

கூடைப்பந்து விளையாட்டில் கால்பதித்த 3 ஆண்டுகளிலேயே இந்திய ஜூனியர் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளம் கூடைப்பந்து வீராங்கனையான வைஷாலி கேம்கர்.
ஆரம்பத்தில் 100 மீ., 200 மீ. ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட தட களப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த வைஷாலியின் விளையாட்டுப் பார்வை 2010-ம் ஆண்டு கூடைப்பந்து பக்கம் திரும்பியது.
நேரு மைதானத்தில் நடைபெற்ற தட களப் பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்த வைஷாலி, அங்குதான் முதல்முறையாக கூடைப்பந்து போட்டியை நேரில் பார்த்தார். அந்தத் தருணம்தான் அவர் தட களத்தில் இருந்து கூடைப்பந்துக்கு தாவ காரணமாக அமைந்திருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ண கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் படிக்கும் வைஷாலியை ஒரு மாலை வேளையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்தோம்.
கூடைப்பந்து மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
முதல்முறையாக கூடைப்பந்துப் போட்டியை நேரில் பார்த்தபோதே, குழு விளையாட்டான அதில் கவனம் செலுத்துவது என்று முடிவெடுத்தேன். எதிர் அணியினரை ஏமாற்றி தந்திரமாக பந்தைக் கடத்திச் சென்று கூடைக்குள் போடும் இந்த விளையாட்டில் மூளையின் பங்களிப்பே முக்கியமானது. நொடிப் பொழுதில் சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் பந்தை நம்மிடம் இருந்து எதிர் அணியினர் பறித்துவிடுவார்கள். இதுபோன்ற சில விஷயங்களாலேயே கூடைப்பந்து பக்கம் திரும்பியது என் கவனம்.
கூடைப்பந்து பயணம் பற்றி சொல்லுங்கள்?
2010-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் நான் இடம்பெற்றிருந்த தி.நகர் வித்யோதயா பள்ளி 3-வது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு தமிழக அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் எதிரொலியாக தற்போது இந்திய ஜூனியர் அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இந்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய ஜூனியர் அணியின் சார்பில் விளையாடவிருக்கிறேன்.
இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த மகாராஷ்டிரத்தின் ஷ்ரீன் லிமேயா, அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டான் ஆகியோர்தான் எனது ரோல் மாடல். ஜோர்டானை சந்திக்க ஆசைப்படுகிறேன். லிமேயாவின் உத்வேகமும், நம்பிக்கையும் எனக்குப் பிடிக்கும்.
கூடைப்பந்தில் தங்களின் இலக்கு?
அமெரிக்காவில் நடைபெறும் உலகின் முன்னணி போட்டியான டபிள்யூ.என்.பி.ஏ. (மகளிர் தேசிய கூடைப்பந்து சங்கம்) லீக் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது கனவு. அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா செல்ல இலக்கு நிர்ணயித்திருக்கிறேன். எப்படியும் 5 ஆண்டுகளில் டபிள்யூ.என்.பி.ஏ. லீக் போட்டியில் விளையாடத் தொடங்கிவிடுவேன்.
மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?
தேசிய அணிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றது, முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றது ஆகிய இரண்டும் எப்போதுமே மறக்க முடியாதது. முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம் ரூ. 1 லட்சம் பரிசையும் பெற்றிருக்கிறேன். அது விரைவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவிருக்கிறது.
பயிற்சி பற்றி சொல்லுங்கள்?
மயிலாப்பூர் மற்றும் வித்யோதயா பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். பயிற்சி மற்றும் போட்டியின்போது எனது அம்மா சுஜாதா என்னோடு வருகிறார். அவர் முன்னாள் வாலிபால் வீராங்கனை. எனது அக்கா அனாமிகாவும் வாலிபால் வீராங்கனை. அப்பா ராஜ் பிரகாஷும் எனக்கு ஊக்கமளித்து வருகிறார். இதுதவிர நான் படிக்கும் எம்.ஓ.பி.வைஷ்ண கல்லூரியும் கூடைப்பந்து விளையாடுவதற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.