

கீதையிலிருந்து பெரும்பாலான மக்களால் இரண்டு வாசகங்கள் அதிகமாகப் பேசும்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. அவை:
1. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே.
2. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மம் வெல்லும்.
இதில் முதல் வாசகம் 2-ஆவது அத்தியாயமாகிய ""ஸாங்கியயோகத்தில்'' 47-ஆவது சுலோகமாக வருகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறிய இந்த சுலோகத்தில் முதல் பாதியை நாம் சொல்கிறோம். முழு சுலோகத்தின் பொருள்:
""உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை. ஆகவே நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே. மேலும் கர்மங்களை (கடமையை) ஆற்றாமல் இருக்கவும் கூடாது''.
இரண்டாவது வாசகம் நான்காம் அத்தியாயமாகிய ""ஞானகர்மஸந்யாஸ யோகத்தில்'' 7-ஆவது, 8-ஆவது சுலோகங்களை அடிப்படையாகக் கொண்டது. சுலோகத்தின் முழுப்பொருள்:
7. பாரதகுலத்தோன்றலே! எப்பொழுது எல்லாம் தர்மத்திற்குக் குறையும், அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் நான் (புவியில்) தோன்றுகின்றேன். (வெளிப்படுவது).
8. தர்மத்தின் வழி நிற்பவர்களை (அறவோர்) காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நிலைநிறுத்தவும் யுகங்கள்தோறும் வருகிறேன்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது தர்மத்திற்கு என்ற வார்த்தையைத்தான், அதர்மம் ஓங்கும்போது என்று மட்டும்கூறாமல் தர்மத்திற்குக் குறை வரும்போது என்பதைத்தான். எல்லோரும் அநியாயம் அதிகமாகும்பொழுது இறைவன் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், தர்மத்தைப் பின்பற்றுபவர்களைக் காக்கவே வருகிறேன். தீயவர்களை அழிப்பேன் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.