சினி மினி

டெல்லி மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவத்தை களமாகக் கொண்டு படம் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
Updated on
2 min read

டெல்லி மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவத்தை களமாகக் கொண்டு படம் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மாணவியின் கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகளில் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகும் படத்தை ஒயிட் ஆப்பிள் சினிமா நிறுவனம் முதலில் தயாரிக்க முன் வந்திருக்கிறது. படத்துக்கு "ஃப்ரீடம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாணவியாக ரேவதி என்கிற ரே நடிக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த குலாம் அலி இசையமைக்கிறார். பின்னணி இசை அமைப்பு அனிருத் ஏற்று இருக்கிறார். மாணவியின் மரணத்தையொட்டி பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் எழுதிய கவிதைகளை இப்படத்துக்காக பாடலாக்க இருக்கிறார்கள். இதற்காக அமிதாப்பச்சன் தரப்பிலும் ஒப்புதல் தரப்பட்டு விட்டதாம்.

சேவை வரிக்காக திரையுலகம் திரண்டு உண்ணாவிரதம் இருக்க, அது குறித்த தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகர் அஜித். இந்த வரி திரையுலகத்துக்கு எவ்வளவு சுமை என்பதை விட அவர் பேசிய விஷயம் மிகுந்த சிந்தனைக்குரியவை. ""இந்தியாவைப் பொறுத்தவரை அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நான் சேவை வரி குறித்து இங்கு பேசவில்லை. கட்டண உயர்வுகள், வரி விதிப்புகளைத் தவிர்த்து நம் நாட்டின் ஊழல் தலைவர்களின் மோசடி பணத்தை அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தினாலே நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் வளங்களை சுரண்டிச் சென்ற ஆங்கிலேயர்களை விட அரசியல் தலைவர்கள் இந்தியாவை அதிகமாகச் சுரண்டி உள்ளனர். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் வழங்குவது பற்றி இங்கிலாந்து முடிவெடுக்கையில், சுதந்திரம் வழங்கினால் இந்தியாவில் பயனற்ற தலைவர்கள் உருவாகி விடுவார்கள் என பேச்சு எழுந்ததாம். அது இப்போது இந்தியாவில் நடந்திருக்கிறது. இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’’ என கூறினார் அஜித்.

""தமிழ் சினிமா சிலர் நினைப்பது மாதிரி இப்போது இல்லை. யாரும் நினைத்த இடத்துக்கு சீக்கிரம் வந்து விட முடியாது. நிறைய இழப்புகள் இருக்கும். சில நேரங்களில் அவமானங்களும் வந்து சேரும். சினிமாவில் கஷ்டபடாமல் எதுவும் கிடைக்காது. உழைப்பை கொட்டாமல் இங்கே யாரும் பெரிய இடத்துக்கு வர முடியாது என்பதைத்தான் சமீபத்தில் எனக்கு சினிமா சொல்லித்தந்தது’’ என்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. "பீட்சா’, "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என கடந்த வருட கடைசியில் தொடர் ஹிட்டடித்த விஜய் சேதுபதி, "ரம்மி’, "சூது கவ்வும்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். ""கதைக்கான ஹீரோவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். கதைக்காக எப்படி வேண்டுமானாலும் மாறத் தயார். மற்றபடி எனக்கு பொருந்தாத வேடங்களில் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன்...’’ என்கிறார் விஜய் சேதுபதி.

நடிகை நிலா பற்றி தொடர்ந்து வந்த கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லை. கோலிவுட்டில் வந்த தொடர் சினிமா வாய்ப்புகளுக்கு இடையே எங்கே இருக்கிறார் என தேடும் அளவுக்கு காணாமல் போனவர், இப்போது மீண்டும் "கில்லாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்காக சென்னை வந்திருந்த நிலாவிடம் பேசுகையில், ""ஏன் என்று யோசித்து பார்ப்பதற்குள் என்னை பற்றி ஆயிரம் சர்ச்சைகள். எப்படி இந்தளவுக்கு கிசுகிசுக்கள் வந்தது எப்படி? இல்லாதவற்றையெல்லாம் பரப்பி விட்டவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கான வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன. நான்தான் சினிமாவில் சின்ன இடைவெளியை விரும்பினேன். சினிமாவில் இல்லாத காலங்களில் ஃபேஷன் டிசைனிங்கில் ஆர்வமாக இருந்தேன்’’ என்றார் நிலா.

ஹிந்திப் பட நடிகையும், நடன கலைஞருமான இஷா ஷெர்வானி, விக்ரம் ஜோடியாக "டேவிட்’ படத்தில் நடித்துள்ளார். மும்பையில் பிறந்து கேரளத்தில் செட்டில் ஆகிவிட்ட இஷா ஷெர்வானியிடம் பேசியபோது, ""15 வருடமாக கேரளத்தில்தான் வசிக்கிறேன். இருந்தாலும் இப்போதுதான் மலையாளப் படத்தில் நடிக்கப் போகிறேன். முறைப்படியான அனைத்து வகை நடனங்களையும் கற்றிருக்கிறேன். ஆனால் நடனம் தொடர்பான படத்துக்கு இதுவரை யாரும் அழைக்கவில்லை. சினிமாவில் நடன கலைஞராக இல்லாமல் நடிகையாக என்னை நிரூபித்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். தென்னிந்திய படங்கள் மீது எப்போதுமே கவனம் உண்டு. குறிப்பாக தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். "டேவிட்’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வேடம் ஏற்றிருக்கிறேன். தமிழில் நல்ல கதைகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்’’ என்றார் இஷா ஷெர்வானி.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com