பூரி தேர் விற்பனைக்கு!
பூரி என்றதும் அனைவருக்கும் தேர் திருவிழாதான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் மூன்று தேர்களில் ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா விக்கிரகங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு பவனி வரும். ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவிற்காக ஆண்டுதோறும் புதியதாகத் தேர்கள் தயாரிக்
கப்படும்.
இதற்காக 1000 மரங்கள் (சுமார் 65 லட்ச ரூபாய் மதிப்பு) வெட்டப்பட்டு, செதுக்கப்பட்டு தேர்கள் செய்யப்படுகின்றன. ஜகந்நாதர் தேருக்கு "நந்தி கோஷம்' எனவும், பலபத்ரர் தேருக்கு "தாளத்வஜம்' எனவும், சுபத்ரா தேருக்கு "தேவதாளனம்' எனவும் பெயர். இவற்றில் ஜகந்நாதர் தேர் பெரியது. இதற்கு 16 சக்கரங்கள்! பலபத்ரர் தேருக்கு 14 சக்கரங்கள். சுபத்ரா தேருக்கு 12 சக்கரங்கள்! ஆக மொத்தம் 42 சக்கரங்கள்!
பொதுவாக தேரோட்டம் முடிந்ததும் தேர் முழுவதும் பிரிக்கப்பட்டு, மரம், பூரி கோயிலின் சமையலறைக்கு எரிக்க அனுப்பப்படும்! ஜகந்தாதர் கோயிலின் சமையலறை நாட்டிலேயே மிகப்பெரியது ஆகும். நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு இங்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவு "மகாப்பிரசாதம்' என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் பிரிக்கப்பட்ட வண்ண அலங்கார தூண்களை அடுப்பெரிக்கப் பயன்படுத்தாமல், கோயில் நிர்வாகம் அவற்றை அப்படியே பாதுகாக்கிறது. மீதமுள்ள மரச்சட்டங்களை பக்தர்கள் விரும்பினால் தேரின் சக்கரங்கள் உட்பட விலைக்கு வாங்கி பாதுகாக்கலாம் எனக்கூறி, ஏலம்விட்டது. ஒருவர் ஜகந்நாதர் தேர் சக்கரம் ஒன்றை ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். மற்றொருவர் ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மேலும் சிலர் அதிக விலைக்கு கேட்டுள்ளனர்.
இதனிடையே இதற்கு பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், "எரிப்பதைத் தானே விற்கிறோம்' என கோயில் பதில் கூறி சமாளித்துவிட்டது!
அத்துடன் இந்த ஆண்டு தேர் திருவிழா முடிந்ததும், மீண்டும் புதிய சக்கரங்களை ஏலம் விட கோயில் தீர்மானித்துள்ளது. பூரி ஜகந்நாதருக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் வாங்குவார்கள் என்பது கோயில் வாதம். விற்பனையில் ஒரு கன்டிஷன் உண்டு.
எந்த காரணம் கொண்டும்,வியாபார நோக்கில் அவற்றை திரும்ப விற்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.