நல்லதாகவே நடந்து கொண்டிருக்கிறது! தினேஷ்

சின்னச் சின்னத் தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி மொத்த அனுபவங்களையும் பெற்று விட இந்த ஒரு வாழ்க்கை போதாது.
நல்லதாகவே நடந்து கொண்டிருக்கிறது! தினேஷ்
Updated on
2 min read

சின்னச் சின்னத் தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி மொத்த அனுபவங்களையும் பெற்று விட இந்த ஒரு வாழ்க்கை போதாது. இதோ நம் பக்கத்தில் நடக்கிற சின்னச் சின்னத் தவறுகளிலிருந்து கூட அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஏதோ ஓர் உபதேசம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை. இதைச் சொல்லி முடிக்கும் போது தினேஷின் முகத்தில் அவ்வளவு பிரகாசம். "அட்டக்கத்தி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். "வாராயோ வெண்ணிலாவே', "குக்கூ', "திருடன் போலீஸ்' என எதார்த்த சினிமாக்களின் பக்கம் நிதானமாக நிற்கிறார்.

""சென்னையில் ராயபுரம்தான் சொந்த ஊர். சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம். கால் போன போக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் ஏதோ இந்த சினிமா மேல் ஆசை. சினிமா பற்றிய
 தெளிவு என்னிடம் இருந்தது. ஆனால் சினிமா வாயிலுக்கான திறவு கோல்கள் என்னிடம் இல்லை. விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு சினிமா பக்கம் கொஞ்சம் இழுத்து விட்டது. ""பாலுமகேந்திரா சார் பட்டறை பக்கம் போனா சினிமா கத்துக்கலாம்''ன்னு சொன்னாங்க. நானும் அந்த பக்கம் போய் கொஞ்சம் கற்றுக் கொண்டேன். அப்போது அங்கிருந்த இயக்குநர் வெற்றிமாறன் கொஞ்சம் பழக்கம். வெளியில் வந்ததும் என்னை வைத்து "தசையினை தீச்சுடினும்'ன்னு ஒரு படம் ஆரம்பித்தார். ஏதோ சில காரணங்களால் அது அப்படியே நின்று போனது. இப்படி ஒரு தோல்வியின் பக்கத்தில் இருந்துதான் நான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினேன்.'' மென் புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் தினேஷ்.
 ""சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறையக் கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லோருமே அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்களைக் கொடுத்தார்கள். சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் உள்ள சிக்கல்களை நான் புரிந்து கொள்ள துணைக்கு நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது.
 "இவன் பெரிய ஆளு...'ன்னு சில பேர் எடை போட்டார்கள். அப்படி ஓர் ஆள்தான் "அட்டக்கத்தி' இயக்குநர் ரஞ்சித். பெரிய இடம் தந்து, சினிமாவில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். வாழ்வு நெடுகிலும் நல்ல நண்பர்கள்.
 ஒரு படம்தான் முடித்திருக்கிறேன். சினிமாவில் பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறைய வாழ்த்துக்கள் என் வசம் வந்திருக்கிறது. ""இயல்பா இருக்கப்பா...''ன்னு நிறைய பேர் சொல்கிறார்கள்.
 இவற்றையெல்லாம் விட போராடி வெற்றி பெறத் துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடித்திருக்கிறது. ""கதையில் நீங்க பயணித்த விதம் நன்றாக இருந்தது..., ஊருக்கு போகலாம்ன்னு இருந்த எனக்கு உங்க சினிமா நம்பிக்கை தந்திருக்கு...'' இந்த வார்த்தைகள் எல்லாம் அற்புதம். ஆனாலும் இதற்கு நான் உண்மையாக இருக்க வேண்டுமே? நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தேன். தேடி வந்தவவை நிறைய. நான் தேடிப் போனவை சில. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். பிடிக்கிற படங்களுக்குள் இருக்கிறேன் என்று நினைக்கிற போதே மனசு ஜில்லென்று ஆகிறது.
 அடுத்து "வாராயோ வெண்ணிலாவே'. வெங்கட் பிரபுவின் உதவியாளர் சசிதரண் இயக்குகிறார். ஹரிப்பிரியா, காவ்யாஷெட்டி ஜோடி. காதல் கதைதான். ஆனால் திரைக்கதையில் இருந்த எதிர்பாராத திருப்பங்கள் அந்தக் கதையை என் பக்கத்தில் கொண்டு வந்தது. "அட்டக்கத்தி' தந்த இடம், அதை காப்பாற்ற வேண்டிய கடமை இந்த படத்தில் இருக்கிறது.''
 ராஜுமுருகன் இயக்கும் "குக்கூ' உடம்பும், மனசும் லயித்து இயங்குகிற படம். காலம் கடந்தும் பார்க்க கூடிய படங்களில் இருக்க வேண்டும் என்பதுதானே ஒரு கலைஞனுக்கு கனவாக இருக்க முடியும்? அப்படி ஒரு படம் அது. இதோ நீங்களும், நானும் பார்த்து, ரசித்து, தரிசிக்கிற இந்த உலகம்தான் கதை. தமிழ், சுதந்திரகொடி என இரண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருக்கிற காதல், அதன் உன்னதம் என கதை போகும். நல்ல படம், நல்ல இடத்துக்கு என்னைக் கொண்டு போகும்.
 "ஆரண்ய காண்டம்' சமயத்தில் எஸ்.பி.பி.சரண் சாரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த படத்தைத் தயாரிக்க தனி தில் வேண்டும். இப்போது அவர் படத்தில் நான். புதுமுகம் கார்த்திக் ராஜு இயக்கும் "திருடன் போலீஸ்'. இதுவும் வித்தியாசமான களம். அட்டக்கத்தி'யில் நடித்த ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர்ராஜா சாருக்கு நான் பெரிய ரசிகன். அவர் இந்த படத்தில் இசையமைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
 நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள்,நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதட்டத்தோடு நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட இடம் கிடைக்கும். நான் சினிமாவுக்கு வந்த பின் உணர்ந்த விஷயம் இது. எல்லாவற்றுக்கும் நேரம் எடுத்துக் கொண்டு மனசில் இருந்தவற்றையெல்லாம் அழித்து விட்டு, புதிதாக யோசித்து உழைக்கத் தயாராக இருக்கிறேன். அப்படி பார்த்தால் இனி வரும் படங்கள் எல்லாமும் அப்படியான உழைப்பில்தான் இருக்கும்.
 எனக்கு உன்னதமான நேரம் இது. சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அந்தப் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே நடந்து கொண்டே வருவதால் இது நிச்சயம் சாத்தியப்படும்'' நம்பிக்கையாக முடிக்கிறார் தினேஷ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com