தமிழ்ப் பொண்ணுங்க எங்கே நடிக்க வர்றாங்க? சற்குணம்

""களவாணி', "வாகை சூட வா' இரு படங்களுமே தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும்''ன்னு என் உதவியாளர்கள் சொல்லுவார்கள். எப்போதாவது யோசித்து பார்த்தால் ""அட ஆமால்ல...''ன்னு எனக்கும் தோன்றும்.
தமிழ்ப் பொண்ணுங்க எங்கே நடிக்க வர்றாங்க? சற்குணம்
Updated on
3 min read

""களவாணி', "வாகை சூட வா' இரு படங்களுமே தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும்''ன்னு என் உதவியாளர்கள் சொல்லுவார்கள். எப்போதாவது யோசித்து பார்த்தால் ""அட ஆமால்ல...''ன்னு எனக்கும் தோன்றும். சரி தனுஷுக்காகவே ஒரு கதை பிடிப்போம் என நான் பிடித்த கதைதான் இந்த "நய்யாண்டி.' தேடிப் போய் கதை சொன்னால், ""நேரம் இல்லை ஸ்கிரிப்ட் கொடுங்க'' என்றார். முதல் நாள் ஷூட்டிங் வரும் போது ""ஸ்கிரிப்ட்டை மூணு தடவை படித்து விட்டேன். ரொம்பவே நல்ல கதை''ன்னு ஊக்கம் தந்தார். "நய்யாண்டி' படத்துக்குள் தனுஷ் வந்த கதையை சொல்லி சிநேகத்துடன் கரம் பிடிக்கிறார் இயக்குநர் சற்குணம். "வாகை சூட வா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது பெற்றுப் பெருமை சேர்த்தவர்.
 
 விமல் தவிர்த்து முதல் முறையாக தனுஷுக்கு கதை. பாலிவுட் வரைக்கும் பாராட்டுகள் வாங்கி விட்டார்.... தனுஷ் - சற்குணம் கூட்டணியிடம் என்ன எதிர்பார்க்கலாம்...?
 "களவாணி'யில் நீங்கள் பார்த்த அதே எண்டர்டெயினர்தான். கும்பகோணத்தில் குத்து விளக்கு கடை வைத்திருக்கிற பையன் சின்னவண்டு. அதே ஏரியாவில் பல் டாக்டருக்கு படிக்கிற பொண்ணு வனரோஜா. இவர்களுக்கு இடையில் வந்து போகிற காதல்தான் கதை. என்னடா இவன் "பளீச்'சென கதையை சொல்லி விட்டான் என எண்ண வேண்டாம். இந்த காதலுக்குள் இருக்கும் சின்னச் சின்ன ஸ்பரிசங்கள், கிண்டல், இருட்டுக்குள் இருக்கும் மெழுவர்த்தி ஒளிர்வது போல இருக்கும் அன்பு எல்லாமே கலந்து நிற்கும் போது, இந்த காதல் வேறு ஒரு வடிவத்தில் வந்து நிற்கும். தனுஷ் சார் எப்போதுமே "ஆடுகளம்', "மரியான்' மாதிரி சீரியஸ் கதைகளிலேயே இருக்கிறார். சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் இருந்த தனுஷ் வேறு. அவரிடம் எது எதையோ எதிர்பார்த்து கடைசியில் அவரை சீரியஸ் கலைஞனாக மாற்றி விட்டோம். நெருங்கிப் பழகி பார்த்தால் அவரிடம் இன்னும் காலேஜ் போகிற பையனின் குறும்பு இருக்கிறது. நெடும் நேரம் காத்திருந்து காதலிக்கும் பக்குவம் இருக்கிறது. அதையெல்லாம் அப்படியே எடுத்து வைத்திருக்கிறார் தனுஷ்.
 நீங்க வித்தியாசமாக எடுத்த "வாகை சூட வா' படம் தோல்வி அடைந்ததால்தான், மீண்டும் கமர்ஷியல் பாதையா....? கிளாசிக் ஃபில் கொடுக்கும் இயக்குநர்கள் எல்லாம் கமர்ஷியலுக்கு திரும்பி விட்டால் தமிழ் சினிமா என்னவாகும்....?
 என்னை நானே திரும்பிப் பார்க்க ஒரு தருணம் வேண்டுமே... சினிமாவுக்கு நான் கொண்டு வந்த வேட்கையை மற்றவர்களுக்கு திரை போட்டு காட்ட வேண்டுமே. அதற்காகத்தான் "வாகை சூட வா' மாதிரி கதைக்குள்ளும் இருக்கிறேன். ""ஒரே மாதிரியான சினிமாதான் இவருக்கு எடுக்கத் தெரியும்''ன்னும் எங்கேயாவது டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து யாராவது பேசி விடக் கூடாது. சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டியது ரொம்பவே அவசியமானது. அது ஓர் எக்ஸ்பரிமெண்ட். உண்மையில் "வாகை சூட வா' மாதிரியான படங்களைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நாம்தான் தயங்குகிறோம். "வாகை சூட வா' தோல்விப் படம் என்று சொல்லுறீங்க.. அப்படி எதுவும் அதில் இல்லை. லாபம் வேண்டுமானால் குறைவாக கிடைத்திருக்கலாம். சினிமாவில் அதைத் தவிர்க்க முடியாதே.... 10 ரூபாய் போட்டு விட்டு 40 ரூபாயை எதிர்பார்த்து அந்தப் படத்தை எடுக்கவில்லை. அவ்வளவுதான். சில இடங்களில் நல்ல சினிமாக்கள் பக்கம் ஒதுங்கியே ஆக வேண்டியது ஒரு படைப்பாளிக்கு இருக்கிற பொறுப்பு. அப்படி இல்லாமல் இருந்திருந்தால் ஸ்ரீதர், பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன் மாதிரியான இயக்குநர்கள் நமக்கு கிடைத்திருப்பார்களா? அதற்காக "களவாணி'யும், "நய்யாண்டி'யும் நல்ல படங்கள் இல்லைன்னு சொல்லி விட முடியாது. இதிலும் சில விஷயங்கள் இருக்கின்றன. அதை சினிமாவின் வர்த்தக சமரசங்களுக்கு உட்பட்டுத்தான் கொடுக்க முடியும்.
 படத்துக்கு ஒப்பந்தமான நாளில் இருந்த நஸ்ரியா நிச்சயம் வேறு மாதிரி... இப்போ அவங்க லெவல் வேறு... என்ன மாதிரியான மந்திரக்கோல் நஸ்ரியாவிடம் இருக்கு..?
 தனுஷின் கால்ஷீட்டுக்குக் காத்திருந்தது மாதிரி நஸ்ரியாவுக்கும் காத்திருந்தேன். தஞ்சாவூர், கும்பகோணம் பக்கம் வந்து பார்த்தால், நஸ்ரியா மாதிரி ஆயிரம் பெண்களைப் பார்க்கலாம். அது ஒரு தனி அழகு. டெல்டா மாவட்டங்களைச் சுற்றி நடக்கிற கதை என்பதால், எனக்கு நஸ்ரியா முகம் தேவைப்பட்டது. முதலில் கும்பகோணத்து பக்கம் எதாவது ஒரு பொண்ணைப் பிடித்து நடிக்க வைக்கலாம் என்பதுதான் திட்டம். தமிழ் பொண்ணுங்க எங்கே நடிக்க வர்றாங்க? அதனால்தான் நஸ்ரியா பரீட்சை எழுதி முடிக்கிற வரைக்கும் காத்திருந்தேன். நான் நஸ்ரியாவை பார்த்த போது, தமிழில் ஒரே ஒரு படம்தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் இப்போ அவங்க இருக்கிற இடம் வேறு. "ராஜா ராணி' படம் இன்னும் ஒரு படி மேலே கொண்டு போய் சேர்த்திருக்கிறது. கொஞ்சம் சமந்தா, கொஞ்சம் நயன்தாரா கலந்த கலவை மாதிரி இருக்காங்க... பெரிய இடத்துக்கு வருவார் என்ற கணிப்பு எனக்குள் இருந்தது. ஆனால் இரண்டே படங்களில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருப்பது ரொம்பவே ஆச்சரியமானது. நஸ்ரியாவின் கண்களை உற்றுப் பாருங்கள். உள்ளுக்குள் எப்போதும் ஒரு சோகம் இருக்கும். இப்போது உள்ள நடிகைகளில் அப்படிப்பட்ட கண்கள் யாருக்கும் இல்லை.
 எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் ஒரே ஒரு குறும்படத்தை தூக்கி வந்து பெரிய சக்சஸ் தர கூட்டம் அதிகமாகி விட்டது.... உங்களை மாதிரி சீனியர் இயக்குநர்கள் இதை எப்படி பார்க்கிறீங்க..?
 எல்லாருக்கும் வாழ்த்துகள்! என்னை சீனியர்ன்னு சொல்லி வேறு இடத்தில் வைக்க வேண்டாம். இது எனக்கு மூன்றாவது படம்தான். இன்னும் கடந்து போக வேண்டியது நிறைய இருக்கிறது. எந்தப் படமாக இருந்தாலும் நல்ல விஷயமாக இருந்தால், அதற்கு ரசிகர்களின் சல்யூட் எப்போதும் உண்டு. நிறையப் பேரை திருப்தியாக வைத்திருக்க வேண்டிய இடம் சினிமா. அதற்காக அழியாத கலை வடிவம் மாதிரி கால காலத்துக்கும் நிற்கிற படத்தை எடுத்துக் கொண்டிருக்க முடியாது. கொஞ்சம் பொழுதுபோக்க வருகிறவர்களும் இங்கே இருக்கிறார்கள். நானும் அந்தப் பக்கம் ஒரு கால்... இந்தப் பக்கம் ஒரு கால் என வைத்துக் கொண்டு இருக்கிறேன். "களவாணி' இல்லையென்றால் "வாகை சூட வா' இல்லை. "நய்யாண்டி' வந்ததும் மாற்று முயற்சியில் இறங்கலாம். இன்னும் ஒரு நடிகரைப் பாட வைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. 20 மும்பை டான்ஸர்களை அழைத்து வந்து ஆட வைக்க வேண்டி இருக்கிறது. என்னதான் குழைத்து குழைத்து காமெடி கொடுத்தாலும், படத்தில் ரிலாக்ஸýக்கு இடமே இல்லைன்னு சொல்கிற வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கு... வெற்றி பெற்றால் ஆயிரம் காரணம் சொல்லி ரசிக்கலாம். தோற்று விட்டால் என்ன காரணம் சொல்லுவது...? அதுதான் சினிமா. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com