

"ரகளபுரம்' போஸ்டர்களில் ரகளையாக சிரிக்கிறார் கருணாஸ். ""ஆமாம், ஆச்சரியமான அடுத்தடுத்த இடங்கள் காத்திருக்கிறது. எட்டி பிடிக்க வேண்டிய உயரங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. காமெடி ரேûஸயும் கவனிக்க வேண்டும். நடிப்பிலும், பக்குவத்திலும் நான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் இது. அதனால்தான் ரொம்பவே சிரத்தை எடுத்து உழைக்கிறேன்.'' வழக்கமான அடையாளங்களை துடைத்தெறிந்து பேசுகிறார் கருணாஸ்.
காமெடியில் ஒரு நல்ல இடம் கிடைப்பது அரிதானது... ஆனால் கோடம்பாக்கம் சுற்றி நீங்கள் ஹீரோவாக நடிக்கும் போஸ்டர்களே அதிகமாக இருக்கிறது... என்ன ப்ளான்...?
நேர்மையான உழைப்பால் கிடைத்த இடம் இது. சினிமாவைத் தவிர்த்து நான் எதுவும் பேசுவது இல்லை. பேச வேண்டிய செய்திகளை என் பாத்திரங்களின் மூலம் மட்டுமே பேசுகிறேன். சினிமா கனவு சின்ன வயதிலிருந்தே உள்ளுக்குள் இருக்கிறது. நடிப்பு, ஆடிப் பாடுவது என 10 வயதில் இருந்தே மேடைகளில் இருக்கிறேன். அதனால் ஒவ்வொரு ரசிகனின் பல்ஸ் என்ன என்பது எனக்கு தெரியும். என் சினிமாக்களின் முதல் ரசிகன் நான்தான். "திண்டுக்கல் சாரதி', "அம்பாசமுத்திரம் அம்பானி' என ஹீரோ அவதாரம் எடுத்த போது, ""இவனுக்கு எதற்கு இந்த வேலை?'' என பேசியவர்கள் நிறைய பேர். அந்த இரண்டு சினிமாக்களின் வெற்றியும் எதிர்மறையாக நினைத்தவர்களுக்கு பாடம் தந்தது. நின்ற இடத்திலேயே நின்றிருந்தால், நான் ஒரு வேளை சினிமாவில் கூட இல்லாமல் போயிருக்கலாம். ஏதோ குக்கிரமாத்தில் இன்னும் ஆடி, பாடிக் கொண்டு காலத்தைக் கழித்திருப்பேன். என் வட்டமும் சுருங்கி இருந்திருக்கும். முயற்சி, அதற்கான உழைப்புதான் என்னை இந்த இடத்துக்கு கூட்டி வந்திருக்கிறது. இது என் சினிமாவின் அடுத்த கட்டம். எனக்கு நானே என் திறமையை உரசிப் பார்க்கும் ஆய்வு. அணையை உடைத்து விட்டது மாதிரி இனிதான் ஆச்சரியமான இடங்களுக்கு போகப் போகிறேன்.
அதென்ன "ரகளபுரம்'...?
காமெடி படம்தான். ஒவ்வொருத்தரும் ஓர் இடத்துக்கு ஆசைப்பட்டிருப்போம். திடீரென்று சில பேருக்கு திறமைகளைத் தாண்டிய இடம் கிடைக்கும். அப்போது ஏற்படும் பிரச்னைகளை காமெடி சம்பவங்களாக தொகுத்து வந்திருக்கிறது "ரகளபுரம்'. வடிவேலு அண்ணனுக்கு பல படங்களில் காமெடி டிராக் எழுதிய ராம்தான் இயக்குநர். எந்த பிடிமானமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென்று போலீஸ் வேலை. அந்த வேலையில் அவன் எப்படி பரிணமித்தான் என்பதுதான் திரைக்கதை. இதுவரைக்கும் வந்த என் படங்களில் இது வேறு மாதிரி இருக்கும். முந்தைய படங்களில் கதைகள் வைத்து காமெடி செய்திருப்போம். இதில் முழுக்கவே காமெடிதான்.
நம்பகமான தயாரிப்பாளர்கள் சினிமா எடுக்க தயங்குகிற நேரத்தில்... எல்லா படங்களுமே சொந்த தயாரிப்பாக இருக்கிறதே...?
என்னை வைத்து நான்தான் சோதனை செய்ய முடியும். "சந்தமாமா' படமெடுத்து விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என எல்லோருக்குமே நஷ்டம். இருந்தாலும் எவ்வளவு நஷ்டம் என ஆராய்ந்து பணத்தைப் பிரித்துக் கொடுத்தேன். சினிமாவை தவிர எனக்கு வேறு வேலை தெரியாது. ரசிகனை ஏமாற்ற வேண்டும் என்ற நினைப்பு எனக்கு துளி கூட கிடையாது. அப்படி நினைத்தால் எந்த வெற்றியும் கைக் கூடாது. இத்தனை வருஷமாக நமக்காக நடித்து, உடலை வறுத்தி, சந்தோஷப்படுத்திய கமல் சாருக்கு "விஸ்வரூபம்' படத்தில் பிரச்னை வந்த போது, அதை தன் பிரச்னையாக எடுத்துக் கொண்ட நல்ல ரசிகர்கள் உலகத்தில் எந்த மூலையிலும் கிடையாது. நெஞ்சு
துடிக்க கதறிய ஒவ்வொருவரின் கண்ணீர் துளிகள்தான் கமல் சாருக்கு சினிமாவில் கிடைத்த பெரிய சம்பளம். கமல் சாரும் ஒவ்வொரு படத்திலும் ரசிகனுக்கு விருந்து வைக்கிறார். நானும் அப்படியோர் இடத்துக்குதான் ஆசைப்படுகிறேன். "ரகளபுரம்' படத்தில் எடுத்து வைக்கும் ஒரு விஷயம், பெரிய விவாதத்துக்கு வரும்.
ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அவர் இருக்கும் போதே பகிரங்கமாக பேசியிருந்தீர்களே...? இது மாதிரி பல இடங்களில் உணர்ச்சி வசப்படுவதுதான் உங்கள் இயல்பா?
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நான் ரஜினிக்கு ரசிகன். இப்போதும் அதுதான் என் கலர். இத்தனை வருஷம் கழித்தும் ரஜினிக்கு இருக்கும் மாஸ் யாருக்கும் கிடையாது. போன பிறந்த நாள் விழாவில் ரஜினியின் ரசிகனாக மேடையில் பேசினேன். அணையை உடைக்கிற வெள்ளம் மாதிரி மனசுக்குள் இருந்து வந்தது அது. ரஜினியும் தன் ஸ்டைலில் அதை ரசித்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லுகிறேன். ""சிகரெட், மதுவுக்கு நான் அடிமையாகி விட்டேன். நீங்கள் யாரும் அதற்கு அடிமையாக வேண்டாம்...'' என ஒரு தலைவனாக ரஜினி கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டு போதை பழக்கத்தை விட்ட இளைஞர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ரஜினியின் வார்த்தைக்கு எவ்வளவு பெரிய க்ரேஸ். இனி எந்த நடிகனுக்கும் இதுமாதிரி அமையாது. அதை பொது வாழ்வில் இறங்கி சொன்னால் எப்படியிருக்கும்...? இது கூட உணர்ச்சி வசப்பட்ட பேச்சுதான். இருந்தால் இருக்கட்டுமே!
சந்தானம் முன்னணி இடத்தில் இருக்கிறாரே...?
நல்ல நேரம், காலம் எல்லாம் எப்போது வரும் என்று தெரியாது. "சந்தானம் பற்றி பேசினால் கருணாஸþக்குப் பொறாமை...' என்று சொல்லி விடுவார்கள். நான் யாரைப் பற்றியும் தவறாகப் பேசியது இல்லை. முன்னணி இடத்துக்கு யாரும் ஆசைப்படலாம். அதைக் கொடுப்பதும், தூக்கிப் போடுவதும்
ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.
வடிவேலும் நடிக்க வந்து
விட்டாரே...?
வரட்டும்... வரட்டும்.. நல்லாவே. வடிவேலு அண்ணன் உன்னதமான கலைஞன். கிட்டத்தட்ட 20 வருஷமாக எல்லோரையும் சிரிக்க வைக்கும் படைப்பாளி. அவருக்கு ஒரு பிரச்னை வந்தபோது, எல்லோருக்குமே வருத்தம்தான்.
வடிவேலு அண்ணன் அரசியல் பக்கம் திரும்பியதும், அரசியல் அவரை ஈர்த்ததும் தவிர்க்க முடியாத ஒன்று. எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் வடிவேலு அண்ணனை பிடிக்கும். அவர் காமெடிக்கு பெரிய கூட்டமே இருக்கிறது. ஆனால் எனக்கு விவேக் அண்ணனைத்தான் பிடிக்கும். வடிவேலு அண்ணன் நடிக்க வந்திருப்பது என்னை மாதிரியான ஆள்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அண்ணன் நிச்சயம் எனர்ஜியாக வருவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.