

தேசிய அளவிலான எறிபந்து (த்ரோபால்) போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக முத்திரைப் பதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வி. ஐரோப்பியாவில் தோன்றிய ஃபிஸ்ட் போட்டியிலும் ஜொலித்து வருகிறார்.
தற்போது தமிழக அணிக்காக விளையாடி வரும் இவர், பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த தமிழக அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர். அண்ணா ஆதர்ஷில் பி.காம். படித்து வரும் இவரைச் சந்தித்தபோது:
""சென்னை செயின்ட் மேரிஸ் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தபோது எறிபந்து விளையாட்டின் மீது ஏற்பட்ட ஆர்வம், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரிக்கு வந்த பிறகும் தொடர்ந்தது. அதனால் தொடர்ந்து த்ரோபாலில் கவனம் செலுத்த வெற்றிகள் என் வசமாயின.
2011-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் த்ரோபால் போட்டியில் நான் இடம்பெற்றிருந்த சென்னை அணி தங்கம் வென்றது. அதுதான் பெரிய அளவிலான போட்டிகளில் நான் வென்ற முதல் பதக்கம்.
2011-12-ம் ஆண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் விளையாடிய தமிழக அணியில் நானும் இடம்பெற்றிருந்தேன். அதில் தமிழகம் வெண்கலம் வென்றது. இதுதான் தேசிய அளவிலான போட்டியில் எனக்கு கிடைத்த முதல் பதக்கம். அதன்பிறகு தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு மட்டுமல்ல, எங்கள் கல்லூரிக்கும் பெருமை சேர்த்திருக்கிறேன்.
23-வது ஃபெடரேஷன் கோப்பை போட்டி 2012 ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் என்றாலே கடும் குளிர் என்பார்கள். ஆனால் நாங்கள் சென்ற நேரம் குளிரும் இல்லை, வெயிலும் இல்லை. அதனால் மனதை வருடிய இதமான சூழலில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அரையிறுதி வரை எதிர் அணிகளைப் பந்தாடினோம்.
இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தில்லி அணியை எதிர்கொண்டோம். தமிழக வீராங்கனைகள், தில்லி வீராங்கனைகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதால், போட்டி விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் மாறிமாறி முன்னிலை பெற்றோம். எனினும் கடைசிக் கட்டத்தில் நூலிழையில் வெற்றி வாய்ப்பு எங்களிடம் இருந்து நழுவியது. அதனால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. காஷ்மீரில் நிலவிய அந்த இதமான சூழலும், விறுவிறுப்பான போட்டியும் என்றுமே மறக்க முடியாதவை.
தமிழ்நாடு எறிபந்து சங்கச் செயலர் பால விநாயகம்தான் என்னுடைய ரோல் மாடல். அவர் எனக்கு பல்வேறு வழிகளில் ஊக்கமளித்து வருகிறார். பயிற்சியாளர் திருப்பதி ராஜேஷ், எனது உடற்கல்வி ஆசிரியைகள் சுகன்யா, சீதாலெட்சுமி ஆகியோரைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவர்கள் எனக்கு பெரிய அளவில் உத்வேகத்தை கொடுக்கும் அதேவேளையில், எனது தவறை சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை. எனது பெற்றோரும் எனக்கு பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர்'' என்றார் கலைச்செல்வி.
- ஏ.வி.பி.தாஸ்
படங்கள்: கே.அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.