லண்டனில் மூலிகை மருத்துவம் செய்யும் தமிழ்ப் பெண்!

இங்கே சென்னையில் தெருவுக்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அலோபதி டாக்டர்கள் கிளினிக் நடத்திக் கொண்டிருக்கையில், லண்டனில் மூலிகை மருத்துவமா என்ற வியப்பு எழாமல் இருக்காது.
லண்டனில் மூலிகை மருத்துவம் செய்யும் தமிழ்ப் பெண்!

இங்கே சென்னையில் தெருவுக்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அலோபதி டாக்டர்கள் கிளினிக் நடத்திக் கொண்டிருக்கையில், லண்டனில் மூலிகை மருத்துவமா என்ற வியப்பு எழாமல் இருக்காது. ஆனால் முன் எப்போதையும் விட இப்போது இங்கிலாந்தில் - குறிப்பாக லண்டன் நகரில்- மூலிகை மருத்துவத்துக்கு பெரும் வரவேற்பு. தஞ்சாவூரில் படித்து வளர்ந்த ஏஞ்சலா ஜெகந்நாதன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்மணி இந்த மருத்துவத்தில் கொடிகட்டிப் பறக்கிறார். அதுவும் முதல் ஐந்து இடங்களில் அவருடைய பெயரும் புகழ் பெற்றிருப்பதும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
 மூலிகை மருந்துகளைத் தவிர, இவர் கிளினிக்கில் "கொலானிக் ஹைட்ரோ தெரபி' என்கிற குடல் கழுவும் சிகிச்சையும் சிறப்பாகச் செய்யப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் உபாதை ஏற்படும்போது, மூலிகை நீரை உட்செலுத்தி குடலைக் கழுவிச் சுத்தப்படுத்தி அனுப்பும் இந்த தெரபி அங்கே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்கிறார் இவரின் கணவர் ஹெர்மன் ஜெகந்நாதன்.
 சமீபத்தில் லண்டன் சென்றிருந்த போது ஏஞ்சலா பற்றி கேள்விப்பட்டு அவரை அவருடைய கிளினிக்கில் சந்தித்தேன்:
 
 இந்தத் துறை உங்களுக்கு எப்படி பிடிபட்டது?
 நான் இலங்கையில் பிறந்தவள் என்றாலும் தமிழகத்தில் தஞ்சாவூரில்தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். பின்னர் எம்.பி.பி.எஸ், படிக்க விரும்பினேன். இடமும் கிடைத்தது. ஆனால் அங்கே நான் மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது என் சகோதரர்கள் லண்டனில் இருந்தார்கள். எனவே இங்கு வந்து படிப்பைத் தொடர்ந்தேன். என்ன படிக்கலாம் என்ற கேள்வியை நானே கேட்டு மேற்கத்திய மூலிகை மருத்துவம் - வெஸ்டர்ன் ஹெர்பல் மெடிஸின் - படிக்கலாம் என்று பதிலையும் நானே சொல்லிக் கொண்டேன். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது இயற்கையாகவே மூலிகைகள் மீது எனக்கிருந்த நாட்டம் அதிகமாயிற்று.
 ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் மூலிகை மருத்துவத்துறையின் கிளினிக் தொடங்கி அவர்களை ஈர்க்க உங்களால் எப்படி முடிந்தது?
 நானா ஈர்த்தேன்? மூலிகை மருத்துவச் சிகிச்சையின் பலன்கள் அல்லவா ஈர்த்திருக்கிறது. நான் என் மூலிகை மருத்துவப் படிப்பை முடித்ததும் ஒரு பிரபலமான கிளினிக்கில் பகுதி நேர டாக்டராகப் பணிபுரிந்து பயிற்சி பெற்றேன். அந்த மருத்துவமனை அரச குடும்பத்தினர் வந்து ஆலோசனை, சிகிச்சை பெறும் மையம். அங்கே நான் பெற்ற பயிற்சி, கிடைத்த அனுபவம்தான் சொந்தமாக ஒரு கிளினிக்கைத் தொடங்கத் திட்டமிடவும், அதைச் செம்மையாக நிர்வகிக்கவும் எனக்கு அடிப்படைகளை அமைத்துத் தந்தது.
 இங்கே வாழும் மக்கள் எந்த வியாதிக்காக அல்லது குறைபாட்டுக்காக உங்களை அதிகம் நாடி வருகிறார்கள்?
 இங்கே எக்ஸிமா என்ற தோல் அரிப்பு வியாதி அதிகம். காரணம் வைட்டமின் டி குறைபாடு. பருவநிலை, உணவுப் பழக்க வழக்கங்கள், பல சமயங்களில் அவற்றோடு உடலின் ஒவ்வாமை போன்றவையும் முக்கிய காரணங்கள். உடம்பில் சிவப்பு சிவப்பாகத் திட்டுகள், மடிப்புகளில் அரிப்பு இந்த நாட்டு மக்களுக்குச் சற்று அதிகம். அதேபோல வெளிநாடுகளில் வேறு கிளைமேட், உணவுப் பழக்கத்தில் வாழ்ந்துவிட்டு இங்கே வந்து குடியேறுபவர்களுக்கும் - அதிலும் இலங்கையிலிருந்து இங்கே புலம் பெயர்ந்து வந்து வாழ்பவர்களுக்கும் - எக்ஸிமா தொல்லை இருக்கிறது.
 நீங்கள் ஏதாவது சிறப்பு ஆராய்ச்சிகள் செய்து புதிய மூலிகை மருந்து எதையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?
 என்னுடைய சிறப்புத் தயாரிப்பான "கேலன்டுலா அண்ட் கோட்டுகோலா கிரீம்' என்ற ஒருவித கூட்டுக் கலவையிலான பசை எக்ஸிமாவுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக இந்நாட்டு மக்களால் கருதப்படுகிறது. எனக்குப் பெரும் புகழை இந்த என் கண்டுபிடிப்பு ஈட்டித் தந்திருக்கிறது.
 இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இங்கே ஆண், பெண்களுக்கிடையேயான பாலியல் பிரச்னைகளோடு என் கிளினிக்குக்கு பலர் வருகிறார்கள். ஹார்மோனல் இம்பேலன்ஸ். இதை நான் ஒரு புதிய கோணத்தில் கையாள்கிறேன். முதலில் அவர்களிடம் மனம் விட்டு ஒரு சகோதரியைப் போல பேசி உண்மைகளைச் சேகரிக்கிறேன். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளை வெளியில் சொல்ல நம்நாட்டுப் பெண்கள், ஆண்களைப்போல இந்த மக்கள் அவ்வளவாகக் கூச்சப்படுவதில்லை. என்றாலும் கூட, இவர்களுக்கும் சில தயக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தகவல்களைச் சேகரித்த பின், அவர்களுடைய உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தி சில மாற்றங்களைச் சொல்வேன். அதன் பிறகு தகுந்த மூலிகை மருந்துகளை மூன்று நான்கு மாதங்களுக்குத் தந்து மாதவிடாய் சுழற்சி போன்றவற்றை சீராக்குகிறேன். உடலும் மனமும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது குறைபாடுகள் மறைந்துபோகின்றன. என் சிகிச்சையின் மூலம் மகப்பேறின்மையின் விளைவாக பலருக்கு ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் மறைந்துபோய் இன்று அவர்கள் பெற்றோராக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
 அரசு அங்கீகாரமோ, நிதியுதவியோ உங்களின் ஹெர்பல் மெடிஸின் துறைக்குக் கிடைக்கிறதா?
 வெஸ்டர்ன் ஹெர்பல் மெடிஸின் என்று ஒரு தனி படிப்பே பல்கலைக்கழகத்தில் இருக்கிறதே! அரசின் கவனம் இத்துறையில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் ஹெர்பலிஸ்ட்' என்ற நிறுவனம் எங்கள் மருத்துவச் சிகிச்சையை ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்கிறது. இன்று இந்த நாட்டில் ஐந்து பல்கலைக்கழகங்களில் இந்த ஹெர்பல் மெடிஸின் பட்டப் படிப்பு இருக்கிறது. வருடத்துக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இத்துறையில் பட்டம் பெறுகிறார்கள்.
 என்னுடைய இந்த கிளினிக்கை இந்தப் பகுதியின் அதாவது கிராய்டனின், மேயர் மேகி மேன்ஸல்தான் திறந்து வைத்தார். அரசு ஆதரவின்றி இவை நடக்க முடியாது.

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com