

‘பொதுவாக கிராம மக்களை ஒருங்கிணைப்பதில் கோயில் திருவிழாக்களுக்கு முக்கியப் பங்குண்டு. இதில் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் தவறாமல் இடம் பெறுவது வழக்கம். தற்போது இந்நிகழ்ச்சிகள் குறைந்து, நவீன ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அதிகரித்துவிட்டன.
ஆனால், தேனி மாவட்டத்தில் இன்னும் பல்வேறு கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் இன்னமும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை அணிந்து ஆடினால் தத்ரூபமாக இருக்கும் என்கின்றனர் கிராமவாசிகள்.
இந்த பொம்மைகள் தயாரிப்பில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் கிராமத்தில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. கோயில் விழாக்களில் காவடி, முளைப்பாரி, அலங்காரப் பொருள்கள் மற்றும் ஆழி பொம்மைகள் உள்ளிட்டவை ரூ.100 முதல் ரூ.500 வரை வாடகைக்கும் விடப்படுகின்றன.
பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுருளிவேல் கூறுகிறார்:
""மண்பானைகள் செய்வது எங்களது குடும்பத் தொழில். இத்தொழில் நலிவடைந்ததால் டெய்லராக வேலை செய்தேன். சுற்றியுள்ள கிராமக் கோயில் திருவிழாக்களில் குறவன், குறத்தி, மாடு போன்ற வேஷங்களுக்குத் தேவையான பொருள்கள் இன்றி சிரமப்பட்டனர். ஆகவே, இப்பொருள்களை நாமே தயாரித்து வாடகைக்குவிட்டால் என்ன என்று தோன்றியது. இதையடுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மூங்கில், மைதா மாவு, அட்டை, மல்லுத்துணி ஆகியவற்றை வைத்து ஆழி பொம்மைகளைத் தயாரித்தேன். இவற்றைப் பார்த்த கிராம மக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
இதனால் மான், கரடி, சிவன், பார்வதி, குதிரை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொம்மை வகைகளைத் தயாரிக்கத் தொடங்கினேன். இப்பொம்மைகளை தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் ராஜபாளையம், விழுப்புரம் ஆகிய ஊர்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
கல்லூரி விழாக்கள் மற்றும் கோயில் விழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பொம்மைகளை வாடகைக்கு விடுகிறேன். இதற்கு முன்தொகையாக ரூ.500-ம் வாக்காளர் அடையாள அட்டையும் வாங்கிக்கொண்டு பொம்மைகளை கொடுத்தனுப்புவேன்''என்கிறார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.