

கமலின் "விஸ்வரூபம்' படத்துக்கு வந்த எதிர்ப்பு குறித்து மறைமுகமாக அறிக்கை விட்டார் அஜித். அதைப் பற்றி அவரிடம் பேசுகையில் நிதானமாக மனம் திறந்தார். ""எல்லோரையும் போல் வரிசையில் நின்றுதான் என் வாக்கை பதிவு செய்கிறேன். மற்றவர்களை போல் நானும் ஒருவன். எல்லோருக்கும் இருக்கும் அக்கறை எனக்கும் இருக்கிறது. ஆனால் சினிமா உலகம் மட்டும் ஒவ்வொரு முறையும் குறி வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. விளம்பரத்துக்காக உணர்வுகளைத் தூண்டுபவர்களை ஊக்கப்படுத்த கூடாது. எல்லா தலைவர்களும் எல்லா சமூக பிரச்னைகளுக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பின்னால் நாங்களும் நிற்கிறோம். நடிகர்கள் ஊர்வலம் போவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்து விடாது. "விஸ்வரூபம்' படத்துக்காக கமலும், எதார்த்தமாக பேசியதால் த்ரிஷாவும் பிரச்னைகளில் சிக்கியுள்ளார்கள். இதை பார்க்கும் குடிமகனான எனக்கு பயம் வருகிறது. சந்தோஷமாக வாழ்வதை விடுத்து தவறுகளை மட்டுமே சிலர் கண்டுபிடிக்கிறார்கள். எதையும் விட முக்கியமானது ஒரு நாட்டின் நல்ல பிரஜையாக வாழ்வதுதான்' என கூறினார்.
"சூது கவ்வும்', "ரம்மி' ஆகிய படங்களைத் தொடர்ந்து "பண்ணையாரும் பத்மினியும்' என்ற படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. கலைஞர் டி.வி.யின் "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டவர்கள் வரிசையில் இப்படத்தை எழுதி இயக்கி அறிமுகமாகிறார் அருண்குமார். "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சிக்காக குறும்படமாக்கிய திரைக்கதையே இப்படத்தில் கதையாகிறது. ஜெயப்பிரகாஷ் பண்ணையாராக நடிக்க, பத்மினி கதாபாத்திரத்தில் 1980-களில் பிரபலமாக இருந்த "ப்ரீமியர் பத்மினி' கார் இடம் பெறுகிறது. இந்த காரின் டிரைவராக வருகிறார் விஜய்சேதுபதி. இந்த மூன்று பேருக்குமான உறவுகளைக் காமெடியாக சொல்வதான் கதை. பண்ணையார் ஜெயப்பிரகாஷ், ப்ரீமியர் பத்மினி கார், டிரைவர் விஜய்சேதுபதி ஆகிய மூன்று பாத்திரங்கள்தான் கதையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறும்படமாக உருவான இந்த திரைக்கதையில் சுவாரசியம் சேர்ப்பதற்காக சில கேரக்டர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. "படிக்காதவன்' படத்தில் ரஜினிகாந்துடன் "லட்சுமி' என்ற பாத்திரத்தில் முக்கிய இடம் பெற்ற காரும் இந்த ரக வகை காரை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் வெற்றி பெற்ற "பிருந்தாவன்' படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் சமந்தா ஏற்ற வேடத்தை வேதிகா ஏற்று நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் மட்டுமே நடித்து வந்த வேதிகா இப்படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்குச் செல்கிறார். ஹீரோவாக தர்ஷன் நடிக்கிறார். ""நல்லதொரு வேடம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாவதில் சந்தோஷம். நான் கன்னட பெண். ஆனால் சினிமாவுக்கு வந்து இத்தனை வருடம் கழித்துதான் எனக்கு கன்னட சினிமா வாய்ப்பு வந்திருக்கிறது. தொடர்ந்து கன்னட படங்களில் நடிக்க விரும்புகிறேன். எதிர்பாராதவிதமாக தமிழ்,தெலுங்கில் பிஸியாகி விட்டேன். அதனால் வேறு எந்த படங்களிலும் நடிக்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை எதிர்பார்த்தேன். தெலுங்கில்தான் அதிகம் வந்தது. பாலாவின் "பரதேசி' படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது. கன்னட சினிமாவுக்கு வந்திருப்பதை நல்ல தருணமாக உணர்கிறேன். அதுவும் பிரபல நடிகர்களில் ஒருவரான தர்ஷன் ஜோடியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சி'' என்றார் வேதிகா.
மாதவன் ஜோடியாக "ஜே ஜே' படம் மூலம் அறிமுகமானவர் அமோகா. "கச்சேரி ஆரம்பம்' உள்ளிட்ட சில தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். ஹிந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் "சர்க்கார்' படத்தில் நடித்த போது இருவரையும் இணைத்து கிசுகிசு வெளியாகி பரபரப்புக்குள்ளானது. தற்போது மலேசியாவில் தயாராகும் "ஒப்ஸ் கோஸô டப்பா 3' என்ற படத்தின் ஹீரோயின் வேடம் ஏற்கிறார் அமோகா. தனது பெயரை பிரியங்கா கோத்தாரி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். மலேசிய போலீஸில் பயன்படுத்தப்படும் ரகசிய குறியீடு வார்த்தையான "ஓ கேடி' என்பதன் விரிவாக்கமாக இந்த தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதுவொரு போலீஸ் த்ரில்லர் கதையாகும். "காதல்' தண்டபாணி முக்கிய பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் மலேசிய நடிகர்கள் லோகநாதன், சசிகுமார், ஜாஸ்மின், நிஷாலா ஆகியோர் நடிக்கின்றனர். அன்னன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். மலேசிய மற்றும் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் விரைவில் இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஹிந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற "டெல்லி பெல்லி' தமிழில் "சேட்டை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் நிறைந்த இந்தப் படத்தை தமிழில் இயக்குவது பற்றி இயக்குநர் கண்ணனிடம் பேசிய போது, ""ஹிந்தியில் வெளியான "டெல்லி பெல்லி' படத்தின் கதைக் கருவை மட்டும்தான் எடுத்து திரைக்கதையில் கையாண்டு இருக்கிறேன். நம் கலாசாரத்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் திரைக்கதையில் தேவை என்பதை உணர்ந்த பின்பே, இந்த முயற்சியில் இறங்கினேன். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி கூட்டணியில் உருவாகியிருக்கிற காமெடி, நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஹன்சிகா, அஞ்சலி இருவரும் தங்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். காமெடி படங்கள்தான் இப்போது தமிழ் சினிமாவின் வெற்றி இடங்களில் இருக்கிறது. அந்த வரிசையில் இதுவும் இருக்கும்'' என்றார் இயக்குநர் கண்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.