

கடலின் நீண்ட நீர்ப் பரப்பையும், அதில் எழும் ராட்சத அலைகளையும் கரையில் நின்று பார்த்தாலே நமக்குள் சற்று அச்சம் எழும். ஆனால் அந்த அதிவேக அலைகளையும், சுழன்று, சுழன்று அடிக்கும் காற்றையும் கண்டு சற்றும் பயம் கொள்ளாமல், பாய்மரப் படகை மின்னல் வேகத்தில் செலுத்துகிறார் சென்னையின் 17-வயது ஐஸ்வர்யா நெடுஞ்செழியன்.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கடல்களிலும் பல கிலோ மீட்டர் தூரம், பாய்மரப் படகை செலுத்தி சாதித்திருக்கும் ஐஸ்வர்யாவை, சென்னை துறைமுக கடல் பகுதியில் பயிற்சியிலிருந்தபோது சந்தித்தோம்.
""அக்கா அஸ்வினி ஓசனோகிராபி படிக்க விரும்பியதால், அது தொடர்பான தேடலுக்காக இணையதளத்துக்குள் சென்றபோதுதான், பாய்மரப் படகுப் போட்டியை பற்றி தெரிந்துகொண்டேன்.
2011-க்கு முன்பு வரை வார இறுதியில் மட்டுமே பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்று வந்தேன். 2011-இல் பிரிட்டிஷ் பயிற்சியாளர் பீட்டர் கான்வேயை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த சந்திப்புதான் நான் முழுநேர வீராங்கனையாக மாற காரணமானது.
படகுப் போட்டியில் பங்கேற்பதற்கு சிறந்த இடம் நம்ம ஊர் (சென்னை) கடல்தான். இங்குதான் ஆண்டு முழுவதும் நல்ல காற்றடிப்பதோடு, நல்ல காலநிலையும் நிலவுகிறது. அதனால் இங்கு மட்டும்தான் 365 நாள்களும் பயிற்சி மேற்கொள்ள முடியும். ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் பனிக் காலங்கள் வந்துவிட்டால், பயிற்சி மேற்கொள்ள முடியாது.
தாய்லாந்தின் பட்டயா, சான்பிரான்சிஸ்கோ, மலேசியா, ஆஸ்திரேலியாவின் சிட்னி, பிரிஸ்பன், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கத்தார் தலைநகர் தோஹா ஆகிய பகுதிகளில் உள்ள கடல்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன்.
வெளிநாடுகளில் பங்கேற்கும்போது 2 நாள்களுக்கு முன்னதாக அங்கு படகை வாடகை எடுத்து பயிற்சி மேற்கொள்வோம். அப்போது அந்த கடல் பகுதியை மட்டுமன்றி, அங்கு வீசும் காற்று மற்றும் அலைகளின் வேகத்தையும் கணித்துவிடுவோம். அதனால் போட்டியில் பங்கேற்கும்போது மிகவும் எளிதாக இருக்கும்.
தினந்தோறும் 4 மணி நேரம் பயிற்சி மேற்கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு நல்ல உடல்திறன் முக்கியமாகும். அப்படி இருந்தால் மட்டுமே படகில் கயிறுகளை முழு பலத்தோடு இழுத்து, சரியான திசையில் செலுத்த முடியும்.
2016-இல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க காத்திருக்கிறேன். அடுத்ததாக நெதர்லாந்து போட்டியில் பங்கேற்கவுள்ளேன். அதன் பிறகு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 2015-இல் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுகள் தொடங்கவிருக்கிறது.
இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.25 லட்சம் எனக்கு கிடைத்துள்ளது. தமிழக முதல்வரின் இந்த நல்ல முயற்சியால், நிதிச்சுமை குறைந்தது. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று, தமிழகத்துக்கும், எனக்கு உதவிய முதல்வருக்கும் பெருமை சேர்ப்பேன்'' என்கிறார் நம்பிக்கையுடன் ஐஸ்வர்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.