நான் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டவன்!

"உறுமிக் கொண்டே தெருமுனையில் திரும்பி தூக்கம் கலைத்த கார் சத்தம்... மழைத் துளிகளோடு செய்தித்தாளை எறிந்து விட்டுப் போகும் பேப்பர் சிறுவன்...
நான் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டவன்!
Updated on
3 min read

"உறுமிக் கொண்டே தெருமுனையில் திரும்பி தூக்கம் கலைத்த கார் சத்தம்... மழைத் துளிகளோடு செய்தித்தாளை எறிந்து விட்டுப் போகும் பேப்பர் சிறுவன்... காகித குப்பைகளோடு மழைத்துளிகளையும் அள்ளிச் செல்லும் நீல் மெட்டல் பனல்கா ஊழியர்... இளநீர் வண்டிகள் பரவும் காலைப் பொழுது... மனதை உறுத்தும் பேப்பர் செய்தி... பசிக்கு கையேந்தும் சிக்னல் சிறுவன்... இப்படி எல்லா அதிகாலைகளிலும் புதிது புதிதான அனுபவங்கள் காத்திருக்கின்றன. இருந்தாலும் வாழ்வு எல்லாத் தருணங்களிலும் ரசிக்க கூடியது....'' பேட்டிக்கு வித்தியாசமான "இண்ட்ரோ' தந்து தொடங்கி வைக்க ப்ரியனால் மட்டுமே முடிகிறது. தமிழ் சினிமாவின் நம்பகமான ஒளிப்பதிவாளர். "சிங்கம் -2' பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான காரணகர்த்தா.
 உங்களை மாதிரி கேமிராமேன் ஆக என்ன செய்ய வேண்டும்....?
 தெரியலேயே...! ஷூட்டிங் பார்க்க வந்து, சினிமாக்காரனாக மாறியவன் நான். விருதுநகர் பக்கம் சொந்த ஊர். ஒரு கோடை விடுமுறைக்காக சென்னை வந்த போது, வாஹிணி ஸ்டூடியோ பக்கம் போகும் வாய்ப்பு. உள்ளே போனால், ஆங்காங்கே ஷூட்டிங். நான் பார்த்தது ஹிந்தி பட ஷூட்டிங். நடிகன், நடிகை, டைரக்டர், கேமிராமேன் அவர்களைச் சுற்றி அத்தனை பேர். அந்த இடம் அப்படி வசீகரித்து விட்டது. எதாவது ஒரு விஷயம் உள்ளுக்குள் இருக்கிற உணர்வுகளை, நினைவுகளைக் கிளறிவிட்டு விடும். அப்படி என் உணர்வுகளின் சில மறைமுகப் பக்கங்களைத் தூண்டி விட்டு, எனக்கு ப்ரியமான ஒரு கனவை நானே கண்டுப்பிடித்துக் கொள்கிற தருணத்தை கொடுத்தது அந்த ஷூட்டிங். இயக்குநர்தான் அங்கு கேப்டன் என்றாலும், கேமிராமேன் அதற்கும் மேல் போய் அவர் நினைக்கும் காட்சிகளைப் படமாக்கினார். அந்த மேஜிக் எனக்குப் பிடித்துவிட்டது. படிப்பு முடிந்து சினிமாவுக்கு வந்த பின் நான் பாலுமகேந்திரா சார் பக்கம் போய் விட்டேன். "மூன்றாம் பிறை', "சக்மா', "ஓலங்கள்' இதுவெல்லாம் நான் பாடம் படித்த படங்கள். பி.சி.ஸ்ரீராம் சாருடன் "நாயகன்', "பகல் நிலவு' படங்களில் வேலை பார்த்தேன். சுரேஷ்மேனன், ராஜீவ்மேனன் ஆகியோரிடம் மாணவனாகச் சேரும் வாய்ப்பு. சினிமாவில் நிறைய இஷ்டப்பட்டேன். அதை விட நிறைய கஷ்டப்பட்டேன். இதுதான் நான் கேமிராமேன் ஆன கதை.
 "பாரதிகண்ணம்மா', "பொற்காலம்' தொடங்கி "சிங்கம் 2' வரைக்கும் 27 படங்கள்... கடந்து வந்த சினிமா எப்படியிருக்கிறது....?
 சினிமாவில் வெற்றி மட்டுமேதான் முக்கியம். ஆனால் தோல்வியையும் பார்க்க வேண்டி வரும். சினிமா பிடித்து சென்னைக்கு வந்தேன். ஏமாற்றம், துரோகம், கண்ணீர் என எல்லாம் சுமந்த காலங்கள் உண்டு. விடா முயற்சி மட்டுமேதான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் இந்த இடம் கூட ஒரு விபத்துதான். எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம். ஒரு முறை கீழே போனால், திரும்பி வர நிறைய நேரம் பிடிக்கும். வராமலும் போகலாம். அதனால் அதிக நிதானம் மட்டுமே எப்போதுமே தேவைப்படுகிறது. தோல்விகளை விட வெற்றிகள்தாம் அதிகம் பேசப்படும். வெற்றியால் சந்தோஷம் அடைகிற அளவுக்கு தோல்வி வந்தால் நான் துவண்டு விடுவேன். அதனாலேயே இங்கு நித்தம் நித்தம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது.
 ஒரு வெற்றிப் படத்துக்கான அளவுகோலை எப்படி தீர்மானிக்கிறீர்கள்...?
 எல்லாமே கூடி வர வேண்டும். மனசும், உடம்பும் லயித்து இயங்க வேண்டும். கதைதான் ஒரு படத்தின் அளவுகோல். சில சமயங்களில் கதை சுமாராக இருந்தால் கூட, திரைக்கதை செட் ஆக வேண்டும். நான் எதிர்பார்க்கிற சில விஷயங்கள் சரியாக இருந்தால் வேறு யோசனை இல்லாமல் ஒரு படத்துக்குள் போய் விடுவேன். அதனால்தான் ரசனையாக படம் எடுக்கிற சேரன், வேகமான திரைக்கதைகளை கொண்ட ஹரி, நியாயமான கதை சொல்லும் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலதரப்பட்ட படைப்பாளிகளிடம் பயணிக்க முடிகிறது. ஏற்கெனவே நாம் பார்த்த பார்முலாக்களை உடைத்து நிற்கிற புத்தம் புது சினிமாக்களை கொடுத்தாலே போதும். அப்படி வருகின்ற ஒவ்வொரு படமும் தழைத்து நிற்பதற்கு நல்ல புரிதல் மட்டுமே போதும். இந்த விஷயம்தான் என் அடுத்தடுத்த பயணங்களுக்கானது.
 ஓர் ஒளிப்பதிவாளராக நீங்கள் திருப்தி அடைந்து விட்டீர்களா....?
 இல்லை. அது இயற்கைதான். எல்லோருக்கும் போலவே எனக்கும் சறுக்கல் இருக்கிறது. ஆனால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு இல்லை. சேரனோடு 4 படகள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் "தெனாலி', "வரலாறு' என 2 படங்கள். ஹரி ஞாபகம் வந்தாலே, கூடவே என் ஞாபகமும் பலருக்கும் வந்து விடும். இன்னும் சில படங்கள்... ஆனால் இவற்றைத் தாண்டி ரசனையாக ஒரு படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கிறது. யாரிடமும் வேலை பார்க்காமல், அனுபவங்களைச் சேகரிக்காமல் சிலர் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இது நல்லதா...? கெட்டதா...?ன்னு விவாதங்கள் போய்க் கொண்டிருக்கிறது. என்னைக் கேட்டால் எப்போதுமே சினிமாக்களில் ஒரு லைஃப் இருக்க வேண்டும். அதையெல்லாம் இப்போது வருகிறவர்கள் இழந்து விடுவார்களோ என்று பயம் வருகிறது. "உதிரிப்பூக்கள்', "சந்தியாராகம்', "மெட்டி', "16 வயதினிலே', "நாயகன்', "புவனா ஒரு கேள்விக்குறி', "மகாநதி', "பிதாமகன்' என கவனம் ஈர்த்த படங்களைப் போல் எதாவது ஒரு படத்திலாவது வேலை பார்க்க வேண்டும். பணத்தை மட்டுமே குறிவைக்கிற சினிமாக்கள் சில நேரங்களில் கவலை தருகிறது.
 சரி... அடுத்தடுத்த பயணங்களில் உங்களுக்கான இடம் எப்படியிருக்கும்...?
 ஒரு ஃபிலிம் மேக்கருக்கு நல்ல பயணம் அவசியம். சினிமாவின் மீது அதீதமான காதல் வர வேண்டும். அந்த எண்ணம் இப்போது எனக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. சினிமா ஓவியம் மாதிரி, சின்ன இடத்தில் மிஸ் செய்தால் கூட ரசனை இழந்து போகும். எதிலும் ஒரு பெயிண்டிங்கின் பூரணத்துவம் தெரிய வேண்டும். போராட்டம் இருக்கிற வரைக்கும் நல்ல இடம் கிடைக்கும். அதுதான் வளர்ந்து வருபவர்களுக்கு நான் சொல்லும் அட்வைஸ். என் கேரியர் முடியும் போது நான் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் ஓர் அடி முன்னாடி போய் நிற்க வேண்டும். அது போதும் எனக்கு.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com