

கால்களால் கருக்கொண்டு எழும் கலைதான் டேக்குவாண்டோ. கொரிய நாட்டில் பிறந்த இந்த தற்காப்புக் கலையில் கிராண்ட் மாஸ்டர் ஆவதே தனது லட்சியம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த டேக்குவாண்டோ வீரரான லோகராஜ்.
அப்பா சேகரின் பயிற்சியில் பட்டைத் தீட்டப்பட்டவரான 23 வயது லோகராஜ், 10 வயதில் மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றதோடு, "ஃபெஸ்ட் பைட்டர்' என்ற விருதையும்
பெற்றுள்ளார். டேக்குவாண்டோவில் தொடர் வெற்றிகளைக் குவித்த லோகராஜ், கடந்த ஆண்டு ஒரு நிமிடம், 23 விநாடிகளில் 100 ஓடுகளை கால்களால் உடைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். டேக்குவாண்டோவில் 3-ம் நிலை கறுப்புப் பட்டை பெற்ற லோகராஜ், பயிற்சியாளர், போட்டி நடுவர் என பன்முகத் திறமை கொண்டவர்.
இது தொடர்பாக அவர் நம்மிடம் கூறியது:
குறைந்த சக்தியைப் பயன்படுத்தி அதிக வலிமையைப் பெருக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரியை வீழ்த்துவதுதான் டேக்குவாண்டோ கலை. 7-வது வயதில் தொடங்கிய எனது டேக்குவாண்டோ பயணம், தற்போது பயிற்சியாளர், மேட்ச் ரெப்ரி என நீண்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றதுதான் எனது முதல் போட்டி. அதில்தான் "பெஸ்ட் ஃபைட்டர்' என்ற விருதும் கிடைத்தது. 2000-ல் சேலத்தில் மாநில அளவிலான போட்டி, 2010-ல் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றேன்.
2010-ல் குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெண்கலம் வென்றேன். அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தேன்.
கண்களை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு துள்ளுதல் பின்பக்க உதை என்ற முறையின் (ஒருவர் ஓடுகளை கையில் வைத்திருப்பார். டேக்குவாண்டோ வீரர்கள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு பின்னோக்கி துள்ளி ஓடுகளை மட்டும் துல்லியமாக கால்களால் உடைக்க வேண்டும்) மூலம் ஒரு நிமிடம், 23 விநாடிகளில் 100 ஓடுகளை உடைத்தேன்.
எனது இந்த சாதனையை அங்கீகரித்துள்ள லிம்கா நிறுவனம், அதற்கான சான்றிதழையும் எனக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டில் "லிம்கா' சாதனைப் புத்தக்கத்தில் எனது பெயரும் இடம்பெற்றது. "லிம்கா' சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற முதல் டேக்குவாண்டோ வீரர் நான்தான்.
டேக்குவாண்டோவில் தங்களின் இலக்கு?
2016-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும். இந்தியாவில் இருந்து இதுவரை யாரும் ஒலிம்பிக்கில் டேக்குவாண்டோ பிரிவில் பங்கேற்கவில்லை. என்னைப் போன்றவர்கள் பங்கேற்கும்போது டேக்குவாண்டோ கலை இந்தியாவில் மேலும் பிரபலமடையும்.
ஒரு நிமிடம் 23 விநாடிகளில் 100 ஓடுகளை உடைத்ததை சுட்டிக்காட்டி கின்னஸ் சாதனைக்காக லண்டனில் உள்ள கின்னஸ் அமைப்புக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அது தொடர்பான முடிவுகள் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். கின்னஸ் சாதனைப் புத்தக்கத்தில் இடம்பெறுவது எனது கனவு.
சர்வதேச டேக்குவாண்டோ சம்மேளனத்தின் தலைமையகம் தென் கொரியாவின் குக்கிவானில் உள்ளது. குக்கிவான் நகரம் டேக்குவாண்டோ நகரம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த சம்மேளனம்தான் ஒவ்வொரு டேக்குவாண்டோ வீரரின் திறமையையும் அங்கீகரித்து சான்றிதழ்களையும், பல்வேறு பட்டைகளையும் (பெல்ட்) வழங்குகிறது. வெளிநாடுகளில் மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் இந்தக் கலையைத்தான் கற்று வருகிறார்கள். பாலிவுட் நடிகைகளான நீது சந்திரா டேக்குவாண்டோவில் 2-ம் நிலை கறுப்புப் பட்டையும், இஷா கோபிகர் முதல் நிலை கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளனர்.
டேக்குவாண்டோ கலையால் கால் எழும்புகள் வலுவடைகின்றன. உடலில் உள்ள கொழுப்புகள் குறைகின்றன. இன்சுலின் சுரப்பையும் தூண்டுகிறது. உடலை சீராக வைக்கிறது. உடற்தகுதியை பராமரிக்கிறது. நியூட்டனின் மூன்றாவது விதியை தழுவிய கலை என்பதால், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.