நீயே புருஷ மேரு

1786-ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் தமிழ்நாட்டில் மழை பொழியாமல் போய்விட்டது.
Published on
Updated on
2 min read

1786-ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் தமிழ்நாட்டில் மழை பொழியாமல் போய்விட்டது. அதனால் ஆறு, ஏரி, குளங்கள் நீர்வற்றிப் போயின. நீர் இன்மையால் வறட்சி ஏற்பட்டது. பயிர்கள் விளையவில்லை. மேய்ச்சல் நிலங்களில் புல் காய்ந்து கமறியது. கால்நடைகள் புல் இன்றி மெலிந்து இறந்தன. நெல்லும் பிற தானியங்களும் விளைச்சல் இல்லாமல் போனதால் ஏழை எளிய மக்கள் உணவின்றி வாடினார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் மற்றவர்களும் செத்துப் போனார்கள். பலர் புலம்பெயர்ந்து தலைநகராக இருந்த சென்னைக்கு வந்தார்கள்.
 பஞ்சத்தால் தவிக்கும் மக்கள் பசியாற கஞ்சி தொட்டி வைத்து பசியாற்றினார்கள். வேலை வாய்ப்பைப் பெருக்க திட்டமிட்டார்கள். அதில் ஒன்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அருகில் கூவம் கடலில் கலக்கும் இடத்தில் இருந்து இரண்டு கால்வாய்கள் வெட்டினார்கள். முதல் கால்வாய் சென்ட்ரல், சூளை, எண்ணூர் வழியாக ஆந்திராவில் உள்ள கஞ்சத்திற்கு சென்றது. மற்றொரு கால்வாய் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, மரக்காணம் வழியாக பாண்டிச்சேரி சென்றது. சென்னை கவர்னராக இருந்த பக்கிங்காம் காலத்தில் கால்வாய் வெட்டப்பட்டதால் "பக்கிங்காம் கால்வாய்' என்று பெயரிட்டார்கள்.
 பக்கிங்காம் கால்வாய், உப்பு, அரிசி, விறகு, சுண்ணாம்பு, வைக்கோல் - போன்றவற்றைக் கொண்டுவர தக்க நீர்வழியாகியது. மக்களும் படகில் பயணப்பட்டுச் சென்றார்கள். இங்கிலாந்திலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் சென்று தாங்கள் கண்டுகளித்த மாமல்லபுரம் உட்பட சில ஊர்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஓவியர்கள் சித்திரமாகத் தீட்டியிருக்கிறார்கள். குறிப்பாக வில்லியம் டேனியல், தாமஸ் டேனியல் சகோதரர்கள் வரைந்த படகுப் பயணக் காட்சிகள் அரிய காட்சிகளாக உள்ளன.
 பஞ்சம் தமிழ்நாட்டில் தாது வருஷ காலத்தில் ஏற்பட்டது. எனவே "தாது வருஷ பஞ்சம்' என்று அழைக்கிறார்கள். தமிழ்க் கவிஞர்கள் தாது வருஷ காலத்தில் மக்கள் பட்ட துயரங்களைப் பற்றி மனம் உருகிப் பாடி இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் ஆதீனங்களும் வசதி படைத்தவர்களும் மக்கள் துயரம் தவிர்க்க தாராளமாக உதவி புரிந்தார்கள். தங்கள் களஞ்சியத்தில் இருந்து நெல்லை அள்ளிக் கொடுத்தார்கள்.
 தாதுவருஷ பஞ்ச காலத்தில் மாயூரத்தில் முன்சீப்பாக இருந்தவர் வேதநாயகம் பிள்ளை. அவர் சிறந்த மனிதாபிமானி. சமரச கீர்த்தனைகள் பாடியவர். அவரே தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர்.
 தாது வருஷ பஞ்சத்தின் போது, முன்சீப் என்ற முறையிலும் மனிதாபிமானி என்ற விதத்திலும் மக்களுக்கு அதிகமாக உதவி புரிந்தார். அது அவராக முன்வந்து செய்தது. அவர் செய்த அரிய செயல்கள் பலரையும் கவர்ந்தது. அவர்களில் ஒருவர் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள் பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார்.
 ஆனைதாண்டபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார் இசை மேதை. சன்னியாசி. ஆனால் அவர் காலத்தில் அவர்தான் முற்போக்குச் சிந்தனையாளர். நந்தன் கீர்த்தனைகள் பாடியவர். உஞ்ச விருத்தி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர். இறைவனைத் தவிர மானிடர்களைப் பற்றிப் பாடவே எண்ணாதவர்.
 "பஞ்சம் தீரையா - உனையன்றி தஞ்சம்
 ஆரையா - சுவாமி' என்று பாடியதோடு நில்லாமல் பலவிதத்திலும் உதவிகள் செய்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நற்காரியங்கள் அவர் மனத்தை நெகிழவைத்தன.
 கல்யாணி ராகத்தில், ஆதி தாளத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையைப் புகழ்ந்து ஒரு கீர்த்தனையைப் பாடியிருக்கிறார் கோபால கிருஷ்ண பாரதி. அது ஒன்றே கோபால கிருஷ்ண பாரதியார் நரனைப் பற்றி - அதாவது மனிதனைப் பற்றி பாடியிருக்கும் பாடல் என்று உ.வே.சாமிநாதையர் கோபால கிருஷ்ண பாரதியார் சரித்திரத்தில் எழுதி இருந்தார். ஆனால் முழு கீர்த்தனையையும் கொடுக்கவில்லை. "நீயே புருஷ மேரு' என்று முதல் அடியை எழுதிவிட்டு மற்ற அடிகள் நினைவில் இல்லை என எழுதி உள்ளார்.
 1970-ஆம் ஆண்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை சரித்திரத்தை முத்தமிழ் வித்தகர் - என்று எழுதியுள்ள சரவண பவானந்தர் முழு பாடலையும் கண்டெடுத்து பதிப்பித்து உள்ளார்.
 எடுப்பு
 நீயே புருஷ மேரு - உலகில்
 நிலைத்தது நின்பேரு - நீதிபதி
 தொடுப்பு
 ஆயிரம் ஆயினும் மாயூரம் ஆமோ
 ஐயநின் பெருமையை அளந்திட போமோ
 முடிப்பு
 இயல் இசையுடன் கலை எல்லவும் ஆர்ந்தாய்
 ஏழை மக்கள் உறவே இனிதெனத் தேர்ந்தாய்
 மயலறும் சமரச மார்க்கமும் சார்ந்தாய்
 வளர்வேத நாயக மலரென நேர்ந்தாய்

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com