அடையாளம்தான் முக்கியம்! விஜய் மில்டன்

""நல்ல கதை இருந்தாலும் அதைச் சொல்வதற்கு தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் உங்களால் நம்ப முடியுமா? அப்படித்தான் இருக்கிறது
அடையாளம்தான் முக்கியம்! விஜய் மில்டன்
Updated on
2 min read

""நல்ல கதை இருந்தாலும் அதைச் சொல்வதற்கு தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் உங்களால் நம்ப முடியுமா? அப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழ் சினிமா. நல்ல படம் எடுத்தால் வாங்கி வெளியிடக் காத்திருக்கும் சிலர், கதை கேட்டு சினிமா தயாரிக்க மறுக்கிறார்கள். இது சினிமாவுக்கு நல்லதா? கெட்டதா? என்று கருத்து சொல்ல முடியாது. கிடைப்பதை வைத்துக் கொண்டு பயணப்பட வேண்டியதுதான்'' தொடக்கத்திலேயே இன்றைய சினிமா குறித்து டாப் கியர் கமெண்ட் அடிக்கிறார் விஜய் மில்டன். "ஆட்டோகிராப்', "காதல்', "வழக்கு எண்' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்தவர். "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்துக்குப் பின் "கோலி சோடா' மூலம் கோடம்பாக்கம் நுழைகிறார்.
 "கோலி சோடா' எப்படி உருவானது...?
 நான் பக்கா மெட்ராஸ்காரன். வடபழனி, கோயம்பேடு என எல்லா இடங்களும் அத்துப்படி. அப்போதெல்லாம் நூறடி சாலையை ஒட்டி நிறைய வெட்ட வெளி மைதானங்கள் இருக்கும். நான், இன்னும் சிலர் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதுதான் முழு நேர வேலை. அப்படி ஒரு நாள் சிறுவர்களாகிய எங்களுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே சின்ன சண்டை. அது அத்துடன் முடிந்து விட்டது. திடீரென்று ஒரு கும்பல் நாங்கள் இருந்த பகுதியில் வந்து கதவைத் தட்டி எழுப்பினார்கள். பார்த்தால் நாங்கள் சண்டை போட்டது ஒரு ரவுடி கும்பலிடம். அதன் பின் வாக்குவாதம், சண்டை எனக் கலவரமாகி அந்த சம்பவம் முடிந்து போனது. வெகு நாள்களாகவே அது என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. கொஞ்சம் யோசித்தால் சினிமாவுக்கான கதை அதில் இருந்தது. சுவராஸ்யமும், த்ரில்லரும் கலந்த ஏரியா அது. சோடாவை உடைக்கும் போது ஜாக்கிரதையாக உடைக்க வேண்டும். தவறான முறைகளில் கையாண்டால் அது கைகளை பதம் பார்த்து விடும். ஓர் எளிய சோடா கை, கால், முகம் என நம்மை பதம் பார்த்து விடும். சிறுவர்களும் அப்படித்தான். அவர்களை எப்படிப் பார்க்கிறமோ, அப்படியே
 இருப்பார்கள்.
 "பசங்க' படத்தில் பார்த்த அதே பசங்க. ஆனால் "ரேணிகுண்டா' சாயல் இருக்குமோ...?
 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒரு புள்ளியில்தான் வளர்ச்சியைத் தொடுகிறார்கள். முதல் முத்தம், முதல் காதல் என எது வேண்டுமானாலும் அந்த வளர்ச்சிக்கு பக்கத்தில் இருக்கலாம். திடீரென்று அப்பா இறந்து விட, குடும்பத்தின் மொத்த சுமையும் சின்னஞ்சிறு பிள்ளையின் வாழ்க்கையைக் கலைத்துப் போட்டு விடும். அந்த கணமே அந்த குடும்பத்துக்கு தலைவனாகி விடுவான் சிறுவன். இப்படி ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொருவரின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. எதிர்பார்க்காத ஏதோ ஒரு விஷயம் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறது. அந்த புள்ளி சண்டையாக இருந்தால் எப்படியிருக்கும்? ஆமாம், இது ஆக்ஷன் படம்தான். ""பயந்து போக நாங்கள் சின்ன பசங்களும் கிடையாது. எதிர்த்து சண்டை போட நாங்க பெரிய ஆளுங்களும் கிடையாது'' என படத்தில் வசனம் வரும். சொல்லப் போனால் இதுதான் படத்தின் கதையும் கூட. இப்படிப்பட்ட ரிஸ்க்கான இடத்தில் இந்தக் கதையைச் சொல்லி முடித்திருக்கிறேன்.
 படத்தில் வேறு என்ன ஸ்பெஷல்...?
 எல்லோருக்குமே அடையாளம் முக்கியம். உணவு, உடை, இருப்பிடம் இதுவெல்லாம் கிடைக்காத ஒருவன் சமூகத்துக்கு எதிராகச் சண்டை போடுகிறான். அது அவனை திருடன், சமூக விரோதி, தீவிரவாதி என மாறுபட்ட அடையாளங்களில் போய் நிறுத்திக் காட்டுகிறது. காலையில் எழுந்து உதயம் தியேட்டர் பக்கம் போய் பார்த்தால், ஒரு பக்கம் "பளீர்' ஆடைகளுடன் பள்ளி குழந்தைகள் பெற்றோர்களுடன் பஸ்ஸýக்குக் காத்திருக்கிறார்கள். எதிர்ப்புறம் பார்த்தால், கந்தல் ஆடைகளுடன், குளிக்காமல், பல் தேய்க்காமல் அமர்ந்திருக்கும் அநாதைக் குழந்தைகள். இதைத் தீர்மானித்தது யார்? பஸ்ஸýக்குக் காத்திருக்கும் பள்ளிக் குழந்தை அங்கேயும், கந்தல் ஆடையுடன் அமர்ந்திருக்கும் குழந்தை இங்கேயும் இருந்தால் எப்படியிருக்கும். ஆக, பிறப்புதான் பலருக்கும் அடையாளமாக இருக்கிறது. அந்த விஷயத்தை திரைக்கதையின் பெரிய பங்காக எடுத்து
 வைத்திருக்கிறேன்.
 "கோலி சோடா' கேரக்டர்கள் எப்படிப்பட்டவர்கள்....?
 மீசை அரும்பும் வயது சிறுவர்கள் இந்த கதைக்குத் தேவைப்பட்டார்கள். இதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்க்கிற நூற்றுக்கணக்கான சிறுவர்களைத் தேர்வு செய்து பார்த்தேன். எதேச்சையாக இயக்குநர் பாண்டிராஜை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது, ""பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் அந்த ஸ்டேஜில்தான் இருக்காங்க. வேணும்ன்னா பேசி பாருங்க''ன்னு சொன்னார். அப்படித்தான் அந்த நாலு பேரும் இந்த கதைக்குள் வந்தார்கள். சின்ன சின்ன பயிற்சிகள் தந்து, படம் முழுக்க அவர்களை உலவ விட்டிருக்கிறேன். கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி, காய்கறி பொறுக்கிச் சம்பாதிக்கிற இன்னும் நிறைய பேர் இதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு முகம். விசாரித்தால் எல்லாரும் சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் பக்கத்தில் இருந்து கிளம்பி வந்திருக்கிறார்கள். அவர்களின் கஷ்டம், கோபம், சந்தோஷம், துக்கம், அழுகை எல்லாவற்றையும் கேட்டேன். இவர்களையும் ஒன்றாகக் கோர்த்து பார்த்ததால் நல்ல படம் எடுத்த திருப்தி இருக்கிறது. ஆசியாவின் இரண்டாவது பெரிய மார்க்கெட்டான கோயம்பேட்டை காட்சியாக கொண்டு வந்திருக்கிறேன். ரொம்ப தூரத்தில் ஒரு கேமிரா, பக்கத்தில் ஒன்று, சின்ன சின்ன விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க மற்றொன்று என்று படப்பிடிப்பில் மூன்று இடங்களில் கேமிரா இருக்கும். நிஜமாகவே கோயம்பேடு மார்க்கெட்டில் கதை நடந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஓர் எதார்த்தம் இந்த படத்தில்
 இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com