ஊனம் உள்ளத்தில் இல்லை!

ஊனம் என்பது உடலில் இருக்கலாம், உள்ளத்தில் அல்ல. இதை வெளிப்படுத்தும் வகையில், குன்னூரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று பார்வையாளர்களை மலைக்க வைத்தது.
ஊனம் உள்ளத்தில் இல்லை!
Updated on
2 min read

ஊனம் என்பது உடலில் இருக்கலாம், உள்ளத்தில் அல்ல. இதை வெளிப்படுத்தும் வகையில், குன்னூரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று பார்வையாளர்களை மலைக்க வைத்தது.
 "நீலகிரி கலாசார சங்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளாகின்றன. அதனுடைய 138-ஆவது நிகழ்ச்சியாக, "வாழ்க்கையின் புதிய அர்த்தம்' என்ற தலைப்பில் தில்லியிலுள்ள "எபிலிட்டி அன்லிமிடெட் பவுண்டேஷன்' அமைப்பினர் நிகழ்த்திய 2 மணி நேர நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு புதிய உலகத்திற்கே பார்வையாளர்களை அழைத்துச் சென்றது.
 கால்கள் செயலிழந்து சக்கர நாற்காலியில் மட்டுமே வலம் வருகிறவர்களுக்குத் துணையாக, வாய் பேச முடியாத, காது கேட்காத இளம்பெண்களும் இணைந்து மேடையில் நிகழ்த்தியது நடனம் என்பதை விட அற்புதம் எனலாம்.
 சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே சூபி நடனம், பரதம், யோகாசனம், தற்காப்புக் கலைகள், ஜுகல் பந்தி, குருúக்ஷத்திரப் போர், வந்தே மாதரம், ஆஸ்கர் விருது பெற்ற ஜெய்ஹோ பாடல் உள்ளிட்டவற்றை எவ்விதத் தயக்கமோ, குழப்பமோ இல்லாமல் மேடையில் நிகழ்த்திக் காட்டினர்.
 இவர்களது சக்கர நாற்காலிகள் சுழன்ற வேகம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியப்படாதீர்கள்- மணிக்கு 150 கி.மீ.
 வண்ண உடைகளில் சக்கர நற்காலிகளில் அமர்ந்தபடியே, பரதம் ஆட பாதங்களும், ஜதிகளைக் கேட்க காதுகளும் தேவையில்லை என்பதை வெளிக்காட்டும் வகையில் ஆடிய பரதமும், மகாபாரதத்தின் குருúக்ஷத்திரப் போர்க் காட்சிகளும், ஜுகல் பந்தி நடனமும் நிகழ்த்திய இவர்களைக் கண்டு அரங்கத்திலிருந்தவர்கள் ஆடிப் போயினர் என்றால் அது மிகையில்லை.
 எபிலிட்டி அன்லிமிடெட் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறுவனரான சலாவுதீன் பாஷா பின்லாந்து நாட்டில் வசித்தவராவார். அங்கிருந்தபோது, இஸ்தான்புல் நகரின் பிரபல நடனமான சூபி நடனத்தை அங்குள்ள மாற்றுத் திறனாளிகள் ஆடுவதையும், சக்கர நாற்காலிகளில் சர்வ சாதாரணமாக வந்து செல்வதையும் பார்த்திருக்கிறார். அதைப் போல, இந்தியாவிலுள்ள கலைத்திறன் உள்ள மாற்றுத் திறனாளி இளைஞர்களை ஒருங்கிணைத்து புதுமையான நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டு தில்லி வந்திருக்கிறார் அவர்.
 இவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தில்லியில் ராஷ்டிரபதி பவனில் இவர் நடத்திய நிகழ்ச்சிகளுக்காகவே தொடர்ந்து 3 முறை ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார். யதார்த்தமான இந்நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்திலும், லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
 இந்நிகழ்ச்சி தொடர்பாக அவரிடம் கேட்டோம்:
 ""மாற்றுத் திறனாளிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதத்திலும், புதுமையை உருவாக்கும் வகையிலும், மக்களின் அங்கீகாரத்தை அவர்களுக்குப் பெற்றுத் தரும் வகையிலும்தான் இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
 சக்கர நாற்காலியைச் சார்ந்து வாழாமல், சக்கர நாற்காலியையே தங்களது திறமைக்கான ஆயுதமாக மாற்றிக்கொள்வது தான் இதில் வியப்பானது. சக்கர நாற்காலி என்பது ஊனமுற்றவர்களின் சின்னமல்ல, அது அவர்களது திறமையை வெளிக்கொணரும் சின்னம்'' என்றார் நம்பிக்கையுடன்.
 நீலகிரி கலாசார சங்கத்தின் தலைவர் பி.எஸ்.சுந்தர் கூறுகையில், ""நிற்கவே முடியாதவர்களிடமுள்ள மாற்றுத்திறனை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் வகையிலும், நீலகிரி கலாசார சங்கம் மாற்றுத் திறனாளிகளுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாற்றுத் திறனாளிகளிடையே மட்டுமல்லாமல் மக்களிடத்திலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்'' என்று குறிப்பிட்டார்.
 வெலிங்டன் எம்ஆர்சி ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் சுரேஷ்குமார் கூறுகையில், ""இந்நிகழ்ச்சியைக் காண ராணுவ வீரர்களையும் அழைத்து வந்துள்ளதாகவும், ராணுவ வீரர்களின் மத்தியில் நல்லெண்ணங்களை உருவாக்குவது நாட்டிற்கும் ஏற்புடையது என்பதால் இத்தகைய நிகழ்ச்சிகள் தான் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்'' என்றும் கூறினார்.
 ஊனம் உடலில் இருந்தாலும், உள்ளத்தில் இல்லை என்பதால், ஊனத்தை வென்றால் வானத்தையே வசப்படுத்தலாம் என்பதை அனைவருக்கும் உணர்த்துவதைப் போல, திறமையுடன் தன்னம்பிக்கையும் இணைந்து மாற்றுத் திறனாளிகள் குன்னூரில் நடத்திய நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பிரமிப்பை மட்டுமின்றி, மனதின் ஓரத்தில் ஒரு வலியையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com