்படியே அசலாக வந்திருக்கிறது. ஸ்டில்ஸ் பார்த்து விட்டு, ""மங்காத்தா' மாதிரி இருக்குமோ''ன்னு நிறைய பேர் கேட்கிறார்கள். "மங்காத்தா'வுக்கு முன்னாடியே அந்த கேஷூவல் லுக்கை நான்தான் பிடித்தேன். ஆனால் வெங்கட்பிரபு முந்திக் கொண்டார். இயல்பான சில விஷயங்கள் நன்றாகவே அமைந்து வந்திருக்கிறது. அதனால் கதை பற்றிய சுவாரஸ்யங்களை இப்போது உடைத்து பேச முடியாது.
 நயன்தாரா, டாப்ஸியை விடுங்க... அஜித் - ஆர்யா ஸ்டார் காம்பினேஷன் வழக்கமான சினிமா டிரெண்டுக்குதானா...?
 ஆர்யா வில்லன் வேடம் இல்லை. இன்னும் தீவிரமா கதைப் பற்றிய பேசினால்... கதைக்குள் ஹீரோ, வில்லன் இந்த இமேஜ் இருக்கவே இருக்காது. ஆனால் ஆர்யாவுக்கு சர்ப்ரைஸ் இடம். அஜித், ஆர்யா இந்த இரண்டு அனுபவங்களும் யாரையும் விட்டு விலகாது. அதே போல் குதர்க்கமான வசனங்கள், வம்படியாகத் திணிக்கும் பஞ்ச் டயலாக்குகள் எதுவுமே கிடையாது. ""துப்பாக்கி வைத்திருக்கிறவன் பேச மாட்டான்'' என்கிற மாதிரி காட்சியின் இடத்துக்காக எழுதப்பட்ட வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்தும்.
 நீங்களும், அடுத்தடுத்த பயணங்களுக்கு ஆர்வமாவே இருக்கீங்க... வெற்றிகளும் அந்நியமில்லை... எப்படியிருக்கு... இந்த இடம்...?
 என் நேர்மையான காத்திருப்புகளுக்கு கிடைத்த ஆசீர்வாதம் இது. விருதுகள் எல்லாம் வேறு விஷயம். சில படங்களை பார்க்கும் ""நாமெல்லாமே எங்கேடா இருக்கோம்'' என்று தோன்றும். என்னுடைய இருப்பை காட்ட வேண்டும் என்கிற ஆதங்கம்தான் இந்த போராட்டம். நிறைய பேர் நல்ல வார்த்தைகள் சொல்றாங்க. அஜித் மாதிரி, ஆர்யா மாதிரி நல்ல மனுஷங்க கூடவே இருக்காங்க. காசு, பணத்தைத் தாண்டி இதுவெல்லாம்தானே முக்கியம். இதற்காக இன்னும் எவ்வளவு தூரமும் போகலாம்ன்னு தோன்றுகிறது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com