

பூமி கோடிக் கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் அது எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சில சமயங்களில் நெருப்பையும் புகையையும் உமிழ்ந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. இன்னும் சில சமயங்களில் கடல் பொங்கி எழுந்து பேரலைகளை எழுப்பி நாடு நகரங்களை அழித்துவிடுகிறது. அதனால் மகத்தான நாகரிகங்கள் கொண்ட நகரங்கள் அழிந்திருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் மாண்டுபோய் இருக்கிறார்கள். அது இயற்கையின் பேரழிவு என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
பூமியில் வாழ்கிற மனிதர்கள் தங்களின் அறிவை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் பெருவாழ்வு வாழ மரங்களை வெட்டி, ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டி, விளைநிலங்களில் பூச்சிக்களைக் கொல்ல நச்சு திரவங்களைத் தெளித்தார்கள். அதனால் மழை குறைந்தது, வறட்சி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பரப்பளவு நிலங்கள் அணைக்கட்டில் மூழ்கிப் போயின. பெரும் மழை பொழிந்தபோது அணைகள் உடைய வெள்ளம் ஏற்பட்டது. பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்பட்டதால் எல்லாவிதமான பூச்சிகளும் செத்தன. பறவைகள், மீன்கள் உயிரிழந்தன. சுற்றுப்புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இயற்கை மாறுதல்களுக்கு உள்ளாவதும் பூச்சி இனங்கள் பறவைகள், மீன்கள் குறைந்து வருவதற்கும் - மனிதர்களுக்கு பலவிதமான புதிய நோய்கள் வருவதற்கும் என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
ராகேல் லூயீஸ் கார்ஸன் - என்ற பெண்மணி வீரியம் மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் பெரிய அளவில் மாற்றம் அடைகிறது. அதன் காரணமாக புதிய பிரச்னைகள் வருகின்றன. எனவே பூச்சிக்கொல்லி மருந்தை வரைமுறையில்லாமல் அடிக்கக்கூடாது என்பதை எடுத்துச்சொல்லும் விதமாக "அமைதியான வசந்தம்' என்ற புத்தகத்தை எழுதினார். அது 1962-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளிவந்தது.
அமைதியான வசந்தம் - உலகம் முழுவதிலும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில் முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் அது "நியூயார்க் டைம்ஸ்' இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது. புத்தகமாக வெளிவந்ததில் இருந்து மக்கள் விரும்பிப் படிக்கும் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. அதன் ஐம்பதாவது வெளியீட்டு நாளை அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரையில் பல நாடுகளிலும் கொண்டாடி வருகிறார்கள்.
ஹெர்மன் பால் முல்லர் என்பவர் 1939-ஆம் ஆண்டு டி.டி.டி. என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடித்தார். அதனை கோதுமை வயல், ஆப்பிள் தோட்டங்களில் அடித்து புழு பூச்சிகளை அழித்து அதிகமாக மகசூல் அடைந்தார்கள். பூச்சிக்கொல்லி மருந்து கொசு உட்பட பல புழு, பூச்சிகளை அழித்தது. எனவே வேளாண்மைக்கு அதிகமாக உதவி செய்வதாகக் கருதினார்கள். இரண்டாவது உலகப் போரின்போது போர்வீரர்கள் புல்வெளிகளிலும் திறந்தவெளியிலும் கூடாரம் அடித்துக் கொண்டு தங்கியிருந்தார்கள். அவர்கள் ஈ, கொசு போன்றவற்றில் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். போர்வீரர்களின் கூடாரப் பகுதிகளில் டி.டி.டி. அடித்தார்கள். அது நல்ல பலன் தந்தது. எனவே மலேரியா உட்பட பல நோய்களைப் பரப்பும் கொசு, ஈ, புழு, பூச்சிகள் நிறைந்த இடங்களில் டி.டி.டி. அடித்தார்கள். அது நோய்களை கட்டுப்படுத்தியது. நல்ல மகசூலுக்கும் வழிவகுத்தது. எனவே அலுவலகங்கள், தோட்டங்கள், வீடுகள், வயல்வெளிகள், நீர் நிலைகள் என்று எல்லா இடங்களிலும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க ஆரம்பித்தார்கள். அதனால் ஈக்கள், கொசுக்கள், புழு, பூச்சிகள் ஆகியவற்றோடு வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், மண்புழுக்கள், மீன் முட்டைகள், மீன் குஞ்சுகள், தவளைகள் மடிந்தன. தீமை தரும் பூச்சிகளை அழிக்கவென அடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து, நன்மை தரும் பூச்சிகளையும் கொன்றது.
அதுதான் பிரச்னையாகியது. அதனையே "அமைதியான வசந்தம்' மக்களுக்கு எடுத்துச் சொல்லியது.
உலகத்தில் நன்மை தரும் பூச்சிகளும் தீமை தரும் பூச்சிகளும் இருக்கின்றன. எல்லா உயிர் இனங்களும் வாழவேண்டும். நல்ல பூச்சிகள், கெட்ட பூச்சிகள் என்பது மனிதர்களால் தீர்மானிக்கப்படுவது கிடையாது. உலகம் பல்லுயிர் வாழக்கூடியது. அதனை பண்டைய மக்கள் அறிந்திருந்தார்கள். எனவே இலை, தழை, பூ, வேர், எண்ணெய்- என இயற்கையான பொருள்களைக் கொண்டு புழு, பூச்சிகள் பெருக்கத்தை மட்டுப்படுத்தினார்கள். அவர்கள் வேளாண்மையில் எதையும் முற்றாக அழிப்பது கிடையாது. ஆனால் நவீன ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து புழு, பூச்சி உயிர்களை அடியோடு அழித்தது. அதில் மனிதர்களுக்கு நன்மை செய்து கொண்டிருந்த புழு, பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்று எல்லாம் அழிந்தன. அது சுற்றுப்புறச் சூழல் என்பதைப் பாதிக்கும். எனவே அது சரியான காரியம் இல்லை என்று எழுதினார்.
அதற்குச் சமூகத்தில் நல்லாதரவு கிடைத்தது. பலரும் ராகேல் கார்ஸன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வீரியம் மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரித்து விற்பனை செய்து பெரும் பணம் சம்பாதித்த நிறுவனங்கள் அவரை எதிர்த்தன. பூச்சிக் கொல்லி மருந்தால் மனிதர்களுக்கு நோய்களைப் பரப்பிவந்த பூச்சிகள், குறிப்பாக மலேரியாவைப் பரப்பிவந்த கொசுக்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் மலேரியா ஒழிக்கப்பட்டுவருகிறது. வேளாண்மையில் அதிக மகசூல் கிடைக்கிறது. பல நாடுகளில் பசி பட்டினியைத் தீர்க்க முடிந்து இருக்கிறது.
ஹெர்மன் பால் முல்லர் 1948-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். அவரின் அறிவியல் சாதனை உலகத்தில் நோயையும் பஞ்சத்தையும் போக்கி உள்ளது. அதனை எதிர்ப்பது அறிவியல், தொழில் முன்னேற்றத்தை எதிர்ப்பதாகும்.
ராகேல் கார்ஸன் திருமணம் ஆகாத பெண். ஹிஸ்டீரியா நோயாளி. முன்னேற்றம் வளர்ச்சி என்பதன் எதிரி. அவர் எழுதியுள்ள "அமைதியான வசந்தம்' முற்போக்குச் சிந்தனைக்கு விரோதமான புத்தகம். அவர் கருத்துக்கள் பிற்போக்குத்தனமானவை. அவற்றை ஒதுக்கித்தள்ளிவிட்டு காரியங்கள் செய்யவேண்டுமென சிலர் பாடுபட்டார்கள்.
அமைதியான வசந்தம் - தொழில், வேளாண்மை, வாணிகம் - என்பதற்கு எதிரானது இல்லை. பூச்சிக்கொல்லி மருந்தை முழுமையாகவும் அது எதிர்க்கவில்லை. அதிக வீரியமுள்ள மருந்தை வரம்பற்ற முறையில் விளைநிலங்கள், நீர் நிலைகள், வனங்களில் தெளிப்பதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் இறந்து போகின்றன. முட்டைகள் அவிந்து போகின்றன. பூச்சி மருந்தடிக்கும் மனிதர்கள் மெல்ல மெல்ல செத்துப் போகிறார்கள். என்ன நிகழ்கிறது என்பது அறியாமல் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது என்பதுதான் மகத்தான சோகம் என்றார்.
அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை அமைதியான வசந்தம் ஏற்படுத்தியது. ஜனாதிபதியாக இருந்த ஜான்.எஃப். கென்னடி அமைதியான வசந்தம் படித்தார். அதுபற்றி ஆராய்ந்து யோசனை சொல்ல ஒரு கமிஷன் நியமித்தார்.
வனங்களில் பறக்கும் பறவைகளுக்கும் மண்ணில் நெளியும் புழு, பூச்சிகளுக்கும் வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்களுக்கும் நஞ்சுவைக்க யார் உரிமை கொடுத்தது என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேட்டார்.
கென்னடி காலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம் குறைக்கப்பட்டது. அமைதியான வசந்தத்தின் தாக்கத்தால் அமெரிக்காவில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதோ; பயன்படுத்துவதோ விற்பனை செய்வதோ தடை செய்யப்பட்டு
விட்டது.
அமைதியான வசந்தம் - அதற்கு எதிரான விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு விற்பனையில் முதலிடத்தில் இருந்துவருகிறது. நூறு சிறந்த கட்டுரை புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இளைஞர்கள் விரும்பிப் படிக்கும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது. புரட்சிக்கு வித்திட்ட புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.
அமைதியான வசந்தம் - வந்திருக்காவிட்டால் மக்கள் தங்களைப் பாதிக்கும் சுற்றுப்புறச்சூழல் பற்றி தெரிந்துகொள்ள பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்திருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியது. "ஒரு புத்தகம் என்ன செய்யமுடியும்?' என்பதை ஐம்பதாண்டுகாலமாக செய்துகொண்டே இருக்கிறது என்பதில்தான் "அமைதியான வசந்தம்' நூலின் வெற்றி அடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.