

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவோடு ஏப்ரல் 29-அன்று நாரதகான சபாவில் அரங்கு நிறைந்த காட்சியாக அரங்கேறிய நாடகம் "தலைமுறைகள்'. நாடக வரலாற்றில் கடந்த சில ஆண்டுகளாக கதை, வசனம், இயக்கம் ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்து வரும் சி.வி.சந்திரமோகனின் 8-ஆவது படைப்பு இது. இயக்கியிருப்பவர் எம்.ஜெயக்குமார்.
"ஒரு மெüனம் கலைகிறது' என்ற பெயரில் 2002-இல் "கி.வா.ஜ. முத்திரைக் கதையாக'த் தேர்வு செய்யப்பட்டு, "கலைமகள்' இதழில் வெளியான இச்சிறுகதை "தலைமுறைகள்' என்ற பெயரில் சில மாற்றங்களுடன் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் ஏகாதியபத்திய ஆட்சியில் பல இன்னல்களைச் சந்தித்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகியும் மருத்துவருமான விஷ்வநாதன். தன் மகன் ஆர்யாவுக்கு இளம் வயதிலேயே தேசப்பற்றையும் தெய்வப்பற்றையும் நெஞ்சில் ஊன்றி விதைத்ததன் காரணமாக ஆர்யா தன் பெயரனான மோகனுக்குக் "காந்தி' எனப் பெயரிட்டு, தேசபக்தியையும் தெய்வபக்தியையும் ஊட்டி தன் பெயரனையும் அவ்வாறே வளர்க்கிறார்.
"விளையும் பயிர் முளையிலேயே' தெரிகிறது. ஓய்வான நேரங்களைத் தன் தாத்தாவுடனும் "சத்திய சோதனை'யுடனும் கழிக்கிறான் காந்தி. என்றாலும், சில நாள்களாக தாத்தாவின் மெüனம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அவனுக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் இருப்பவருக்கும்தான்!
இன்றைக்குள்ள இளைஞர்களைத் தீயவழியில் வழிநடத்திச் செல்ல பாதை அமைத்துத்தரும் கைபேசி, கணினி, இணையதளம், மின்னஞ்சல், முகநூல், திரைப்படம் போன்றவற்றைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் தன் தாத்தா பின்னாலேயே "சத்திய சோதனை' நூலுடன் வலம் வரும் தன் மகன் மோகனை நினைத்து, தன் விருப்பம் போல அவனை வளர்க்க முடியவில்லையே எனக் கவலைப்படும் ஒரு தந்தைக்குள்ள அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்துகிறார் சுபாஷாகக்
களமிறங்கும் மது.
""இன்றைக்குள்ள தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தன் மகன் கெட்டுப் போகவில்லையே என்று வருத்தப்படும் தந்தையை இப்போதுதான் நான் முதன் முதலில் பார்க்கிறேன்'' என்று தன் கணவனிடம் கூறுமிடத்திலும், மாமனாரின் மனதைப் புரிந்து நடந்து, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க நினைக்கும் தருணங்களிலும், மதுவின் மனைவியாக வரும் கோகிலா அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.
ஆர்யாவின் நீண்ட நாள் மெüனம் சில உண்மைகளை வெளிப்படுத்துகிறது. அவருடைய மெüனத்திற்கான காரணம், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வாழ்ந்த தன் தாத்தாவின் வீட்டை இடித்து, தன் மகன் மோகனின் எதிர்கால வாழ்க்கைக்காக ஆடம்பரமாக - அடுக்கு மாடியாகக் கட்ட நினைக்கும் சுபாஷும், அந்த வீட்டைக் கோயிலாக நினைக்கும் ஆர்யா அதை இடிக்க உடன்படாததும்தான்!
""இது என் தாத்தா காலத்து வீடு. இங்கதான் என் அப்பா பிறந்தார். இது வீடு இல்லை சரித்திரம்; கோயில். இந்த வீட்டில் எந்த இடத்தைத் தொட்டாலும் "வந்தே மாதரம்' என்றுதான் கேட்கும் என்று கூறி அவர் தொடும் இடங்களெல்லாம் "வந்தே மாதரம்' கேட்பதும், இதுபோன்ற வசனங்களில் மனதைத் தொடுகிறார் தாத்தா ஆர்யாவாக தத்ரூபமாக நடித்திருக்கும் எம்.ஜெயக்குமார்.
""ஆர்யா.., வருஷா வருஷம் ஆகஸ்டு 15-ந் தேதி வீட்டு மொட்டை மாடியில் தேசியக் கொடி ஏத்தறீங்களே! உங்க மகன் மனதில் உங்களுடைய தேசிய உணர்வை ஏத்த மறந்துட்டீங்களே..!'', ""இந்தியாவுக்குள் நாம் இருக்கிறோம் என்பதைவிட நமக்குள் இந்தியா இருக்கிறது என்பதில்தானே பெருமை'' என்று பேசும் ஆர்யாவின் குடும்ப நண்பராக - அங்கிளாக வரும் கிருஷ்ணதுளசியின் வசனங்கள் மனதைத் தைக்கவும் செய்கின்றன; மருந்தாகவும் ஆகின்றன.÷
""எனக்கு என் தாத்தா வேணும்; என் தாத்தாவுக்கு இந்தக் கோயில் வேணும்; தயவுசெஞ்சு அவர் உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த வீட்டை இடிச்சுடாதீங்க சார்'' என்று நெகிழ்ந்து கூறும் மாஸ்டர் காந்திக்கு இது முதல் மேடை என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
தன் ஒரே மகனைக் கூட்டிக்கொண்டு அப்பா தன் நண்பருடன் வீட்டை விட்டுச்செல்லக் கிளம்பும்போது, ""இந்தக் கோயிலின் மூலவர் நீங்க; நீங்களே போயிட்டா உற்சவரான எனக்கு இங்கு என்னப்பா வேலை?'' என்று மகன் சுபாஷ் கதறி அழுது மன்னிப்பு கேட்கும்போதுதான் ஆர்யாவின் மெüனம் கலைகிறது; அப்போது அவர் பேசும் வசனங்கள் நெஞ்சை நெகிழவும் வைக்கிறது.
கலைவாணர் கிச்சாவின் ஒளி அமைப்பும், குக பிரசாத்தின் பின்னணி இசையும், உஷா ஸ்டேஜ் பாபுவின் அரங்க வடிவமைப்பும், பெரம்பூர் குமாரின் ஒப்பனையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து ஓர் உயிரோட்டமுள்ள "தலைமுறைக்கு' ஒத்துழைப்பு நல்கியுள்ளது.
கதை இன்பத்தோடு காட்சி இன்பத்தையும் நல்கிய இயக்குநர் சி.வி.சந்திரமோகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! எத்தனையோ தலைமுறைகள் கடந்தும் சி.வி.எஸ்.சின் இந்தத் "தலைமுறைகள்' நிலைத்து
நிற்கும்!
-இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.