காலரி முழுக்க கணேசர்!

விற்பனைக்கு ஓவியர்களின் சித்திரங்களை வாங்கிக் காட்சிக்கு வைக்கும் ஆர்ட் காலரிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஓவியக் கண்காட்சியும் நடத்தி, ஓவியம் வரைவதற்கு இளையதலைமுறையை இருகரம் நீட்டி வரவேற்கும் காலரியைப் பார்த்ததில்லை.
காலரி முழுக்க கணேசர்!
Updated on
2 min read

விற்பனைக்கு ஓவியர்களின் சித்திரங்களை வாங்கிக் காட்சிக்கு வைக்கும் ஆர்ட் காலரிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஓவியக் கண்காட்சியும் நடத்தி, ஓவியம் வரைவதற்கு இளையதலைமுறையை இருகரம் நீட்டி வரவேற்கும் காலரியைப் பார்த்ததில்லை. சென்னை ஷெனாய் நகர் எட்டாவது குறுக்குத்தெருவில் நுழைந்தவுடனே வலப்புறம் இருக்கும் ஐபா ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் கூடத்துக்குள் நுழைந்தால் விதவிதமான விநாயகர்கள்.
 நமக்குப் பத்திரிகைகள் வாயிலாக நன்கு தெரிந்த மதன், கேஷவ், மாருதி, அரஸ், ம.செ., வேதா போன்ற ஓவியர்கள் வரைந்த வண்ணமயமான பிள்ளையார்கள் சுவரெங்கும். அவரவர் கற்பனையைப் பிரதிபலிக்கிற மாதிரி ஒவ்வொன்றும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. மதன் வழக்கம்போல் உதட்டில் புன்னகையை வரவழைக்கிறார். (அப்பா பிள்ளையார் பொம்மையைத் தூக்கிக்கொண்டு போக, மகன் குடையைப் பிடித்துக்கொண்டு பின் தொடர்கிறான்) பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஓவியக் காட்சியை செப்டம்பர் 30 வரைதான் வைத்திருப்பதாக இருந்ததாம். ஆனால் நிறையப் பேர் பார்க்க வருவதால் இன்னும் ஒரு பதினைந்து நாட்களுக்குக்கூட நீட்டிக்கப் போகிறார்களாம்.
 துவக்கத்திலேயே ஓவியர் இளையராஜாவின் ஓவியம் நம்மை அப்படியே கட்டிப் போட்டுவிடுகிறது. தத்ரூபம் என்றால் அப்படி ஒரு தத்ரூபம். (இளையராஜா சென்ற ஆண்டுக்கான சிறந்த பத்திரிகை ஓவியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்றவர்) தொடர்ந்து வேதா, ராமன், டெக்ஸ்டைல் டிசைனர் ராமச்சந்திரன், அரஸின் சீடர் பழனிசாமி, மாக் ரத்னராஜ், கேஷவ், மாருதி, ராம்சுரேஷ் (அக்ரிலிகில் வரைந்து கத்தியால் செதுக்கியது), என்.எஸ். மனோஹர், ஜி.ஜெயராமன் (கண்ணாடி மேல் கம்ப்யூட்டரில் வரைந்த டிஜிடல் பிள்ளையார்), அரஸ், எஸ். ஜெயராஜ் (குறும்படத் தயாரிப்பாளர், நிறைய நற்பணிகள் செய்வதும், கிராமங்களுக்குக் குடிநீர் ஏற்பாடு செய்வதும் இவர் பொழுது போக்கு), கும்பகோணம் செங்குட்டுவன், அமிருதரஞ்சனி (ஐபா டைரக்டர், நன்றாகப் பாடவும் செய்வார்), இப்போது டிமாண்டில் இருக்கும் சிவபாலன் (தில்லியில் பரிசு கூட வாங்கினார்), ராஜகுமார் ஸ்தபதி, மோகனசுந்தரம் (அனிமேட்டர் கரியால் வரைந்த கரிமுகன்), ராஜா மகேஷ், அசோக் ரஞ்சித் என்று பார்க்கிற திசை எல்லாம் பிள்ளையார்தான். சிவபாலன் ஓவியத்தில் விநாயகருக்கு இரு புறமும் அழகான ஆடுகள் நிற்பது யதார்த்தமான கற்பனை. தொண்ணூறு சதவிகிதம் அக்ரிலிக் என்றால், மீதிதான் வாட்டர்கலர் ஓவியம். பி.ஆர். ரவியின் ஒரே ஒரு மெட்டல் ரிலீப். அதிலும் அழகு கொஞ்சும் பிள்ளையார். கலைப் படைப்பைக் காசு கொடுத்து வாங்க விரும்பும் நடுத்தரக் குடும்பம், வாங்கி வந்து வீட்டில் மாட்டும் அளவுக்குத்தான் விலை இருக்கிறது.
 மதன், கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன், கிரேசி மோகன், கேஷவ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி என்று துவக்க தினத்தன்று கலக்கலான வி.ஐ.பி-க்கள் வந்திருந்து ஓவியக் கண்காட்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டார்களாம். .
 மகள் அமிருதரஞ்சனியும், மகன் குருபரனும் ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால், கல்லூரிப் படிப்பு முடித்த அவர்களின் பொறுப்பிலேயே காலரியை விட்டுவிட்டார் அம்மா அனுராதா கே. மூர்த்தி. அவர்களும் ஓவியத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
 கும்பகோணம் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் திறமை நம்மை அசத்துகிறது. அத்தனை அழகாக வரைகிறார்கள் என்று பிரமிப்புடன் பாராட்டுகிறார் அனுராதா மூர்த்தி. தங்கள் செலவிலேயே அவர்களில் பலரை சென்ற மாதம் சென்னைக்கு அழைத்து வந்து ஓர் ஓவியக் காட்சி நடத்தினாராம். மாதிரிக்கு ஓர் ஓவியத்தைக் காண்பித்தார். புகைப்படமா, ஓவியமா என்று கண்டுபிடிப்பது
 கஷ்டம்
 இந்த காலரியில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக ஒர்க் ஷாப் நடத்தப்படுவது ஒரு புதிய அம்சமாகத் தெரிகிறது. (ஒரு டாக்டர்கூட வந்து கலந்துகொண்டாராம்) அசோக் ரஞ்சித் எம்.ஓ.பி. வைஷ்ணவாவில் ஓவியம் கற்றுக்கொடுப்பவர். அவர்தான் இங்கும் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். இவையெல்லாம் ஓவிய காலரியைத் தனித்துவமாகக் காட்டும் கூடுதல் பணிகள். ""அவர்களின் கற்பனையை வளப்படுத்த இவை எல்லாம் தேவை என்று நாங்கள் நம்புகிறோம்'' என்கிறார் அனுராதா மூர்த்தி.
 கொஞ்சம் மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய காலரி இது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com