புற்றுநோய்க்கு சோர்சாப்!

""புரூட் எ டே, கீப் தி டாக்டர் அவே'' என்பார்கள். உடல் நலத்திற்கு உணவைத் தனியாகவும், மருந்தைத் தனியாகவும் உட்கொள்ளாமல் நாம் உண்ணும் உணவே சில நேரங்களில் மருந்தாக மாறிவிடுகிறது.
புற்றுநோய்க்கு சோர்சாப்!
Updated on
2 min read

""புரூட் எ டே, கீப் தி டாக்டர் அவே'' என்பார்கள்.
 உடல் நலத்திற்கு உணவைத் தனியாகவும், மருந்தைத் தனியாகவும் உட்கொள்ளாமல் நாம் உண்ணும் உணவே சில நேரங்களில் மருந்தாக மாறிவிடுகிறது.
 உணவு என்றால் எல்லாமும்தான். அதில் பிரதான இடம் பிடிப்பவை பழங்களே. அனைத்து வகையான பழங்களும் ஒவ்வொரு விதமான மருத்துவத்தன்மை வாய்ந்தவையாகவே உள்ளன. நாம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்து சாப்பிடும் வாழைப்பழம் கூட பல்வேறு மருத்துவக் குணங்களுடன்தான் செயல்படுகிறது. அமெரிக்காவிலுள்ள 20 ஆய்வகங்களில் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சிகளில் அண்மையில் வெளியான முடிவுகளின்படி கான்சர் நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறந்த பழவகைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் சோர்சாப் எனப்படும் பிரிக்லி கஸ்டர்டு ஆப்பிள். சீத்தா பழத்தின் மீது பலாப்பழத்திற்கு மேல் உள்ள முள் தோலைப்போன்ற தோற்றம் கொண்டது இப்பழம்.
 உலகில் சுமார் 120 வகைகளில் இப்பழம் காணப்பட்டாலும், இந்தியாவில் 4 ரகங்கள் மட்டும்தான் உள்ளன. இந்த நான்கும் நீலகிரியில் மட்டுமே உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பழம், மித தட்ப வெப்பநிலை பகுதிகளில் வளரக்கூடியது. இதன் எடை 3 முதல் 5 கிலோ வரை இருக்குமென்பதால் தண்டுப்பகுதியில்தான் இப்பழங்கள் வளரும். அதனால் இதை பலாப்பழம் எனக் கருதுவோரும் உண்டு. இப்பழம் தொடர்பான கூடுதல் விவரங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார், மருத்துவ மூலிகைத் தாவரங்கள் ஆராய்ச்சியாளரும், மத்திய அரசின் இந்திய மருத்துவத்துறை அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜன்:
 ""சோர்சாப் எனப்படும் பழ வகை புற்றுநோய்க்கு சிறந்த நிவாரணியாக இருப்பது அண்மை ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
 இருப்பினும் இப்பழம் ஏற்கெனவே பல்வேறு மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு இதன் இலை மற்றும் பூவும், தொடர் இருமலையும், கண் புரையையும் கட்டுப்படுத்த இதன் மொட்டுக்களும், இதன் இலையிலிருந்து காய்ச்சி வடிகட்டி எடுக்கப்படும் கசாயம் நரம்பு தளர்ச்சியைப் போக்கவும், நாட்பட்ட காயங்களுக்கு மருந்தாகவும், அடிபட்ட காயத்திலிருந்து வெளியேறும் அதிக அளவிலான ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.
 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் சாறைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
 புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை குறைதல், தலைமுடி உதிர்தல், தொடர் வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவர். ஆனால், சோர்சாப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, புற்று நோய்க்கான செல்களின் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது. இதனால் உடனடியாக நோய் குணமடையாவிட்டாலும், மேலும் பரவாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
 அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சோர்சாப்பின் மூலம் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீர் வழித்தட புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் உள்ளிட்ட 12 வகையான புற்று நோய்களுக்குத் தீர்வாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் நாளுக்குநாள் இதன் தேவையும் அதிகரித்து வருகிறது'' என்கிறார் டாக்டர் ராஜன்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com