எது சந்தோஷமோ அதுவே துயரம்! நாகராஜ்

'தினந்தோறும்' படம் வந்த போது நாகராஜை உற்று பார்த்தது தமிழ் சினிமா.... கனவுகள் பெருகும் இந்த தொழிற்சாலையில் நிறைய நிராசைகளோடும், காத்திருப்புகளோடும் திடீரென காணாமல் போனார்.
எது சந்தோஷமோ அதுவே துயரம்! நாகராஜ்
Updated on
2 min read

'தினந்தோறும்' படம் வந்த போது நாகராஜை உற்று பார்த்தது தமிழ் சினிமா.... கனவுகள் பெருகும் இந்த தொழிற்சாலையில் நிறைய நிராசைகளோடும், காத்திருப்புகளோடும் திடீரென காணாமல் போனார். "மின்னலே', "காக்க காக்க' படங்களுக்கு பளீச்சென காதல் வசனங்கள் தீட்டியதோடு, மறுபடியும் காணாமல் போனார். கடுமையான போதை, தடுமாறிய வாழ்க்கைன்னு தடம் மாறி நின்றார். இத்தனை கால இடைவெளிக்குப் பின், மீண்டும் எழுந்து, நடந்து "மத்தாப்பூ' படத்தின் மூலம் இயக்குநர் இடத்துக்கு
 வந்திருக்கிறார்.
 ""எப்போதும் எளிய மனிதர்கள்தான் தங்கள் வாழ்க்கையை குதூகலமாக வாழ்கிறார்கள். அப்படி... உங்களையும், என்னையும் மாதிரியான ஒருவனின் வாழ்க்கைதான் படம். காதல் எப்போதுமே சந்தோஷம். அதை உறவுகளின் பக்கத்தில் போய், உணர்வுப்பூர்வமாக எடுத்து வைத்தால் எப்படியிருக்கும். அப்படித்தான் இருக்கும் இந்த "மத்தாப்பூ'. எல்லாம் பொருந்தி வந்தால் காதல் அருமை. இல்லாவிட்டால் துயரம். இந்த காதல் எப்படி.... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.'' பக்குவத்துடன் பேசுகிறார் நாகராஜ்.
 காதல்தான் தமிழ் சினிமாவுக்கு கை வந்த கலையாச்சே... கதை என்ன....?
 எல்லாமே இருக்கும். நான் நாகர்கோவில் பக்கம் டிப்ளமா படிக்கும் போது கண் நிறைய கனவுகள். நன்றாகப் படித்து பெரிய நிலைக்கு வந்து விட வேண்டும் என்று இரவு, பகலாகப் படிப்பேன். தூக்கம் கலைந்து எழுந்திருக்கிற அம்மா, ""என்னடா இந்த நேரத்துல படிக்குற....''ன்னு கேட்பாங்க. ""உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாதும்மா...''ன்னு சொல்லி விடுவேன்.
 படிப்பில் இருந்த ஆர்வம் போய், சினிமாவுக்காக சென்னை வந்தேன். சினிமாவில் நல்ல இடத்துக்கு போராடிக் கொண்டிருக்கும் போது, ஊரு பக்கம் போனால், ""மெட்ராஸþல என்னடா பண்ற....''ன்னு கேட்பாங்க. ""இதுவும் உனக்கு புரியாதும்மா....''ன்னு சொன்னேன்.
 ""சாக்காடு வர்றதுக்குள்ள எனக்கு புரியுற மாதிரி எதாவது செய்யுடா....''ன்னு சொன்னாங்க. அம்மாவின் அந்த வார்த்தைகள் இப்போது சுடுது. அப்பா, அம்மா இருக்கும்போது அவர்களின் அருமை புரியலை. எல்லாவற்றுக்கும் திட்டுகிறார்கள் எனச் சொல்லி சலிப்பு அடைந்து போகிறோம். காலையில் எழுந்து வேலைக்கு போய் நல்லது, கெட்டது எல்லாம் பார்த்து வீடு தேடி வந்தால் ""சாப்பிட்டீயா...''ன்னு கேட்க ஆளு வேண்டும். இது இல்லாத வாழ்க்கை நரகம்தானே?
 அதிலிருந்து மீட்டெடுக்கிற பாசம், உபசரிப்பு, காதல், அன்பு இதற்கெல்லாம்தானே மனசும் ஏங்குகிறது. அப்படி ஒரு பாசத்துக்கு, அன்புக்கு இந்த படம் கௌரவம் கொடுக்கும். மனித உணர்வுகள்தான் கதை. காட்சிக்கு காட்சி கலகலப்பு இருக்கிற நேரத்தில் கொஞ்சம் கனத்தையும் திரைக்கதைக்குள் வைத்திருக்கிறேன்.
 
 பெரிய அனுபவங்களோடு வருகிற இயக்குநர்கள் இப்போது அரிதாகி விட்டார்கள்... ஒரு ஹிட் வந்தால்... பெரிய இடம் என்கிற நிலை வந்து விட்டது... உங்களுக்குத்தான் நல்ல சினிமாவுக்கான இலக்கணங்கள் தெரியுமே....?
 சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு சினிமா எல்லாவற்றையும் மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான். எந்த சினிமாவைக் கொடுப்பதென ஒரு படைப்பாளிதான் தீர்மானிக்க வேண்டும். அந்தப் படத்தின் வெற்றி தோல்விக்கு ரசிகர்கள்தான் மார்க் போட வேண்டும். ஒவ்வொரு விஷயத்துக்கும் தனியாக சினிமா வேண்டும். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதேசமயம் ஒரு மாதிரியான ஏரியாக்களில் "லாக்' ஆகி விடக்கூடாது. பெரிதாக மனசை தொடுகிற கதைகள் நிறைய இருக்கின்றன. அதற்கு முன்பு என்னை கமர்ஷியலாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது.
 
 புதுமுக ஹீரோ ஜெயன், 18 வயசு காயத்ரி இரண்டு பேரும் இந்த கதைக்கு எப்படி செட் ஆனாங்க...?
 இரண்டு பேருக்குமே ஓர் அழகான ஏரியா கிடைத்திருக்கிறது. ஹீரோ ஜெயன் சென்னை பையன்தான். இங்கேயே பிறந்து, வளர்ந்து, படித்தவர். சினிமாவுக்கு நடிக்க வர்றீயான்னு கேட்டதும், ""எப்படி சார் என் உடம்பை மாத்தணும்''ன்னு மாஸ் ஹீரோக்கள் மாதிரி கேட்டார். ""நடிக்க மட்டும்தான் செய்யணும். உடம்பை முறுக்கி, நசுக்குற வேலை இதில் இல்லைப்பா''ன்னு சொல்லி விட்டேன். நிஜமாகவே நன்றாக நடித்திருக்கிறார். காயத்ரிக்கு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற முகம். என் கவனமெல்லாம் கதையில்தான். ஹீரோயினை முன்னிலைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காயத்ரியின் திறமையை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொண்டேன்.
 அன்றைய "தினம்தோறும்' நாகராஜ் இன்று மீண்டும் சினிமாவில்... பளீச்சென வந்து, காணாமல் போய் மீண்டும் படம் இயக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது...?
 எது சந்தோஷமோ... அதுவே துயரம். போதையில் கிடைக்கிற ஞானம், எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாதுன்னு தெரிந்த போது, எனக்கான அடையாளமாக எதுவுமில்லை. மனைவி, மகனுக்கு ஏதோ வேலை பார்த்து காசு கொடுத்து விடுவேன்.
 ஆனால் எனக்கான தேவை குடியாக மட்டுமே இருந்து விட்டது. சினிமாவை விட்டு வெகு தூரம் போன, நான் வாழ்க்கையை விட்டு ரொம்ப தூரம் போய் விட்டேன். சினிமாவில் இருந்து அழிந்து போனதற்கு நான் சான்றாக இருந்து விடக் கூடாதென சின்னதாக புத்திக்குள் ஒரு வெளிச்சம். நிறைய படிப்பினைகள் பக்குவத்துக்கு அழைத்து வந்திருக்கிறது.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com