5 ரூபாய் டாக்டர்!

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், தேவையான உரிய மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கும் பல்வேறு வழிகளும், வாய்ப்புகளும் இருந்தாலும்
Updated on
1 min read

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், தேவையான உரிய மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கும் பல்வேறு வழிகளும், வாய்ப்புகளும் இருந்தாலும் அதற்கு செலவழிக்க தேவையான வசதி இருக்கிறதா என்றால் பெரும்பாலானோரிடத்தில் இல்லையென்றே கூற முடியும். ஆனால், இத்தகையவர்களுக்கும் உதவுவதற்காக நீலகிரி மாவட்டத்தில் பேரட்டி ஊராட்சிப் பகுதியில் இலவச மருத்துவ சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் தற்போது பரவலான பெயர் "5 ரூபாய் டாக்டர்' என்பதாகும். இந்த "5 ரூபாய் டாக்டர்' யாரென்றால் பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் இலவச மருத்துவ சேவையாற்றிவரும் டாக்டர் பஜாஜ் கோவிந்த் ஆவார்.
 பேரட்டி ஊராட்சியின் சார்பில் இலவசமாக அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைக்காக டாக்டர் கோவிந்த் ரூ.5 மட்டுமே கட்டணமாக பெற்றுக் கொள்கிறார். இந்த 5 ரூபாயையும் நோயாளிகளிடத்தில் நேரடியாக வாங்காமல் அவர்களை ஊராட்சி அலுவலகத்திலேயே செலுத்துமாறு கூறிவிடுகிறார்.
 பிறகு அந்தத் தொகையைக் கொண்டு நோயாளிகளுக்கு தேவையான ஊசி, மாத்திரைகள், மருந்து உள்ளிட்டவற்றை வாங்கி அவர்களுக்கே இலவசமாகவும் வழங்கி விடுகிறார். டாக்டர் பஜாஜ் கோவிந்தைச் சந்தித்தபோது:
 பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் கடந்த 1942-வது ஆண்டில் பிறந்தேன். அங்கு வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு சகோதர, சகோதரிகள் 7 பேர் உள்ளனர். சிறு வயதிலிருந்தே எனது தாயார் பத்மாவதிபாய் இந்தியாவைக் குறித்தும், கீதையைக் குறித்தும் போதித்து வந்தார். கராச்சியிலிருந்து வெளியேறி மும்பைக்கு வந்து அங்கு பள்ளிக் கல்வியையும், மங்களூரில் மருத்துவக்கல்வியையும் முடித்தேன்.
 பின்னர் பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி விட்டு கடந்த 5 வருடங்களாக குன்னூரில் தங்கியுள்ளேன். மருத்துவத் தொழில் என்பது வியாபாரமல்ல, ஓர் உயிரைக் பாதுகாப்பதற்கே என்பதால் பணத்துக்காக உயிரை விலை பேசக்கூடாது என்பது எனது தாயார் எனக்கிட்ட கட்டளையாகும். அவரது 99 வயதில் இறக்கும்போதும் இதையே வலியுறுத்தினார். எனவே, அவரது ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மருத்துவ சேவையை செய்து வருகிறேன். எதையுமே இலவசமாக கொடுத்தால் அதற்கு அதிகமாக மதிப்பிருக்காது என்பதற்காகவே என்னிடம் வரும் நோயாளிகளிடம் ரூ.5 கட்டணமாக வாங்கி அதையும் அவர்களுக்காகவே செலவழித்து விடுகிறேன் என்றார் டாக்டர் பஜாஜ் கோவிந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com