நட்பு... அதோடு காதல்... கொஞ்சம் மோகம்!

முதல் படத் தோல்விக்குப் பின் சினிமா சென்டிமெண்ட் எல்லா திசைகளிலும் தாக்கும்... ஆனால் ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் என ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட் எப்படி...?
நட்பு... அதோடு காதல்... கொஞ்சம் மோகம்!
Published on
Updated on
2 min read

கடல் நான்தான்;

அலை ஓய்வதே இல்லை!

சுடர் நான்தான்;

தலை சாய்வதே இல்லை!

"என்றென்றும் புன்னகை' படத்துக்காக வாலி எழுதி சென்ற பாடல் வரிகள் இது.

 ""ஆமாம், வாலி சார் என்ன நினைத்து எழுதினாரோ. அது அப்படியே சத்தியமாகி விட்டது. அந்த இறுதி சந்திப்பு இன்னும் மனசுக்குள் ஈரமாய் கிடக்கிறது. சார் இந்த சூழலுக்கு இன்னும் அழுத்தமான வரி இருந்தால்... இது நான். ""என் தோழா உன் இதழை என் இதழ்மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன்.... இது அவரது பேனா. வாலி மரணத்தை தழுவிக் கொண்டிருந்த வேளையில் அவருடன் நடந்த சந்திப்பை வலியுடன் பேசுகிறார் இயக்குநர் அஹமது. இயக்குநர் கதிரின் மாணவர். "வாமனன்' பட இடைவெளிக்குப் பின் நிதானமாக அவர் எடுத்து வைக்கும் அடி "என்றென்றும் புன்னகை'.

 முதல் படத் தோல்விக்குப் பின் சினிமா சென்டிமெண்ட் எல்லா திசைகளிலும் தாக்கும்... ஆனால் ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் என ஸ்டார் நடிகர்களின் கால்ஷீட் எப்படி...?

"வாமனன்' பட அனுபவம்தான் இப்போது வேறு மாதிரி என்னை இயங்க வைத்திருக்கிறது. எந்த ஓர் இயக்குநரும் 100 சதவீதம் முழுமையான படம் எடுக்க முடியாது. அப்படி எடுத்து விட்டேன் என்று சொன்னால் அது ஓர் இயக்குநருக்குரிய பக்குவமான பேச்சு இல்லை. பார்வையாளர்களும், விமர்சகர்களும்தான் ஒரு படைப்பு எப்படி எனச் சொல்ல முடியும். அப்படி வந்த விமர்சனங்களில் நான் கற்றுக் கொண்டவை நிறைய. ஜீவா முதலில் இந்த கதைக்குள் இல்லை. வேறு எந்த நடிகருக்காகவும் நான் யோசிக்கவும் இல்லை. கதை முழு வடிவம் பெற்ற பின்னர், ஜீவாவும், த்ரிஷாவும் இந்த கதைக்குத் தேவை என்பதை உணர்ந்தேன். கதையைச் சொன்னேன். இருவருக்குமே பிடித்தது. நல்ல உழைப்பு. நிச்சயமாக பலன் கொடுக்கும்.

"என்றென்றும் புன்னகை' அசத்தல் டைட்டில்.... சரி கதை என்ன...?

கல்லூரி நட்புதான். ஆனால் அதை கல்லூரிக்கு வெளியே கொண்டு வந்திருக்கிறேன். எங்கேயோ பார்த்த ஞாபகம்... கேட்ட ஞாபகம் என்று எதுவும் படத்தில் இல்லாமல் கதைக்கு புது வடிவும் தந்திருக்கிறேன். நட்பு. அதோடு காதல். கொஞ்சம் மோகம் என எல்லா ஏரியாக்களிலும் கதை போகும்.  இயல்பாக பிறக்கிற நட்பு, அத்தனை பிணைப்பாக, நெருக்கமாக மாறி விடும். ஏதோ ஒரு புன்னகை... ஒரு சின்ன சிநேக பார்வை... அன்பான கைக்குலுக்கல்... என சின்னச் சின்ன தருணங்களில் பூக்கிற கல்லூரி நட்பு அத்தனை உண்மையானது. ஆனால் கல்லூரியின் இறுதி நாள்களுக்குப் பின் அது  கூடவே வந்து விடுவதில்லை. ஒரு கண நேரத்தில் நிகழ்கிற பிரிவு, எங்கே எங்கேயோ எல்லோரையும் பிரித்து வைக்கிறது. சீட்டு கட்டு மாதிரி பிரித்துப் போட்டு வேடிக்கை பார்க்கிற அந்த வாழ்க்கைக்கு எதிராக அதே நட்போடு வாழ முடியுமா? இங்கே மூன்று நண்பர்கள் அதை வாழ நினைக்கிறார்கள் கல்யாணம் நடந்தால் எங்களுக்குள் பிரிவு வந்து விடும். அதனால் கல்யாணமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் அவர்களுக்கு என்ன நடந்தது? என்கிற சுவாரஸ்யம்தான் திரைக்கதை.

ஜீவாவுக்கும் ஒரு ஹிட் அதி அவசியம்.... உங்களுக்கும் அப்படித்தான்... கிளாமர், காமெடி என வழக்கமான பாணிதானே அதிகமாக இருக்கும்....?

தற்போதைய ஹிட் சினிமாவுக்கு அது தேவைப்படுகிறதே... சந்தானம், விநய், ஆண்ட்ரியா என பெரிய நட்சத்திர பட்டாளம் இருப்பதால் உங்களுக்கு வழக்கமான சினிமா பாணி தெரியலாம். ஆனால், அதையும் தவிர்க்கப் போராடி இருக்கிறேன். காமெடிக்கு மட்டும்தான் சந்தானம் பயன்படுத்தப்படுகிறார். காமெடி உண்டு. ஆனால் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது. தனி காமெடி டிராக் கிடையாது. எல்லாமே கதையோடு மட்டுமே பயணிக்கும்.

பத்து வருடங்களைக் கடந்தும் த்ரிஷாவுக்கு கோலிவுட்டில் ஓர் இடம்.... இந்த சினிமாவில் த்ரிஷாவுக்கு என்ன புதுமை இருக்கும்....?

ஆண்ட்ரியாவும் இருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் இருவருக்குமே வெவ்வேறு ஏரியா. காதல் வயப்படுகிற இடத்தில் ஆண்ட்ரியா இருந்தால், காதலிக்கிற இடத்தில் த்ரிஷா இருப்பார். எப்போதும் இயல்பாக இருப்பதே த்ரிஷாவுக்கு தனி அழகு. அந்த அழகு எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்ன விஷயமாக இருந்தாலும், கூட நடிக்கிற எல்லோரிடமும் சொல்லி விடுவார். சுயநலமாகச் செயல்படாதவர். 10 ஆண்டுகளுக்கு பின்பும் அவருக்கு சினிமாவில் இருக்கும் ஆர்வம் அபரிமிதமானது. 25 வயதில் நல்ல நடிகையாக இருக்க வேண்டும். 30 வயதில் வேறு ஓர் இடத்தில் இருக்க வேண்டும். என்றெல்லாம் த்ரிஷாவுக்கு யோசனை இல்லை என்றுதான் நினைக்கிறேன். இந்தக் கதைக்குள் அவர் வந்த பின்தான் "என்றென்றும் புன்னகை' என்று ஒரு தலைப்பே எனது மூளைக்கு எட்டியது.

பாடல்கள் ஹிட் ஆகி விட்டது இல்லையா....?

தாமரை, விவேகா, கபிலன், மதன் கார்க்கி என எல்லாரும் எழுதியது தமிழ் வரிகள். பாடல் தமிழ் பாடல்கள். அதில் உருகி உருகி இசை சேர்த்திருக்கிறார் ஹாரீஸ். இனம், மொழி, மதம் என எல்லாவற்றையும் அழித்து ஒன்று சேர்ப்பது இசையென்று சொல்லுவார்கள். அப்படியொரு மேஜிக்கை ஹாரீஸ் ஜெயராஜ் செய்து முடித்திருக்கிறார். உலக நாயகன் கமல் சாரின் கரங்களால் இந்த பாடல்கள் வெளியானதில் மகிழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com