சித்திரமும் கைப்பழக்கம்!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்'' என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே!
Updated on
2 min read

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்'' என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே! இசைக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை என்று சொல்லப்படும் "கவின் கலை'கள் ஆறினுள் ஓவியக்கலையும் ஒன்று. ஆயிரம் ஆயிரம் சொற்கள் சொல்லாததை ஓர் ஓவியம் சொல்லிவிடும். அத்தகைய ஓவியக் கலையில் தான் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், தான் கற்ற கலையை இளம் வயதிலிருந்தே பிறருக்கும் கற்றுக்கொடுத்து இளம் ரவிவர்மாக்களை உருவாக்கி வருபவர் ஓவியர் இராஜேந்திரன்.


பிறந்தது, 12-ஆம் வகுப்புவரை படித்தது எல்லாம் அந்தமானில். சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மேல் நாட்டம் ஏற்பட்டு வரைவதும், அக்கம்பக்கம் உள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதுமாக இருந்தவர், மேல் படிப்புக்காக சென்னை வந்து, எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் பி.எஃப்.ஏ., பயின்றுள்ளார். அவ்வாறு பயிலும் காலத்திலேயே பிறருக்கும் ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்து சம்பாதித்திருக்கிறார்.


இவர் "டெசின் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்' (டெசின் ஓவிய பயிற்சிப் பள்ளி) என்கிற பெயரில் தனியாக ஓவியப் பள்ளியை கடந்த 9 ஆண்டுகளாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதன்மை அலுவலகத்தில் நடத்தி வருகிறார். தற்போது இப்பள்ளி 48 கிளை மையங்களை பல ஊர்களிலும் பரப்பி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. "டெசின்' என்றால் பிரெஞ்சு மொழியில் "டிராயிங் அண்டு டிசைனிங்' என்று பொருள். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்பெயரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார் இராஜேந்திரன்.

இவருடைய முதல் மாணவியான அகரிகா பாஸ்கர், இந்திய அளவில் நடந்த ஓவியப் போட்டியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலிடமிருந்து மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். இவர்கள் குழு பல பள்ளிகளுக்கு (ப்ளே ஸ்கூல்) சென்று அங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி தருகின்றனர். விருப்பம் உள்ள மாணவர்கள் இவர்களைத் தொடர்பு கொண்டு தொடர்ந்து பயிற்சி எடுத்து, சான்றிதழ் பெற்றுவருகின்றனர். வேறு மாநிலங்களில் நடக்கும் ஓவியப் போட்டிகளுக்குக் கூட இவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு பரிசு வாங்கியவர்களும் உண்டு. இவருடைய ஓவியப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 1200-க்கும் மேல்!

சென்னை மற்றும் பல ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் பிப்ரவரி 12-ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை சென்னை லலித்கலா அகாதெமியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனை ஆகியுள்ளன. அதுமட்டுமல்ல, ஓவியத்தை முதன்மைப் பாடமாக எடுத்து (பி.எஃப்.ஏ, எம்.எஃப்.ஏ) படித்துவரும் மாணவ-மாணவியர் கூட இவரிடம் சிறப்பான பயிற்சி மேற்கொண்டு வரைந்த ஓவியங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவரிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கிடையே போட்டி வைத்து சான்றிதழ், விருது போன்றவற்றையும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

ஒரு முறை இவருடைய குருநாதர் இவரிடம் வந்து, "உன் ஓவியத்தில் "இவர்தான் என் குரு' என்று கையெழுத்திட்டு தா'' என்று கேட்டதை தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகக் கூறினார். மேலும், "குருவை விஞ்சிய சிஷ்யன்' எனப் பெயர் எடுத்ததுதான் தன்னுடைய வெற்றி என்றும், அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி கிடைத்தும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் கிரியேட்டிவிடி வளராது என்பதால்'' என்றும் பெருமையுடன் கூறினார்.
 இக்கண்காட்சியில், பென்சில் கலரிங், பென்சில் ஷேடிங், போஸ்டர் கலர்ஸ், ஆயில் பிளாஸ்டல்ஸ், வாட்டர் கலர், ஆயில் கலர், அக்ரலிக் போன்றவற்றால் வரையப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. சிறிய (60*45 cm) ஓவியங்கள் ரூ.2,500 லிருந்து, ரூ. 4,500 வரையும், பெரிய ஓவியங்கள் (5*4 ft) ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரையும் விற்பனையாகியுள்ளன.

ஓவியக் கலை பற்றி இராஜேந்திரன் கூறுவது இதுதான்: "எனக்கு ஓவியம் வரைய வராது' என்று கூறுபவர்களும் கூட ஓவியர் ஆகலாம்.

"ஓவியக்கலை என்பது ரத்தத்தில் ஊறியது... பரம்பரை பரம்பரையாக வரும் கலை' என்று சிலர் கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அப்பா, தாத்தா, பாட்டன் போன்றோருக்குத் தெரிந்திருந்தால்தான் அவர்களுடைய வாரிசுகளுக்கும் அந்தக் கலை வரும் என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது.
 உலகம் தோன்றிய நாள்முதலாக இக்கலை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. மனிதனின் முதல் கலை ஓவியம்வரைவதுதான்.

ஆதிகாலத்தில் மனதில் நினைத்ததை, பேச்சு, மொழி, எழுத்து இவை தோன்றாதபோது அதை பாறைகளிலோ, சுவர்களிலோ ஓவியமாக வரைந்துதான் காட்டியுள்ளனர். தொடர் பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் ஓவியர் ஆகலாம். என் குடும்பத்தில் யாரும் ஓவியர் கிடையாது. இப்போது என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக வரைகிறார்கள். ஓவியம் வரைய எல்லோருக்கும் வரும். தொடர் பயிற்சிதான் முக்கியம்''! முதல் பத்தியிலுள்ள பழமொழியை மீண்டும் நினைவுபடுத்திக் கொள் வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com