

புணேவில் சமீபத்தில் நடைபெற்ற 20-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்
100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெண்கலம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். இந்தப் போட்டியில் மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே தமிழக வீராங்கனை இவர் மட்டுமே. "ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு' என்று சிலிர்க்கிறார் ஹேமாஸ்ரீ!
கோவை மாவட்டம் ஒண்டிபுதூரைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ, ஜூனியர் பிரிவில் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டம், 4 ஷ் 100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கணிசமான பதக்கங்களை
குவித்தபிறகு, இப்போது சீனியர் பிரிவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று தனது சீனியர் பிரிவு இன்னிங்ûஸ வெற்றிகளோடு தொடங்கியிருக்கிறார் இந்த 21 வயது ஹேமா.
விளையாட்டு மைதானத்தில் ஒரு மாலை வேளையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹேமா, தடைகளை கடகடவென தாண்டி, இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். பயிற்சியை முடித்த பிறகு அவரை சந்தித்தோம். அவருடைய வேகமான ஓட்டத்தைப் போலவே அவரின் பதில்களிலும் வேகத்தைக் காண
முடிந்தது!
ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அனுபவம் பற்றி...
பள்ளியில் தொடங்கிய எனது தடகள வாழ்க்கை, இப்போது ஆசிய தடகளப் போட்டி வரை வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. எல்லா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுமே பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் சாதித்திருக்கிறார்கள். ஆனால் நான் பங்கேற்கும் போட்டியே, தடைகளைத் தாண்டக்கூடிய தடை தாண்டுதல் ஓட்டம்தான். அதனால் எந்தத் தடைகளைக் கண்டும் நான் அஞ்சுவதில்லை. இலக்கு ஒன்றை மட்டுமே லட்சியமாகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேன். அதனால் களத்தில் மட்டுமல்ல, வெளியில் சந்திக்கும் தடைகளையும் எளிதாகத் தாண்டிவிடுகிறேன்.
ஆசிய தடகளப் போட்டியைப் பொறுத்தவரையில் 13.8 விநாடிகளுக்குள் பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துதான் பயிற்சியில் ஈடுபட்டேன். அதேவேளையில் பதக்கம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் 14.01 விநாடிகளில் இலக்கை எட்டியபோதும், வெண்கலப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியே. தற்போதைய நிலையில் இதுதான் (14.01 விநாடிகள்) எனது "பெஸ்ட் டைமிங்'. மொத்தத்தில் இந்த ஆசிய தடகளப் போட்டி எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்துள்ளது.
உங்களின் அடுத்த இலக்கு?
அடுத்த ஆண்டு பிரிட்டனில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி, தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்பதும், பதக்கம் வெல்வதும்தான் என்னுடைய அடுத்த இலக்கு. வரும் செப்டம்பரில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறவுள்ள தேசிய ஓபன் தடகளப் போட்டி மற்றும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கிறேன்.
ஹேமாவின் ரோல் மாடல்?
லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தங்கம் வென்ற சாலி பியர்சன்தான் எனது ரோல் மாடல். போட்டியில் தடைகளைத் தாண்டும்போது சாலி பியர்சனின் "ஆக்ஷனும்', என்னுடைய "ஆக்ஷனும்' ஒரே மாதிரியாக இருப்பதாகச் சிலர் கூறினார்கள். எனவே அவரைப் போல் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
உங்களின் சாதனைகளை எப்படி
பட்டியலிடலாம்?
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளியும், 4 ஷ் 100 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்றுள்ளேன். இதேபோல் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டுதலில் தங்கம் வென்றிருக்கிறேன்.
ஜூனியர் பிரிவில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் ஏராளமான பதக்கங்களைக் குவித்துள்ளேன். வியத்நாமில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கிறேன். ஜூனியர் 100 மீ. தடை தாண்டுதலில் 18 மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய போட்டிகளில் "பெட்டர் மீட் ரெக்கார்டு' என் வசமே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.